இனிய ஜெயம்,
பித்தனின் பத்து நாட்கள் வாசித்தேன் . உங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் வழியே என்னையும். வழமை போல உங்கள் வசம் சொல்லிவிடுவது வழியே என்னை தொகுத்துக் கொள்கிறேன்.
நீங்கள் பத்து நாட்கள் என்ன நிலையில் இருந்தீர்களோ, அதில்தான் கடந்த பல வருடங்களாக இருக்கிறேன். சில தினங்களுக்கு முன் அம்மாவுக்கு கடுமையான உடல்நலக் குறைவு, ஜுர வேகத்தில் ஏதேதோ உளறினார்கள். பெரும்பாலும் என்னைப் பற்றி. ஒப்பாரி போல, எம்புள்ள தூங்கிப் பாத்தது இல்லையே, அம்மா பசிக்கிதுன்னு சொல்லி கேட்டு பல வருஷம் ஆகுதே, உனக்கு என்ன கஷ்டம் ? எம் புள்ளைக்கு என்னவோ பண்ணுது என்னன்னு புரியலையே, நான் போய்ட்டா உன்னைய யாரு பாத்துக்குவா ? இப்படித் தொடர்ந்தது புலம்பல்.
என்ன சொல்ல? என்னை உள்ளிருந்து ஆட்டிவைக்கும் அது குறித்து எனக்கே தெரியவில்லை. அவர்களுக்கு எப்படி தெரியும்? எனக்குள் எதோ இருக்கிறது, நாக்கு ருசி, ஆடம்பரம், இளம் பெண்ணின் தசைவெம்மை , எதுவும் அதற்கொரு பொருட்டல்ல, இவற்றுக்கெல்லாம் மேலான ஒன்றை அது தேடுகிறது. அது தன்னை வெளிக் காட்டிக் கொள்ளும் வரை இந்த வேதனையை வாழ்ந்தே தீர்க்க வேண்டும்.
அது நிகழ்ந்தால் மட்டுமே, நான் கொண்ட இந்த வாழ்வு நியாயம். அது நிகழா விட்டால் என்னால் நிகழ்ந்த எந்தப் பிழைக்கும், தவறுகளுக்கும் எனக்கு மன்னிப்பே கிடையாது. ஒரு சின்ன சருக்கல் போதும் அனைத்தும் ஒருங்கிணைக்க வகை இல்லாமல் சிதறி விடும். காரி டேவிஸ் சுவற்றில் வரைந்த பூமி போல, எனக்கு இலக்கியம். அந்த 'நெறிப்பட்ட நிகர்வாழ்வு' இல்லாவிட்டால் இந்த குழப்பமான யதார்த்த வாழ்வு என்னை சிதறடித்து விடும்.
அனைத்தையும் அனைத்தையும் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அது நான் அள்ளிக் கொஞ்சப் போகும் என் குழந்தையா , அல்லது என்னைக் கொண்டு செல்ல வந்த ராஜ பிளவையா என்று வாழ்ந்துதான் கண்டடைய வேண்டும்.
இறுதி மூச்சு வரை அனைத்தையும் சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடலூர் சீனு