அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
எல்லா பெண்களிலும் அம்மாவைக்காணும் ஒரு மனமும், எல்லா பெண்களிலும் காதலியைக்காணும் ஒரு மனமும், எல்லா பெண்களிலும் மகளை காணும் ஒரு மனமும், எல்லா பெண்களிலும் அன்னை பராசக்தியைக்காணும் ஒரு மனமும் இருக்கிறது.
எல்லா பெண்களிலும் அன்னைப்பராசக்தியை காணும் மனம் ஆசைப்பட்டதும் அமைந்துவிடுமா? ஆசைப்பட்ட அமையவில்லை என்பதால் ஆசையும் ஓய்ந்துவிடுமா? அன்னை பராசக்தி அந்த விளையாட்டை விரும்புவதில்லை. அவள் விடும்பட்டம் காற்றில் படப்படத்து பறந்து பறந்து களைத்து அவளை களிப்படைய வைக்கவேண்டும் என்று அல்லவா அவள் விளையாடுகின்றாள். கோடியில் ஒரு பட்டம் அவள் கை கயிற்றை அறுத்து தப்பித்துபோகும்போது அவள் அதைப்பார்த்து குழந்தையாகி கைக்கொட்டி சிரிக்கிறாள். அந்த சின்னஞ்சிறு சிரிப்பை அவள் அனுபவிக்க அவள் படுத்தும்பாடு அவள் அன்றி யார் சொல்ல முடியும். குழந்தை முதல் பாட்டி வரை எல்லா வயதிலும் மயக்குகின்றாள் எல்லா வயதிலும் வெல்கின்றாள். வெல்வதற்காக தோற்றும்போகின்றாள். அவளோடு ஆடி எப்படி வெல்வது?
பட்டம் பறக்க விடுகின்றாய்
பவ சம்சாரச் சந்தையிலே
திட்டம் தீட்டி அற்புதமாய்த்
தேவி லீலை புரிகின்றாய் –என்று தொடங்கி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்பாடும் ராம்பிரசாதரின் பாடல்
விண்ணில் மிதக்கும் பட்டத்தில்
ஒன்றோ இரண்டோ விடுபட்டால்
கண்ணிற் கண்டு கைகொட்டிக்
காளி நீயும் சிரிக்கின்றாய்! என்று முடிகின்றார்.
நாரயணன் என்னும் சமர்த்த ராமதாசர் திருமணமேடையில் மணமகள் அருகில் இருக்கும் அந்த நேரத்தில், திருமணமந்திரத்தில் வரும் “ஜாக்ரத” என்ற ஒற்றைச்சொல்லின் மூலம் விழிப்பு அடைந்து சம்சார கடலிலிருந்து தப்பித்தார் என்று சொல்வார்கள்.
சதாசிவ பிரமேந்திரர் குழந்தையாக இருந்த மனையாள் பூப்பெய்தி மனைநிறைத்தாள் என்பதால் உணவு காலதாமதமாகியது என்று அறிந்த கணம் வீடு துறந்தார்.
மஞ்சமும், மனையாளும் அருகிருக்க உறவு இரவை சிதம்பரம் ராமலிங்க அருட்பிரகாச வள்ளலார் திருவாசகம் படித்து திருஇரவாக்கினார்.
எங்கள் ஊரில் ஒருவர் கட்டிய மனைவியை திருமணமேடையில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு கொல்லைப்பக்கமாய் திருவண்ணமலை ரமணாசிரமத்திற்கு சென்றுவிட்டார்.அவர் அந்த திருமணகணத்தில் எதை கண்டார்?
குடும்பம் சொல்கின்றது, குறிப்பாக அம்மா கண்ணீர்விடுகின்றாள் என்று கல்யாணம் செய்துக்கொண்ட சிலர் ஏனே அம்மாவையும், மனைவியையும் அந்த கணத்தில் துறந்து சந்நியாசி ஆவதுதான் ஆச்சர்யம். இங்குகூட தருமன் குந்தியின் பிடிவாதத்தால்தான் ஐந்து பாண்டவர்களுக்கு ஒரு மனைவி என்ற நிலையில் தள்ளப்படுகின்றான். அந்த ஒன்றே அவன் குந்தியையும் திரௌபதியையும் தாண்டிப்போக தூண்டுகின்றது என்று நினைக்கின்றேன்.
