அன்புள்ள ஜெ
பாஞ்சாலியின் ஐந்து இரவுகளைச் சொல்லப்போகிறீர்கள் என நினைக்கிறேன். ஐந்து பாண்டவர்களுடைய முகங்களும் வரிசையாக வந்துகொண்டிருக்கும். ஆனால் எனக்கு அந்த ஐந்து முகங்களுமே பாஞ்சாலியின் ஐந்து முகங்கள்தான் என்றுதான் தோன்றுகிறது. ஐந்து பேருடனும் அவள் எளிதாக ஐந்து முகங்களை அணிந்துகொண்டு மாறிக்கொண்டே இருக்கிறாள்.
தருமனுடன் இருப்பவள் கலைமகள் போல இருக்கிறாள். பீமனுடன் கட்டற்ற காட்டுப்பெண்ணாக இருக்கிறாள். அர்ஜுனன் முன்னால் காமம் நிறைந்த பெண்ணாக இருக்கிறாள். ஒவ்வொரு முகமாக மாறிக்கொண்டே இருக்கிறாள்
இந்த ஐந்து அத்தியயாங்களும் நீங்கள் பாஞ்சாலிக்குச் செய்யும் ஐந்து வகையான பூசைகள் என்ற எண்ணம் வந்தது. அவளுடைய உடலை வர்ணித்துக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் ஒருமுறை சொன்ன வர்ணனை திரும்ப வரவேயில்லை
பலமுறை வாசித்தாலும் வெண்முரசு சலிக்காமலிருக்கக் காரணம் திரும்ப வராத வர்ணனைகளும் மனசின் நுட்பங்களும்தான் என நினைக்கிறேன்
சாரங்கன்