Sunday, February 8, 2015

யுதிஷ்டிரன் தர்மனாதல்



இனிய ஜெயம்,

பாண்டு இறந்த அன்று, மாத்ரியின் குரல் கேட்டு விரையும் சகோதரர்களை தடுத்து, குந்தி மட்டும் முன்னே சென்று பார்க்கட்டும் என்கிறான் தர்மன்.

அன்று துவங்கி [த்ரௌதியுடனான கூடலுக்குப் பிறகு] இன்றுவரை தர்மனின் ஆளுமை  கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருவது  வாழ்வுக்கு இணையான அனுபவம் ஒன்றை வழங்குகிறது.

நேற்று திரௌபதி என்னதான் செய்தாள்? தர்மனை அவன் இயல்பால் அவன் யாரோ அதை அவனே கண்டு கொள்ள வைத்தாள. 

தர்மனின் கூந்தலை அளைந்து இது வேண்டாம் என்கிறாள். தர்மனும் விழையாதது அது. அந்த நிலை வேறு ஒருவனுக்கானது. அதற்க்கு தர்மன் எதற்கு? இந்த எல்லையில் துவங்கித்தான் தர்மனை தர்மனுக்கு காட்டுகிறாள் திரௌபதி.

இன்றைய தர்மனின் சொற்கள் மொத்தமும் மாறி வரும் உன்னதம் பெரும் ஷாத்ரம் ஒன்றின் சாட்சியம்.

கடந்த நாவல்களில் திருதாவும் , துரியனும் சில தருணங்களில் ஷாத்ர குணத்தை முன்வைத்து அறைகூவுகிறார்கள்.

தர்மன் நிகழ்த்துவதும் அறைகூவல்தான் .ஷாத்ரத்தின் கூர்மை கொஞ்சமும் மழுங்காத வாள்தான் அதுவும்.  நீதியை உரைகல்லாகக் கொண்டு தீட்டிய வாளதான் அதுவும்.

கருணையால் அறத்தால் மேலும் கூர்மை கொண்ட வாள்அது.
மண்ணில் ஒரு வைரம் உருவாக அது எத்தனை அழுத்தத்தை தாங்க வேண்டி உள்ளது? விதுரன் திருதா சார்பாகத்தான் கேட்கிறான் '' உனது நீதி பரிபாலனம் முன்பு பிள்ளைப் பாசம் என்னவாக இருக்கும்'',

தர்மன் பதில் ''“நான் மானுட உயிர்களுக்குரிய அவ்வெல்லையை கடப்பதை அன்றி பிறிது எதையும் இலக்காகக் கொள்ளவில்லை அமைச்சரே.''
ஆம் சத்ரியன் ஆகிய தர்மன் அவன் கடக்கவேண்டிய இலக்கை தெளிவாக அறிந்திருக்கிறான். அதை கண்டுகொள்ளவே நேற்றைய இரவு தர்மனை நகர்த்தி இருக்கிறது.

[இனிய ஜெயம்,

இக் கடித்ததை நேற்று இரவு ஒரு மணிக்கு எழுத்தத் துவங்கினேன். முதன் முறையாக என் லேப் டாப்பில் எதோ கோளாறு. ஒரு பத்தி எழுதுவதற்குள் நான்கு முறை ரீ ஸ்டார்ட் ஆகிவிட்டது. செல்லக் கோபம் கொண்டு, அன்பாக தட்டினேன். லாப்டாப் இனி தேறாது என்று சொல்லி விட்டனர்.  எண்ணியதை எண்ணியாங்கு முடிப்பவன் நான். நெட்  சென்ட்டர் வந்து இந்த மின் அஞ்சலை அனுப்புகிறேன் .]