இது இங்கு இருக்க அந்த சிவனுக்கே நண்பனாக இருந்த சுந்தரரிடம் சென்று வருவோம். காமனையே எரித்த சிவனுக்கு நண்பனாக இருந்தும், சிவபெருமானே வந்து தடுத்தும் தப்பிக்காமல் மீண்டும் இரண்டு பெண்களை கல்யாணம் பண்ணி அதில் சண்டையும் சச்சரவும் அனுபவித்து கண்ணிழந்து அலைந்து, மனைவியின் கோபத்தை தணிக்க அந்த சிவனையே நடக்க வைத்த சுந்தரர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கின்றார். இந்த அப்பா அம்மாவிளையாட்டு விசயத்தில்.
தருமனிடம் வருவோம். உலகத்தில் காமம் படுத்தும்பாட்டை உலகத்தைப் பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டியது இல்லை. நம்மை புரிந்துக்கொள்ள நம் அப்பா அம்மாவில் தொடங்கி தாத்தா பாட்டி என்று தொடர்ந்து, பூட்டன் பூட்டி என்று மேலேறி பரம்பரர் பரம்பரையில் வந்து நின்றால் போதும். ஆதிநாராயணபெருமாள்தான் பரம்பரர். கடல்முன்பு கடைந்த பரம்பரர் என்கிறார் அருணகிரிநாத சாமிகள். அன்னை பார்வதிதேவிதான் பரை.
இறைவனால் இந்த மண்ணில் வாரிசுகள் நிறைந்து நாம் அவர்கள் குழந்தைகளாக இருக்க நாம் எங்கு தப்பித்து செல்வது. தருமன் பயப்படுவது. யாயதியைப்பார்த்து. சந்தனுவைப்பார்த்து. யாயாதி காமத்தில் வெந்து அழிந்தான். சந்தனு காமத்தில் அமிழ்ந்து அழிந்தான். யாயாதி இளமையாக இருக்கும்போது அவன் மகன் புரு முதுமையாக இருந்தான் என்பது எத்தனை பொருள் பொதிந்தது. காமத்தில மூழ்க மூழ்க இளமையாக இருப்பதாக நினைப்பதுதானே மனிதமனத்தின் மாயமயக்கு.
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம்
விசையன்விடு பாணம்--------------எனவேதான்
விழியும் அதிபார விதமும் உடைய மாதர்
வினையின் விளைவேதும் அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவு எனாது
கலவிதனில் மூழ்கி-------------வறிதாய
கயவன் அறிவீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர-----------அருள்வாயே (முருகா)-என்கின்றார் என்பெருமான் முருகனைப்பாடும் திருப்புகழ் தேனறாவாயர் அருணகிரிநாதசாமி.
திரௌபதி விசயத்தில் தருமன் நிலை என்ன? ஒரு பெண்ண வெல்லாமல் சொந்தம் கொண்டாடுவது, ஒருபெண்ணை பலர் திருமணம் செய்யும் வழக்கொழிந்த விசயத்தை மீண்டும் உயிர்பித்து ஊரின் ஏளனத்திற்கு ஆளாவது. கயமையும் அறிவின்மையும் வந்து நிற்கும் தருணம். யயாதி
காமத்தின் பால்கொண்ட மோகத்தால் மகனின் இளமையை கேட்டு கயமையும், அறிவின்மையும் உடைய தருணத்தில் வந்து நிற்கின்றான். சந்தனு சத்தியவதிமேல் கொண்ட காமத்தால் மகனின் காதல்வாழ்வையே காவு வாங்கி கயமையும், அறிவின்மையும் உடைய தருணத்தில் வந்து நிற்கின்றான். இதோ தருமன்கூட மகன்போன்ற தம்பியின் மனைவியை அடைவது என்பது யாயதி, சந்தனு நிலைதான். தருமன் தனது முன்னோர்களை கங்கையின் வழியாக காண்கின்றான். அவன் யாயாதியை புலோமையின் வழியாகவும், சந்தனுவை ஜலஜையின் வழியாகக்கண்டு இருப்பான். அஸ்வகன் தனது கொடிவழிப்பேரர்களை அன்னை தந்தையர் என்று நினைப்பது எத்தனை உண்மை. தான் இளமையாக இருந்துக்கொண்டு முதுமையில் துயரப்பட்ட தனது மகன் புருவை யயாதி அப்படித்தானே நினைத்து இருப்பான். கங்கையின் பெருக்கை பார்க்கும்போது தருமனின் உடல்பதறுவது என்பது எத்தனை இயற்கையான பெருவரலாற்று நதியின் காட்சி. பாண்டுவின் குலமே ஒரு கங்கைதான் அதன் இன்றைய வடிவம் கங்கைபுதல்வன் என்ற பீஷ்மன். யாயதி, சந்தனு என்று இருமுனைகளில் ஆடும் தருமன் பீஷ்மனை பிடித்துக்கொண்டு தப்பிக்க நினைத்து இருப்பான். படகில் நிற்கும்போது படகின் பாயை தாமரையாகவும், விற்கொடியையும் நோக்கியபோது ஒரு கணம் இருக்கம் அல்லவா அந்த கணம்தான் தெய்வங்கள் தருமனுக்கு கால்கட்டுப்போட்ட தருணம். தாமரை மலரில் அவன் கண்டது திரௌபதி முகம். வில்கொடியில் அவன் கண்டது திரௌபதியின் கண்கள். அதை தாண்டி இனி மண்ணில் அவன் எங்கு சென்றுவிட முடியும்.
