Monday, February 23, 2015

ஒற்றைப்பெருஞ்சொல்லின் மீதான கடும்பித்து(வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்தொன்பது)





அன்பு ஜெயமோகன்,
         
வெண்முகில்நகரத்தின் பத்தொன்பதாம் அத்தியாயம் பெரும்பித்தின் உச்சம். அறிவின் துணைகொண்டு ஒருவனால் அவ்வத்தியாயத்தில் நுழையவே முடியாது. சொல்லப்பட்ட திசைகளின் வழியாக சொல்லப்படாத திசைகளைக் கண்டடையத் தவிக்கும் ஒருவனின் அகப்பித்து அது. அதன் காட்சிகளுக்குள் புகுபவனும் வெளியேறுபவனும் பித்தனாகவே இருக்கமுடியும். பித்தனன்றி ஒருவனாலும் அவ்வத்தியாயத்தில் நுழைந்துவிடவே முடியாது.
         
சொற்கள் இறைந்து கிடக்கின்றன. எனக்கான சொற்களைத் தேடிக்கொண்டே நகர்கிறேன். ஒவ்வொரு சொல்லும் தன் தனித்துவ ஒளியால் என்னைத் தடுமாறச் செய்தபடியே இருந்தன. சீராய் வரிசையாய் நகர்ந்து கொண்டிருக்கும் சொற்களில் புதுப்புது அர்த்தங்கள் ஒளிர்ந்து மறைந்தபடியே இருக்கின்றன. சொற்கள் வெவ்வேறாக இருந்தாலும் அதன் மூலம் ஏதோ ஒரு ஒற்றைப்பெருஞ்சொல்லாகவே இருக்க முடியும் என்றே நானும் நம்புகிறேன். எனக்கான ஒற்றைப்பெருஞ்சொல்லைக் கண்டடைந்து கொண்டால் போதும். அது நான் தேடும் சொற்களைத் தனக்குள்ளிருந்து வெளித்தள்ளிவிடும். உங்களுக்கான ஒற்றைப்பெருஞ்சொல்லில் இருந்து சொற்கள் தானாகக் கொட்டத்துவங்கிய அற்புதமே பத்தொன்பதாம் அத்தியாயம்.
         
விடுபட்டுவிட முடியாத பெரும்பித்திலிருந்து வெளியேற கவிதையும், ஓவியமும், இசையும், நடனமுமே துணையாய் அமைகின்றன. பெரும்பித்தர்களே சிறந்த கலைஞர்களாக இருக்கின்றனர். பெரும்பித்தே ஒருவனை அவனின் அடையாளங்களிருந்து விலக்கி அலைக்கழிக்கிறது. அவ்வலைக்கழிப்பில் திகைக்கும் ஒருவன் கலைகளின் வழியாகவே அதிலிருந்து வெளியே வருகிறான். உங்களுக்கான ஒற்றைப்பெருஞ்சொல் தரும் அதிகப்படியான அலைக்கழிப்பாலேயே அதற்கும் உங்களுக்குமான உறவை உங்களால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது. அவ்வுறவை உணர்ந்த கணமே அப்பெருஞ்சொல்லாகவே மாறும் நீங்கள் எவ்விதத் தீர்மானமும் இன்றி சொற்களைக் கொட்டத் துவங்குகிறீர்கள். ஒளியோடு வரும் அவற்றின் நடுவே நிற்கும் நாங்கள் விதிர்த்துப்போகிறோம்.
         
இயல்பாய் விழும் மழைத்துளிகளை ஒத்திருக்கும் அவை எங்களுக்குள் நிரம்பிக் கொண்டே இருக்கின்றன. எத்துளியைக் கொள்வது, எதை விடுவது என எங்கள் அகம் திணறுகிறது. இங்கு. இங்கு. இங்கு. இக்கணம். சொற்களின் நடுவே பித்தனாய் நாங்கள் அலைபாய்கிறோம். கொஞ்சமும் இடைவேளையின்றி சொற்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. மொழியென்றால் சொற்களா? இல்லை. சொற்களென்றால் அர்த்தங்களா? இல்லை. அர்த்தங்கள் என்றால் பொதுவானவையா? இல்லை. மொழியும், சொற்களும், அர்த்தங்களும் அவரவர்க்குரியவை. உங்களின் பெரும்பித்தில் இருந்து எழுந்தபடியே இருக்கும் சொற்களில் எவ்வித அதிகாரமும் இல்லை. ஆம், அச்சொற்களில் பொதுவெனக் கொள்வதற்கான எவ்விதப் புனிதமும் பூசப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே அவற்றின் ஒளியில் நாங்கள் திகைக்கிறோம். உங்கள் சொற்களில் உங்கள் அர்த்தங்களை நாங்கள் ஒருபோதும் அறிவதில்லை. மாறாக, உங்கள் சொற்களில் எங்கள் அர்த்தங்களையே தேடிச்சிலிர்க்கிறோம்.
         
சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள். புதுமண் வாசம். அதிகாலைப்பொழுதின் தூய்மை. முளைக்கும் கதிரவனின் குழந்தைமை. நிறைந்து மலர்ந்திருக்கும் காற்றின் குளிர்ச்சி. நெருக்கமாய் நிற்கும் மலர்களின் நறுமணம். சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள். கால்களைச் சுழற்றியாடும் பேரின்ப நடனம். உந்தியிலிருந்து வெளிப்படும் ஏகாந்த இசை. இலக்கணமறியாச் சொற்களின் கூட்டின் உன்னதக் கவிதை. சிதறடிக்ககப்பட்ட வண்ணங்களில் இருந்து மகத்தான் ஓவியம். சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள். காமச்சூடு. அன்பின் குளிர்ச்சி. ஆணவத்தின் இருட்டு. பகையின் கெக்களிப்பு. வஞ்சத்தின் புன்னகை. உறவின் ஏமாற்றம். நட்பின் பிரிவு. காதலின் குழப்பம். பக்தியின் அச்சம். ஞானத்தின் கர்வம். சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள்.  
         
சொற்களில் காமமுற்று சொற்களைத் தின்று சொற்களுக்கு ஏங்கி சொற்களில் மயங்கி சொற்களுக்கு பயந்து சொற்களை உருவாக்கி சொற்களைத் தொலைத்து.. சொற்களாகவே இருக்கிறோம் நாம். என்றாலும், ஒவ்வொரு சொல்லும் ஒரே அர்த்தத்தைக் கொண்டாதாயில்லை. அதைப்புரிந்து கொண்டால் போதும். சொற்களால் எவ்வித ஆபத்தும் நமக்கு நேர்ந்திடாது.


முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.