அன்பு ஜெயமோகன்,
புராணமாலிகையில் இடம்பெற்றிருந்த கதை [வெண்முகில் நகரம் அத்தியாயம் நான்கு] காட்டும் ஆழ்கடல் பாவைக்கான சித்திரம் ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறு வடிவங்களில் குடிகொண்டிருக்கிறது. அவ்வடிவங்களை வாழ்வின் மாயங்களின் மீது ’அதிகக்காமம்’ கொள்ளும் ஒருவரால் நிச்சயம் உணர முடியும். நாம் புறத்தில் தீராக்காமம் கொண்டவர்களாக எப்போதும் அலைந்து கொண்டிருக்கிறோம். புறக்காமம் எப்போதும் ஒரு வடிவுக்குள் நம்மைச் சிறைபடுத்தவே பார்க்கும். அகக்காமமே நமக்கான வடிவமாக நாம் நினைத்துக் கொண்டிருந்த்தைக் கலைத்துப் போட்டு வேடிக்கை காட்டும். வேடிக்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களே நம்மில் பெரும்பாலானோர்.புறக்காமம் ’எல்லாம் அறிந்தவனாக’ நம்மை உயர்த்திக் காட்டும் போலியானதாக இருக்க, அகக்காமமே ‘எப்போதும் அறிய வேண்டியவனாக’ இருப்பதற்கான ஆழத்தைக் காட்டும் உண்மையாக இருக்கிறது.
’ஆழகடல் பாவை’ என்பதை என்னை விடாமல் துரத்தும் ஒரு கேள்வியாகக் கொள்கிறேன். அது துரத்த நான் துயருருகிறேன் என்றால் அதன் ‘காமத்தால்’ அதிகம் ஈர்க்கப்பட்டிருக்கிறேன் என்றே பொருள். அக்கேள்விக்கான பதில் தெரிந்து கொள்ளாமல் அது என்னை விடாது. பதில் தெரிந்து கொள்வதற்காக அக்கேள்வியை விடாது துரத்துகிறேன். ஒரு கணத்தில் கேள்விக்குள்ளாகவே குதித்துவிட்டேன். அக்கணத்திலிருந்து நான் நானாக இல்லை. ‘நான்’ என்பதை ’அறிவுள்ள நான்’ என்பதாகப் பொருத்திப்பார்க்க வேண்டுகிறேன். ‘அறிவுள்ள நான்’ என மட்டுமே நினைத்திருந்த ‘என்னை’த் திகைக்கச்செய்து முளைவிட்டிருந்த ‘உணர்வுள்ள நான்’களில் அள்ள அள்ளக் குறையாத பரவசம். ‘ஆழ்கடல் பாவை’ எனும் சொல்லின் ‘காமத்தால்’ கவரப்பட்ட ‘அஸ்வகன்’ ஒருகணத்தில் அவனாக இல்லாமல் போன அதிசயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.