Sunday, February 15, 2015

வெண்முகில் நகரம்-7-அகத்தின் அகம்.




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

பூவை தொடத்தோன்றும், தொட்டதும் கசக்கத்தோன்றும், பூவே அந்த தொடுதலையும், வன்மத்தையும் விரும்புகின்றது. பூவுக்குள் அதற்கான தன்மைகள் உள்ளன. பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுதல் ஒருதவம். தவத்தோடு இருப்பது நல்வாழ்க்கைதான். தவத்தை கலைப்பதுதானே பெரும் வாழ்க்கை.  ஏதோ ஒரு புள்ளியில் பெண்களும் பூவாகி, பூவானதாலேயே ஸ்பரிசிக்கவும், கசக்கவும் தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதன் மூலம் ஆண் எதை அடைகின்றான்?.

தொடுதல் மூலம் தான் மென்மையானவன் என்றும், கசக்குவதன் மூலம் தான் வன்மையானவன் என்றும் காட்டுகின்றான். இந்த இரண்டும் பூவுக்கும் பெண்க்கும் தேவைதானா? பெண்ணுக்கு தேவையாக இருக்கிறது என்பதைவிட ஆணுக்கு தேவையாக இருக்கிறது என்பதுதான் உண்மை. நிருபித்தல் மூலமாகவே தான் இருக்கின்றேன் அல்லது வாழ்கின்றேன் என்ற நினைப்பாடு,அழுத்தம், சித்தம் ஆணுக்கு உள்ளது. பாணனும்,விறலியும் பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலிக்கு எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று அவர்களின் அகத்தை பிரதி எடுத்துக்காட்டிப்போனார்கள். மிருஷை பாத்திரம் வந்தபின்பு அந்த அகம் இன்னொரு அகமாக மாறி நிற்பதை கண்டு வியக்கின்றேன்.
மிருஷை தருமனக்கு  அணிசெய்யும்போது அவரின் முடியை எடுத்து காதோரம் தருமன் செருகி அவனுக்குள் உள்ள மென்னையின் வழியாகவே காதல் மலரச்செய்யும் பண்புநலனுடன் தருமன் இருக்கிறான். இந்த அகம்தான் பாஞ்சாலியின் தாகவிடாயிக்கு அவன் நன்னீர் எடுத்துக்கொடுக்கும் அன்பாக நிற்கின்றது, தன்னை சிறுமியின் சிறுமி என்றபோது சினம்காட்டிய திரௌபதியை கும்பிட்டது. மிருஷையிடமும், திரௌபதியிடம் அகத்தில் அன்னையாகவே நிற்கும் தருமனின் மென்மை தருணம்அது. தருமன் அகத்தில் இருந்தே புறத்திற்கு எழுந்து வரும் காட்சிகள் இவை. 

பாஞ்சாலியிடம் இனி பீமன் எப்படி நடந்துக்கொள்வான் என்பதை இன்னும் பார்க்கவில்லை ஆனால் மிருஷையை வலது கையால் அணைத்து, கலுஷையையும், காருஷையையும் இடது கையால் அனைத்து பீமனும் தன்னை அன்னை என்றே காட்டுகின். இவன் எப்படிப்பட்ட அன்னை? உடம்பே ஆன அன்னை. பலாப்பழம் காய்த்து தொங்கும் பலாமரம் போன்ற அன்னை. இந்த அன்னையிடம் அழுந்தி நசுங்கி கசங்கி வாசம்விடும் பாஞ்சாலி என்னும் பூ. அந்த உடம்புக்குள் என்ன இருக்கு என்பதை அறியாமலே அந்த உடம்பே அனைத்தையும் வியக்கவைத்துக்கொண்டு அன்புக்கொண்டு திகழும்.

 மென்மை மட்டும் இல்லை  வன்மையும்கூட  அன்பின் வடிவாகி நிற்கும் இந்த அற்புதத்தை மிருஷையிடம் தருமனும் பீமனும் நடந்துக்கொண்ட விதத்தில் அறிந்தேன். தருமனும், பீமனும் பாஞ்சாலியிடம் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதை மிருஷையின் பாத்திரம்வழியாக காட்டிப்போகும் இந்த அகநடனம் அழகு ஜெ.

குந்தியின் அகம் போகம் தூரத்தை கண்டு பீமன் திகைக்கின்றானோ இல்லையோ நான் திகைக்கிறேன். அகத்தின் அகம் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி முன்னே செல்கிறதோ இல்லையோ தன்னைத்தானே பின்னுக்கு தள்ளி முன்னோக்கி செல்கிறது. குந்தியை பின்னுக்கு தள்ளி குந்தியின் அகம் முன்னுக்கு செல்கிறது. தருமனை சாய்க்க அவள் கண்ட வழி அதுதான். உண்மையிலேயே தருமன் தன்னை மந்தன் என்று சொன்னது இதனால்தான் என்று பீமன் அறிவானா? 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்