மண்ணில் மானிடர்கள் கொள்ளும் பெரும் காதலும் பெரும் காமமும் பெண்களை கண்டு வருவதில்லை. அவர்கள் காணும் பொருள்களில் வந்து நிற்கும் பெண்தெய்வங்கள் அதை உண்டாக்குகின்றார்கள். தருமனுக்கு படகின் பாயும், வில்கொடியும். தருமனைக்கேட்டுப்பாருங்கள் அவன் அதை மறந்த திரௌபதியின் முகமும், கண்ணும் என்று சொல்வான். தருமன் மட்டும் இல்லை நான் கூட அப்படித்தான். காட்சிதான் காமாட்சி.
அன்பே!
பார்க்கும் பொருளெல்லாம்
உன்னைவரைந்த ஓவிய சீலைகள்
சில பொருட்கள்
உன் அகத்தைகூட உருவமாக்கி
பேசவைத்து வெல்கின்றன
ஓவியம் பார்க்கையில்
யாருக்கு சீலை தெரியும்
பூத்திருக்கிறது தாமரைத்தடாகம்
பார்க்கும் கணம்தோறும்
உன் வதனமும் பாதமும்
கண்ணிலும் நெஞ்சிலும்.
இயற்கை ஒவ்வொரு ஆற்றலையும் தன்னைத்தானே சமன்செய்யும் விதத்திலேயே படைத்திருக்கிறது. தர்மனிடம் இருப்பது எல்லாம் கற்றறிவு, கற்றறிவு பட்டறிவாலேயே சமன்செய்யப்படும். பட்டறிவு கற்றறிவாலேயே சமன்செய்யப்படும். அதை சொல்லாமல் சொல்லிச்செல்லும் இருபாலினர் மிருஷை பாத்திரம் அருமை.
//தருமன் அவரது நகைக்கும் விழிகளை நோக்கி “விழுங்கப்படுவேனாநான்?” என்றான். “இளவரசே, அதையும் நீங்களே ஆழ்ந்து சென்றுஅறியவேண்டியதுதான்” என்றார் மிருஷை//
காலம் காலமாக இருபாலினர் கேளிக்கு ஆளக்கப்படுகின்றார்கள் என்ற விவாதங்கள் ஓய்வின்றி வந்துக்கொண்டு இருக்கும் இந்தநாளில் மிருஷை பாத்திரத்தின் வழியாக இருபாலினருக்கு ஒரு மாபெரும் மரியாதை செய்திருக்கின்றீர்கள் ஜெ. நன்றி.
இருபாலினர் இடம் உள்ள நடனத்தையே எல்லோரும் கண்டு அதையே அவர்களின் பலகீனம் என்பதுபோல கொண்டு அதற்கு அப்பால் செல்ல முடியாத மனங்களின் கோணல்களை திருகி திருத்தும் விதத்தில் மனக்கண்களை திறக்கின்றீர்கள் ஜெ.
// “சொல்லும், அத்தனை அசைவுகளிலும் கூடும் இந்த நடனத்தைஎங்கு கற்றீர்?” என்றான் தருமன்.
“உள்ளத்தில் எப்போதும் நாதமிருக்கிறது இளவரசே” என்றார்மிருஷை. “இளவயதிலேயே அதை நான் உணர்ந்துகொண்டேன். அதைநான் இசை என்றேன். என் குடியினரும் ஊரினரும் பெண்மைஎன்றனர்.//
நீங்கள் வடிப்பதும் கல்லால் ஆன பூதான் ஆனாலும் தேன்வடிக்கும் பூ. தேனாகும் ஒன்று கல்லென்று சொல்கின்றது ஆனாலும் அது கல்லன்று. கற்க கற்க கற்கண்டு.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.