Tuesday, February 10, 2015

நபும்சகர்



அன்புள்ள ஜெ,

நம் திரைக்கதைகளில் தவறாமல் இடம்பெறும் ஓர் அம்சம், விதந்தோதப்பட வேண்டியவரின் தியாகம். சமூகத்தினால் ஏதேனும் ஒரு வகையில் வெறுக்கப்படும் அல்லது மாற்று நோக்கில் பார்க்கப்படும் ஓர் பாத்திரத்தை பார்வையாளர்கள் மதிப்புடன் பார்க்க செய்ய, அப்பாத்திரம் கதாநாயகனுக்காக யாருமே செய்யாத ஓர் தியாகத்தை செய்வதாக எழுதப் பட்டிருக்கும். காலத்திற்கு ஏற்றார் போல் இந்த பாத்திரங்கள் மாறிக் கொண்டே வரும். இவ்வுத்தி பெரும்பாலான படங்களில் இவை பார்வையாளர்களிடையே அத்தகைய அனுதாபம் கலந்த மரியாதையை அந்த பாத்திரங்களுக்கு (மட்டும்) பெற்றும் தந்திருக்கிறது.

ஆனால் தான் செய்யும் தொழில் மூலம் மட்டுமே, அந்த கதாபாத்திரம் அதன் இயல்வு நிலையில், அதாக மட்டுமே இருக்கும் போது கூட அதன் மீது பெரும் மதிப்பை ஏற்படுத்துவது என்பது சாதனை தான். அதுவும் ஓர் இருபாலினத்தவர் அக்கதாபாத்திரமாக இருக்கும் போது. வெண்முகில் நகரத்தின் நான்காவது அத்தியாயத்தில் அணி செய்யும் சமயராக மூன்று இருபாலினத்தவர் வருகின்றனர். இவர்கள் எங்குமே நம்மிடம் அனுதாபம் கோரவில்லை. அவர்கள் பிற மாந்தர்களால் அவமதிக்கப் படவுமில்லை. 

ஜெ மிக நுட்பமாக இதைக் கையாண்டுள்ளீர்கள். தர்மன் மிருஷையை எப்போதுமே அவர் என்று மரியாதை விகுதியுடன் தான் அழைக்கிறான். ஆனால் மிருஷை தன்னுடன் வந்த காருஷையையும், கலுஷையையும் தன் மாணவிகள் என பெண்களாகவே அறிமுகம் செய்கிறாள். நானும் பார்த்திருக்கிறேன், ஆணாக இருந்து தன்னை பெண்ணாக உணரும் இருபாலினத்தவர் அவரை பெண்ணாக அழைப்பதையே விரும்புகிறார். கூர்மையான அவதானிப்பு.

மாருதருக்கும், அதிரதருக்கும் எவ்விதத்திலும் குறைந்தவள் அல்ல மிருஷை. தன் தொழிலான அணி புனைதல் மூலம் அவளும் அவளுக்கான ஞானத்தை அடைந்தவள் தான். தருமனுக்கே தெளிவு தருகிறாள். அவள் புன்னைகையை நீங்கள் சொன்ன விதம், "மானுடரனைவரையும் விரும்புபவர்களுக்குரிய புன்னகை அது". என்ன வரிகள்!!!  அவள் அணி செய்வதைப் பற்றி சொல்வது, "ஆகவே உடலில் இருந்து அக்கணத்திற்குரிய உடலை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதை அடைபவருக்காக அதை சமைக்கவேண்டியிருக்கிறது. அக்கணம் திகழும் உங்களை முழுமையாக அது காட்டியாகவேண்டியிருக்கிறது. அணிசெய்வது அதற்காகவே” என்றார் மிருஷை. “இளவரசே, அணியென்பது என்ன? ஒரு தருணத்திற்காக உடலை மாற்றியமைத்துக் கொள்வது மட்டும்தானே? மரங்கள் மலரணிவது போல. காட்டெருதின் கன்னம் சிவப்பதுபோல. மலைகள் மேல் பசும்புல் படர்வதுபோல." என் நண்பன் சொல்வான், எதற்கு நாம் சிறப்பாக உடையணிந்து செல்கிறோமோ இல்லையோ மனைவியுடன் வெளியே செல்லும் போது சிறந்த வகையில் ஆடை அணிந்து தான் செல்ல வேண்டும் என்று. அந்த அணிபுனைதல் நம்மை அழகாகக் காட்ட அல்ல, நம்முடன் வருபவரின் முக்கியத்துவத்தை, அவருடன் நாம் இருக்கும் தருணத்தின் மதிப்பை நாம் உணர்ந்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தத் தான் என்பான். அதையே இன்று மிருஷையும் சொல்கிறாள். 

