Wednesday, February 11, 2015

முதல் முதலிரவு




அன்புள்ள ஜெ,

ஒரு ஆண் எவ்வித புறக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஒரு பெண்ணுடன் முறையாகத் தனித்திருக்கும் சமயம், அவ்வறையில் அவர்களைக் கட்டுப்படுத்த, கேள்வி கேட்க, கிண்டல் செய்ய அவர்களின் மனமன்றி வேறெதுவும் இல்லை என்றிருக்கும் ஓர் சமயம், அதுவும் முன் பின் பெண்ணை காமத்தோடு அணுகியிராத ஒருவன்  தனித்திருக்கும் சமயம், சஞ்சலமும், அறக் குழப்பமும், அச்சமும் மிகுந்திருக்கும் சமயம் அங்கே என்னென்ன அரங்கேறும், பொருளற்ற பேச்சுக்களையும், பொருள் பொதிந்த செய்கைகளையும் தவிர. தருமனை ஓர் குழவியென திரௌபதி கையாள்கிறாள். மிகச் சரியாக அவனின் அந்தரங்கத்தைத் தொடுகிறாள். அவனிடம் இருப்பது ஆர்வம் கலந்த அச்சமே... அதைப் போக்குவதற்குப் பதில் இன்னும் இன்னும் அதிகப் படுத்துகிறாள். தருமன் திணறுகிறான். ஆனால் எங்கோ ஓரிடத்தில் திமிறி எழுவான். அதை நோக்கி அவனை படகை செலுத்தும் குகன் போல லாவகமாகக் கொண்டுசெல்கிறாள்.

வண்ணதாசன் சொல்வார், அழகான பெண்கள் அவர்களை நினைவில் வைப்பதற்காக ஏதேனும் ஓர் செய்கையை வைத்திருப்பார்கள். இங்கு திரௌபதி தன் ஆடை மடிப்புகளைச் சரி செய்வது எனக்கு அவ்வரிகளை நினைவுறுத்தியது. தருமன் இனியெப்போதும் இச்செய்கையை நினைவில் வைத்திருப்பான் என நினைக்கிறேன். 

இன்றைய பகுதியின் உவமைகள், மீண்டும் எங்களை வியப்பிலாழ்த்துகிறீர்கள்.

1. அஞ்சிய விரலென துறையிலிருந்து நீண்ட மேடை - 'cantilever bridge'  என்பது ஒரு முனையில் மட்டும் தூண் உடைய மேடை. அதன் மறுமுனை காற்றுக்கேற்றார் போல் மேலும் கீழும் ஆடும். அச்சத்தால் நீட்டப்பட்ட விரலும் அப்படித்தானே. இங்கே தருமனுக்கு இருப்பது அச்சம் தானே... மீண்டும் மீண்டும் அவன் அவளைக் காணும் போது அவன் மனதில் தோன்றுவதெல்லாம் அச்சத்தை மேலும் மேலும் பெருக்கும் உவமைகளே..
2. கருவேங்கையின் அகக்காழின் வரிகள் - நன்கு வைரம் பாய்ந்த வேங்கை மரத்தின் குறுக்கு வெட்டில் நாம் காணும் வரிகள். வைரம் பாய்ந்த நடுப்பகுதியில் துவங்கி வெளிப் பகுதி நோக்கிச் செல்பவை. அதை உந்திச் சுழியை (மீண்டும் ஓர் அருமையான சொல்லாட்சி!!! ) மையமாக்கி பரவியிருந்த மென்மயிர் வரிகளைச் சொல்கிறீர்கள். தருமன் எவ்வளவு கூர்ந்து கவனித்திருக்கிறான்!!!
3. பனித்துளிகள் செறிந்த காட்டுச்சிலந்திவலை 
அள்ள அள்ள குறைவதில்லை கங்கை நீர்... எழுத எழுத உங்களிடமிருந்து பல உவமைகள் பாய்ந்து வருகின்றன போலும்...

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்