Saturday, February 21, 2015

முக்கண்ணி



ஜெ,

வெண்முகில்நகரம் 19 ஒரு மாயம். உச்சாடனம் காதில் விழுந்துகொண்டே இருந்தது. உச்சாடனம் செய்து செய்து எழுதியது. அர்த்தமற்ற பிதற்றல்களும் அர்த்தத்தின் உச்சங்களும் கலந்து வந்திருக்கிறது. அந்தப்பகுதியை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. அதை ஒரு நவீன இலக்கியத்தின் பகுதி என்று சொல்லமுடியுமா என்றே தெரியவில்லை. ஏதோ மாந்த்ரீக நூலை படிக்கிறதுபோல இருந்தது. ஒரு பயம் வந்தது.  தேவி, நீ விழிதிறக்காத இவ்வாலயத்தின் முகப்பில் என்ற வரியிலே இருக்கிற பரிதாபமும் கொந்தளிப்பும் ஏறி ஏறிச்செல்கிறது. நெஞ்சைக்கிழித்து முன்னால் வைப்பதுபோல.

நம்முடைய மரபிலே இதை வாம மார்க்கம் என்பார்கள்.உண்மையான இடதுசாரித்தனம் இதுதான். வலதுசாரித்தனத்தில் அழகும் மென்மையும் உண்டு. இதிலே மனுஷனுக்குள் உள்ள எல்லாமே உண்டு. தன் சங்கை அறுத்து ஒருவன் வைத்தானே அவனுடைய அடுத்த நிலை இதுதான். வரிகளை வாசித்து வாசித்து  பித்துப்பிடித்தது.ஐங்குருதி ஆடிய கருநெடுங்குழலி. ஐந்தென விரிந்த ஆழிருள் அரசி என்ற வரியை மட்டும் எத்தனையோமுறை வாசித்திருப்பேன். மண்டை கிறுகிறுத்தது.

ஆனால்பித்து கட்டற்று போய்க்கொண்டே இருந்தது.அகாலப்பெருங்காலாகாலம் என்ற சொல்லை எப்படிப்புரிந்துகொள்வது. சிந்தனையை ஸ்தம்பிக்க வைத்து வேறெங்கோ செய்திகளைக் கடத்திவிடுவதுபோல.

மானும் மழுவும் புலியுரித்தோலும்
சூலமும் ஓடும் செவ்விழி நுதலும்
விரிசடை முளைத்த வெண்ணிலாக்கீற்றும்
விரிவரிப்பல்லும் வெங்கனல் விழியும்

என்ற வரி அப்படியே ஆசிரியப்பா போல ஒலித்தது. சிலம்பில் இருந்தோ மணிமேகலையில் இருந்தோ எடுத்ததுபோல. முழுக்கமுழுக்க பித்துப்பிடித்த கவிதை

சுவாமி