அன்பிற்கினிய ஜெ,
தோள்வலிமை கொண்டவன் போரிடலாம்,படைக்கலம் நடத்தலாம்.ஆனால் மானுடர்களை இணைப்பவனே நாடாள்கிறான்,சக்ரவர்த்தியாகிறா
எத்தனை வலிமையான மானுட நீதியை எளிய வார்த்தைகளில் கூறிவிட்டீர்கள்.தருமனின் பாத்திர வலிமை இன்று விஸ்வரூபமடைகிறது.ஜெ சார் இன்று காலை மிக அற்புதமான வெளிச்சம் தந்தது வெண்முகில் நகரம்.தர்மனின் ஒவ்வொரு சொல்லும் என் மனதில் ஊடுருவி கண்களை கலங்க வைத்தன.அறம் சிறுகதைகளை வாசித்த போதிருந்த நிலையிலிருக்கிறேன்.உடல் வலிமைகளும்,தந்திரங்களும்,வஞ்
மனதில் வெறுமை,சஞ்சலம்,நட்பின் ஏமாற்றம்,உறவுகளின் கடுமை,சுயநலத்தின் உச்சம்,விரும்பிய நேசித்த ஒரு அற்புத உறவின் அலட்சியம், என்னை பயன்படுத்திக் கொள்ளும் மனித மனங்கள் ....இப்படி ஓர் மனச் சோர்வில் ,எனக்கு விதிக்கப்பபட்ட அநீதியை எண்ணி கலங்கிய வேளையில் யுதிஷ்ட்ரனின் வார்த்தைகளாக தங்கள் எழுத்துகள் என்னை உலுக்கின.என்றும் வெல்லும் மானுட அறங்களின் மீதான நம்பிக்கையை மீட்டளித்தன.மிக அற்புதமான அத்தியாயம் இன்றைய வெண்முரசு.
பொதுவாக உங்கள் அறம் சார்ந்த எழுத்துகளே எனை ஈர்ப்பவை.சில நாட்களாக ரொமான்டிக்காக சென்ற பாதை சட்டென இன்று மிக உயரத்தைத் தொட்டது.பாண்டவர்களில் வலிமையானவன் தருமனே என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும் அதை விதுரர் உணரும் தருணம்,தருமன் உணர்த்தும் மொழிகள் ,உலகிற்கு அறத்தினை ஓங்கி உணர்த்தும் தருணம்.
இதுவரை தருமன் பற்றி அலட்சியமாக,தைரியமற்றவனாக ஏளனமாய் எண்ணிய அனைவரும் அவனது ஷத்ரிய வலிமையை ,மாறா அறந்தின் பெரும் சக்தியை உணர்வர்.யதார்த்த வாழ்வில் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவனை,அதை வலியுறுத்துபவனை ஏமாளியாகவே கருதுகின்றனர்.(ஜெ சார் ஆண்பால் எழுத்து தான் வருகிறது.பொதுப்பாலாக மாற்றத் தெரியவில்லை)
ஆனால் இறுதியில் அறம் சார்ந்தவனின் வலுவே எல்லாவற்றையும் விட மேம்பட்டது,உயரியது என தருமனின் மொழிகள் உரைப்பது மனதை அற்புத அமைதியில் ஆழ்த்தியது.
தங்களை நிறுவிக் கொள்ளவே சொற்களனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.அவர்களின் கீழ்மைகளனைத்தையும் நேர்விழி கொண்டு நோக்குகிறேன் என தருமன் உரைப்பது எத்தனை தெளிவை காண்பிக்கின்றன.மனிதர்களின் அத்தனை பாசாங்குகளும்,வேடங்களும் உண்மைக்கு முன் உடைந்து விடுகின்றனவே.
மனமெங்கும் நிறைகிறது அறத்தின் வாசம்.பிடிவாதமாக உண்மைகளின் பக்கம் நிற்பது எப்பொழுதும்
கோழையென்றும்,ஏமாளியென்றுமே பெயரையளிக்கும்.இதனை அனுபவித்த வேளைகளில் மனம் நொந்திருக்கிறேன்.ஆனால் இறுதி வெற்றி,அமைதி என்பது தருமமே என்று அறியும் வேளை எத்தனை அற்புதம்.
மனதை கரைய வைத்த எழுத்து.என்னை ஆழ்ந்த அமைதிக்குள் வழிநடத்திய எழுத்து.
நன்றி
மோனிகா மாறன்.
\
அன்புள்ள மோனிகா
தர்மன் போன்ற அனைவருமே பலவகையான தத்தளிப்புகள் வழியாகவே அங்கே வந்திருப்பார்கள். இங்கே பேசுவதையே அவன் இடும்பவனத்திலும் பேசினான். அங்கே தன்னிரக்கத்துடன். இங்கே ஆண்மையுடன். அந்தவேறுபாடு அவன் ஒரு சக்கரவர்த்தினியை மணந்தபின் வந்தது
ஜெ