Sunday, February 15, 2015

விலங்குகளின் பசியும், மனிதர்களின் ருசியும்(வெண்முகில் நகரம் அத்தியாயம் எட்டு)



அன்பு ஜெயமோகன்,

பீமனைப் பற்றிப் பேசும்போது உடலையும் உணவையும் பேசாமல் இருக்க முடியுமா? எட்டாவது அத்தியாயத்தில் உணவும், உணவினால் வரும் களைப்புமே முதன்மையாக இருந்தன. எப்படி சாப்பிட வேண்டும் என்பதை விலங்குகளிடமிருந்து கற்றுக்கொண்டதாக பீமன் குறிப்பிடுகிறான். வாழ்வதுவரை நாம் அவற்றிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் அதை நீட்டித்துக் கொள்ளலாம்.

விலங்குகள் பின்பற்றும் உணவு தொடர்பான நான்கு நெறிகளில் முதலாவது மிக முக்கியமானதாகப் படுகிறது. ’நமக்குக் கிடைத்திருக்கும் உணவு அரிதானது’ எனும் முதல் நெறியை இன்றுவரை மனிதர்களான நாம் புரிந்து கொண்டதேயில்லை. விலங்குகள் பசிக்கான உணவையே விரும்புகின்றன; மனிதர்களான நாமோ ருசிக்கான உணவையே நாடுகிறோம். பசியில்லாத பொழுதுகளில் விலங்குகள் விருப்ப உணவானாலும் தொடுவதில்லை; நாமோ கணக்குவழக்கின்றி உணவைப் பலவடிவங்களில் உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறோம். நீங்கள்கூட தொப்பை போட்டுவிட்டது, வயதாகி விட்டது போன்ற காரணங்களுக்காகவே உணவு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ”அசைவமற்ற உணவை நீண்டநாள் தாங்க முடியாது” எனும் உங்கள் வாக்கியம் மிக அபத்தமானது. அசைவ உணவின் ருசிக்கு நீங்கள் எல்லை கடந்து மயங்கி இருக்கிறீர்கள். கொல்லாமை, புலால் மறுத்தல் என அடிப்படைவாதிகளைப் போல பிரச்சாரம் செய்யாமல் கேட்கிறேன். சமைக்காத அசைவ உணவை உங்களால் ரசித்துச் சாப்பிட முடியுமா? சமையலின் வழியாக அது பெறும் ருசி வடிவத்திற்கே நீங்கள் மயங்கிக்கிடக்கிறீர்கள். பசிதான் இயற்கை; ருசி செயற்கை. நாமாக உருவாக்கிக்கொண்ட செயற்கைகளிலிருந்து நம்மால் விடுபட முடியும் என என்னால் சத்தியம் செய்ய இயலும்.

என்னைப்பொறுத்தவரை மனிதர்களுக்கு மிகச்சிறந்த உணவென்பது சமைக்காத தேங்காயும், பழங்களும்தான். கொட்டைகளும், பழங்களுமே மனிதனுக்கான மிகச்சிறந்த உணவு என்பதைச் சமீபமாய் அறிவியலும் ஒப்புக்கொண்டிருக்கிறது. பச்சைத் தேங்காய் அற்புதமான உணவு. சமைக்கும்போதுதான் அது கொழுப்பாக மாறுகிறது. கடந்த ஆறு மாதங்களாக இரவில் பழ உணவுகள்(அவ்வப்போது தேங்காயும் சேர்த்து) மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். முன்பைவிட என்னால் உற்சாகமாக இயங்க முடிகிறது. நம் மரபு உணவை மட்டுமே உணவாகச் சொல்லவில்லை என்பதைத் தெளிவாக அறிந்தவர் நீங்கள். உணவு என்பது மண்பூத்த்தை மட்டுமே கணக்கில் கொண்டதன்று; காற்று, நீர், நெருப்பு மற்றும் ஆகாயத்தையும் சேர்த்ததுதான். “கால்பங்கு உணவு(மண்), கால்பங்கு நீர், கால்பங்கு பசி(நெருப்பு), கால்பங்கு வெற்றிடம்(காற்று, ஆகாயம்)” எனபதே நம் மரபின் ஆகச்சிறந்த கொடை. நீங்கள் அதைப் பொருட்படுத்தாது டயட் எனச்சொல்லி நம்மைக் குழப்படிக்கும் தகவல்களில் சிக்கிக் கொள்கிறீரோ எனப் படுகிறது. நான் தெளிவாகவும் பகிரங்கமாகவும் சொல்கிறேன். வழிபாட்டில் முன்வைக்கப்படும் சடங்குகளில் பெரும்பான்மையானவை வாழ்வியலுக்கானவை; உடல், மனநலத்தை அறிவியலைப் போல ‘செயற்கையாக’ அணுகிக் குழப்பாமல் ‘இயற்கையாக’ அணுகுபவை. பகுத்தறிவின் வழியாக அதைத் தெளிவதே மெய்ப்பொருள் அறிதல் என்கிறேன் நான். இன்றைய மதவாதிகள் சொல்வதைக் கண்ணைமூடிக்கொண்டு நாம் நம்பிவிடப்போவதில்லை எனும் தெளிவோடுதான் வழிபாட்டைப் பேசிக்கொண்டிருக்கிறேன். ’செயற்கை’யான ‘சில்லறை விஷயங்களில்’ இருந்து நம்மைப் போன்றவர்கள் எளிதில் மீண்டுவிடலாம் என்பது என் கோணம். விரைவில் அசைவ உணவின் ‘ருசி’யிலிருந்து நீங்கள் விடுபட்டுவிடுவீர்கள் என்றும் நம்புகிறேன்.

”உன் வாழ்க்கையில் நீ எதிரியையே அறியவில்லை மைந்தா. நிகரான எதிரியை அறியாதவன் தன்னை அறியாதவனே” எனும் குறுமுனி அகத்தியனின் கூற்று அற்புதமான சுடராகவே எனக்குள் ஒளிர்ந்தது. அவர் ‘ருசி’யையே எதிர்யாகச் சொன்னதாக நான் பார்க்கிறேன். ‘ருசி’யெனும் எதிரியை நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லையோ? வாழ்வு, காமம், உணவு எல்லாவற்றையும் சிக்கலுக்குள்ளாக்குவது ‘ருசி’யெனும் எதிரியே என்பது உறுதியான பார்வை. கந்தர்வன் குளத்தைக் கலக்குவதே தான் விடுதலை பெறும் வழி எனச் சொன்னபோதும் ‘ருசியின் மீதான் மோகம்’ என்பதையே குளமாகச் சொல்கின்றானோ என்றே எனக்குப் பட்டது.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்