Friday, February 27, 2015

அறத்தராசின் இரு தட்டுகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பதினேழு)

அன்பு ஜெயமோகன்,


          சொல்லப்படாத ஒன்றால் நிறைந்திருந்த பதினேழாம் அத்தியாயத்தில் விறலி சொல்லும் கதையை முடிவுசெய்வதும், கேட்பதும் சகதேவன். அதுதான் அவனின் இயல்பு. சூதரைத் தவிர்த்து விறலியைப் பாடச்சொல்கிறபோதே அது ஒரு பெண்ணின் கதையாகத்தான் இருக்க வேண்டும் என ஊகித்தோம். பெண்மீனான விசாகத்தைத் தேர்ந்தெடுப்பவனும் அவனே; அதன் கதையைக் கேட்க விழைபவனும் அவனே. 


          வைகாசி விசாகத்தோடு தமிழ்க்கடவுள் முருகனும், கெளதம புத்தனும், ஏசுவின் பன்னிரெண்டு சீடர்களிலே ஒருவனான பிலிப்பும் தொடர்புபடுத்தப்படுகின்றனர். அது தொடர்பான மேலதிகத் தகவல்கள் அதிகமில்லை. தெரிந்திருப்பின் நீங்கள் விளக்குங்கள். நடுவுநிலை தவறாத பண்பைக் காட்டும் தராசு அம்மீனின் வடிவமாகச் சொல்லப்படுகிறது. அம்மீனுக்குரிய தேவர்கள் இந்திரனும், அக்னியும். 


விசாகத்தோடு இணைத்துச் சொல்லப்படும் கதைகளில் சிபியின் கதை நாமறிந்த ஒன்றாகும். ஒருநாள் சிபி மன்னனின் மடியில் புறா ஒன்று வந்து விழுந்து “என்னைக் காப்பாற்றுங்கள்” எனக் கதறுகிறது. அதனைத் துரத்தியபடியே வந்த கழுகு ”அரசே! அது நான் துரத்தி வந்த இரை அது. அதை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” எனச் சொல்கிறது. சிபி மன்னன் இரண்டு தரப்புக் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறான். இரண்டுமே நியாயம் என்பதை உணர்ந்து கொள்கிறான். அச்சமயம் கழுகு “புறாவுக்குப் பதிலாக உன் சதையைத் தருவதானால் அதை விட்டுவிடுகிறேன்” எனச் சொல்கிறது. கொஞ்சமும் யோசிக்காமல் சரி என்றபடியே தன்சதையை அறுக்கத் தயாராகிறான் சிபி. ஒரு தராசை எடுத்து வரச்சொல்லி ஒருதட்டில் புறாவை வைத்து, மறுதட்டில் தன் சதையை அறுத்து வைக்கிறான். எவ்வளவு சதை வைத்தாலும் தட்டுகள் சமநிலைக்கு வருவதில்லை. இறுதியின் சிபியே ஏறி தட்டில் நிற்க முயல்கிறான். அப்போது அவனைத் தடுக்கும் கழுகு ”சிபி, வேண்டாம். நான் இந்திரன். புறாவாக வந்த்து அக்னி. உம் நடுநிலைமையைச் சோதிக்கவே அவ்வண்ணம் வந்தோம்” எனச் சொல்கிறது. சிபி மன்னனின் புராணக்கதை விசாகமீனின் நடுவுநிலைமையை இன்றளவும் ஞாபகமூட்டிக்கொண்டிருக்கிறது.


சிபியின் கதையை நான் புராணத்திலிருந்து இறக்கிவந்து நவீனகாலத்தோடு இணைக்க முயல்கிறேன். ஆறாவது அறிவை சிபி எனக்கொள்வோம். புறாவை இயற்கையோடு இணைந்த வாழ்க்கையாகவும், கழுகை இயற்கைக்கு முரண்பட்ட வாழ்வாகவும் கருதுவோம். சிபியாக இருந்து கழுகிடமிருந்து புறாவைக் காக்காவிட்டாலும் பரவாயில்லை. கழுகுக்குப் புறாவைப் பலிகொடுக்காமலாவது இருக்கப்பார்ப்போம். ஏனென்றால், புறாவின் எடை மானுட சமூகத்தின் ஒட்டுமொத்த அளவைக் காட்டிலும் கூடுதலானது. அதனால் புறாவைப் பலிகொடுப்பதென்பது மானுட சமூகத்தையே பலிகொடுப்பதாகும். அறமெனும் தராசாகவே விசாகத்தை நான் பார்க்கிறேன். விசாகம் அறத்தை ஞாபகமூட்டும் பெண்மீன். அதற்கு இந்திரனும், அக்னியும் துணைநிற்கிறார்கள். கற்பனையென்றும், கதையென்றும் எளிதில் ஒதுக்கிவிட முடியாதவை புராணங்கள். அவை தடுமாறும் தனிமனிதர்களையும், தடம்மாறும் பொதுச்சமூகத்தையும் தொடர்ந்து தன் கதைகளால் சீர்படுத்த முயல்பவை. இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். புராணங்கள் நீதிநூற்களன்று; அவை வாழ்க்கை நூற்கள். ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என ஆணையிடுபவை நீதிநூற்கள். ஒருவன் எப்படி இருக்க வேண்டும் அவனாகவே முடிவெடுக்கத் தூண்டுபவை புராணங்கள். அதைப்புரிந்து கொள்ள முதலில் அவற்றைச் சூழ்ந்திருக்கும் ‘புனிதப்பூச்சுகளை’ களைந்தாக வேண்டும்.


விறலி சொல்லும் ருசியின் கதையும் கிட்டத்தட்ட சிபியின் கதையைப் போன்றதுதான். ஒரே ஒரு வித்தியாசம். இந்திரன் பொன்வண்டு, காட்டுமான், அன்னம், சேவல், குயில் எனப் பலவடிவங்களில் வர.. அக்னி விபுலனாக வருகிறான்.   

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.