Monday, February 16, 2015

சிம்மவாகனம்


ஜெ,

பீமனின் ஆளுமையை காட்டிய அந்த அத்தியாயத்தை வாசித்து வாசித்து மகிழ்ச்சி அடைந்தேன். அத்தனை பெரிய உருவம். ஊன் குன்றே என்று அம்மா வகிறாள். மந்தா என்றுதான் அழைக்கிறாள். அம்மாவுக்கு அவன் செல்லப்பிள்ளை. அவனைத்தான் அவள் சின்னக்குழந்தை என்று நினைக்கிறாள். அவனிடம்தான் சொந்தமாக வந்து மிக டெலிகேட்டான விஷயத்தைச் சொல்லவும் செய்கிறாள். தருமனிடமும் அர்ஜுனனிடமும் சொல்லவில்லை. ஆனால் அவன்தான் அவளைச் சுமந்துகொண்டும் செல்கிறான். அவள் முன் அவன் குந்தி அமர்ந்து வேண்டுமென்றால் இப்போது சொல்லட்டுமா என்று கேட்பது சிரிப்பும் கனிவும் வந்த இடம்

அவன் ஆரம்பம் முதலே இப்படித்தான் இருக்கிறான். ஷார்ப்பானவனாக இருந்தாலும் அவன் அரசியலிலே ஈடுபடுவதே இல்லை. அவனுக்கு அரசியலே புரிவதில்லை. நான் மறக்காமலிருக்கும்படிச் சொல்லவேண்டியதுதானே என்று அவன் சொல்லும்போதும் அவன் கடும் சினத்துடன் அப்பம் தின்னப்போகும்போதும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

அந்த அத்தியாயத்தை வாசித்துமுடித்தபோதுதான் ஒன்றைத்தெரிந்துகொண்டேன். அது முக்கியமான ஒரு விஷயம். கடோத்கஜன் மீது ஏன் குந்திக்கு அவ்வளவு அன்பு என்று. அவளுடைய அன்புமகனின் மகன் அவன். பீமனுக்கு உரிய பெண்ணை அவள் தேர்ந்தெடுத்ததில் உள்ள நுட்பத்தை பலமுறை யோசித்தேன். அவனுக்கும் அவளுக்கும் இடையே உள்ள உறவை மனமகிழ்ச்சிய்டன் தான் எண்ணிப்பார்க்க முடிகிறது

அம்மாபிள்ளையான பீமன் மனைவிக்கும் அப்படி இருப்பதைப்புரிந்துகொள்ள முடிகிறது. அவன் ஒருவகையில் அம்மாவாகவே அவளைப்பார்க்கிறான். அவளையும் சுமக்கிறான் இல்லையா? துர்க்கையின் வாகனமான சிங்கம்தான் அவன் என்று நினைத்தேன்.

ராகவன் பார்த்தசாரதி .