Thursday, February 12, 2015

மின்னலைப் போன்ற கிளர்ச்சிகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் ஐந்து)



அன்பு ஜெயமோகன்,
          
    அறிவு மட்டுமே விரிவடைந்திருக்கும் ஒருவனின் தனிமைக்குள் குறிப்பிட்ட காட்சியே பெருவடிவாய் அமர்ந்திருக்கும். அக்காட்சியைத் தாண்டி ஒருபோதும் அவன் செல்வதில்லை. அறிவோடு உள்ளமும் விரிவடைந்திருக்கும் ஒருவனின் தனிமைக்குள் பன்முகமான காட்சிகளைக் காணலாம். முதலில் வண்ணங்களாகத் தெரியும் காட்சிகள் போகப்போக நிறமற்றும் போகின்றன. வெறும் அறிவின் காட்சியால் சலித்துப்போன ஒருவராலேயே உள்ளத்தின் காட்சிகளை நோக்கி நகர இயலும். அறிவின் விரிவு இருப்பைப் பிரம்மாண்டப்படுத்த, உள்ளத்தின் விரிவோ அதை மிகச்சிறிதாக்குகிறது. நூல்களால் பெற்றிருந்த அறிவின் தனிமையிலிருந்து உள்ளத்தின் தனிமைக்குப் பெயர்ந்துவிட்ட தருமனின் நிலையும் அத்தகையதுதான்.
          
     நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டே இருக்கும் கடலின் அலைகளில் கால் நனைக்கும் குழந்தைகளுக்குத் தவிப்பு இருப்பதில்லை; உவகையே பொங்குகிறது. அந்த உவகையை அவர்கள் அறிந்திருப்பதுமில்லை. ஏனென்றால், அவர்கள் உவகையாகவே மாறிப்போகின்றனர். குழந்தைமைக்கு ஏங்கும் நாம் பெரியவர்களாக இருப்பதைத் தவிர்த்துவிட நினைப்பதேயில்லை. மாறாக, குழந்தைமை நம்மை வந்துசேர வேண்டும் என ஆசைகொள்கிறோம். எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? உவகை என்பதுதான் என்ன எனும் தருமனின் வினாவும் அறிவு மற்றும் புலனின்பங்களோடு தொடர்புடையதாகவே அமைகிறது. புதிய நூலும், ஆசிரியரும் தரும் கிளர்ச்சி சில கணங்களில் வடிந்துவிடுவதாக அவன் குறைபட்டுக்கொள்வதும் நிலைத்த ஒன்றின்மீதான அவன் எதிர்பார்ப்பையே உணர்த்துகிறது. நூல்கள் மட்டுமே அறிந்திருந்த தருமனைப் போன்றவர்களே நாங்களும். அங்குதான் ‘யானைகள் மேய்ந்து சென்ற புல்வெளி’ எனும் உருவகம் முக்கியமானதாகிறது.
      
     சமீபமாய் பேருந்து நிலையத்தின் ஓரத்தில் படுத்திருந்த முதிய பெண்மணி ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. நான் பார்த்தபோது உடம்பு முழுக்க சேலையால் மூடியிருந்தார். ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி இருந்தார். அந்தக்கையைப் பார்த்த கணத்தில் அளவுகடந்த பரிதாப உணர்வுக்கு ஆளானேன். சிறுதொகை ஒன்றை அக்கையில் வைத்தபோது சேலையை விலக்கி முகம் காட்டி சினேகமாகச் சிரித்தார். உள்ளுக்குள் ஒருவிதக் கிளர்ச்சி எழுந்தது. ஆனால், அவரைக் கடந்ததும் அக்கிளர்ச்சி காணாமல் போனது. பிற்பாடு, மனதுக்குள் பலமுறை அந்நிகழ்வைக் கொண்டுவந்தபோதும் முந்தைய கிளர்ச்சி திரும்ப வரவே இல்லை. ஒன்றைப் புரிந்து கொள்ள முடிந்தது. அகக்கிளர்ச்சிகளை திரும்பவும் மீட்டுவிட முடியாது. கிளர்ச்சிகள் மின்னலைப் போல. அக்கணத்தில் மட்டுமே அவை உண்மையாய் இருக்கின்றன.

வெண்முரசைக் காட்டிலும் அது ஒளித்து வைத்திருக்கும் தொல்கதைகளின் திரட்டே முக்கியமானதாகப் படுகிறது. எரிகடன் குறித்த கதையின் ஆழம் வெகு அதிகம். அசுரர்கள் எரிகடனின் மூன்று நெருப்புகளும் நிகரல்ல; அதேபோன்றவைதான் தேவரின் எரிகடனின் நெருப்புகளும். சமமான எரிகடன் நெருப்புகளைக் கொண்டிருக்கும் ஒருவன் அசுரர், தேவர் நிலை கடந்தவனாகத்தான் இருக்க முடியும் எனும் சூட்சுமத்தையே நான் அதில் காண்கிறேன். மண்ணுலக வாழ்வின் மீதான அளவுகடந்த காமமே சமமற்ற சுடர்களைக் கொண்ட அசுர, தேவ நிலைகளாகின்றன. நல்ல, கெட்ட எனும் பண்புகளாகவும் அவற்றைக் கொள்ளலாம். நம்மைப் போன்றவர்கள் பெரும்பாலும் அசுர, தேவ நிலைகளிலேயே உழன்று கொண்டிருக்கப்போகிறோம் என்றும் தோன்றுகிறது.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்