கடைசியில் தருமனிடம் இருந்து பார்த்தனை வெளிப்படுத்துமிடம் அபாரம். வெண்முரசு செய்த ஓர் சாதனை என நான் நினைப்பது பெரிதும் கவனிக்கப் படாத, கதையோட்டத்தில் ஓர் கமாவைப் போல் வந்து செல்லக் கூடிய  இரு பாத்திரங்களை கதை முழுவதும் உலாவ விட்டது. ஒன்று விசித்திர வீரியர், மற்றொன்று பாண்டு.

பெரும்பாலான வட இந்திய பகுதிகளில் திருநங்கைகள் ஓரளவு மரியாதையுடன் தான் நடத்தப்படுகிறார்கள். நமது இதிகாசங்களும் அவர்களை இழிவானவர்களாகச் சித்திரிக்கவில்லை என்றே கருதுகிறேன். அப்படியிருக்க தென்னிந்தியப் பகுதிகள் மட்டும் ஏன் அவர்களை இத்தனை தூரம் அவமதிக்கின்றன. ஏதேனும் வரலாற்றுக் காரணம் இருக்கிறதா? ஒருவேளை மாலிக்காபூர் படையெடுப்புகளும், அது தந்த அழிவுகளும் காரணமோ? 

மேலும் ஓர் கேள்வி, தாங்கள் இருபாலினத்தவர் என்ற சொல்லை பயன்படுத்தக் காரணம் என்ன? திருநங்கை என்ற சொல் மிகச் சமீபமான சொல் என்பதாலா?

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்



அன்புள்ள  மகாராஜன் அருணாச்சலம்

பழைய இலக்கியங்களில் இருபாலினங்கள் எதிர்மறையாகச் சுட்டப்படவில்லை. இயற்கையின் விந்தை எல்லாமே கடவுளுடன் அடையாளப்படுத்தப்படுவது ஒரு இந்து மனநிலை.

பும் என்ற வேர்ச்சொல் பாலடையாளத்தைக் குறிக்கிறது. பும்சவனம் என்ற சடங்கு முக்கியமானது. கருவில் உள்ள குழந்தைக்கு பாலின அடையாளம் இல்லை. அது பாலின அடையாளத்தை அடைவதற்காக  மூன்றாம் மாதத்தில் செய்யப்படும் சடங்கு பும்சவனம். பும்சலி என்றால் பெண்

 ந-பும்சக என்றால் பாலினமற்றவர்கள் என்று பொருள். நம்பும்சகர் என்ற சொல்லே அவர்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பாலற்றவர்கள் என்ற பொருளில். அதை இருபாலினத்தவர் என மொழியாக்கம் செய்தேன். மரபான தமிழில் நிகரான சொல் இல்லை. பேடி போன்ற வசைச்சொற்களே உள்ளன

ஜெ

*

ஜெ,



மிக்க நன்றி ஜெ. ஆம், பும்சவனம் சடங்கு பற்றி மழைப்பாடல் பேசுகிறது. துரியனுக்கும், தருமனுக்கும் அது நடக்கிறது. நபும்சகன் என்றே சிகண்டி சுட்டப்படுகிறான். ஏன் இதை இணைத்துப் பார்க்க எனக்குத் தோன்றவில்லை? ம்ம்ம் இன்னும் நெடுந்தூரம் வர வேண்டியிருக்கிறது... வந்து விடுவேன்!!!

இருபாலினத்தவர் - அருமையான மொழியாக்கம், சரியாகவும் சுட்டுகிறது. திருநங்கை என்பவர்கள் சரியாகச் சொல்வதென்றால் ஆணாக இருந்து பெண்ணாகத் தன்னை உணர்பவர்கள் மட்டுமே. பெண்ணாக இருந்து ஆணாகத் தன்னை உணர்பவர்களை அந்த சொல் சுட்டவில்லை. இருபாலினத்தவர் என்பதே இருவகையினரையும் ஒரே போன்று சுட்டுகிறது, எனவே அதுவே சரியான ஒன்றாக இருக்க முடியும்.

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.