Friday, February 20, 2015

வெண்முகில் நகரம்-10-சிறையும் விடுதலையும்அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

திரௌபதியை சந்தித்தப்பின்புதான் தருமன் தன்னை சக்கரவர்த்தி  என்று பிரகடனப்படுத்துகின்றான். அவள் ஒரு சக்கரவர்த்தினி அதனால் அவளுக்கு நிகராக தன்னை நிருத்தி சக்கரவர்த்தி என்று உணர்கின்றான் என்று என்னும் வகையில் திரௌபதி, தருமன் சந்திப்பு நிகழ்ந்து முடிந்தது. அங்கு என்ன நடந்தது எப்படி இப்படி ஒரு மாற்றம் என்பது அனைத்தும் வாசகர் சிந்தனைக்கு உரியாதாகிவிட்டது. குறிப்பாக தருமன் குழல் ஒப்பனை அர்ஜுனன்போல் இருப்பதைக்கண்டு அது வேண்டாம் என்று சொல்லி ஒரு குறிப்போடு திரௌபதி நின்றுவிடுகின்றாள். அது தருமன் சுயமாக இருக்க விடும் விடுதலைமட்டும்தான். விடுதலை மட்டும் ஒருவனை ஷத்ரம் உடையவனாக ஆக்கிவிடும் வல்லமை உடையது இல்லை. விடுதலை ஷத்ரத்திற்கு எதிரானதும்கூட. விடுதலை சத்துவத்திற்கு உரியது அப்படி இருக்க தருமன் ஷத்ரம் உடையவனாக ஆவது எப்படி?

மண்ணொக்கு உரிய தன்மை அனைத்தையும் உண்டு பசியாறுவது. தாவரத்திற்கு மட்டும் உணவாவது. இரண்டும் சேர்ந்துவிட்டால் இரண்டும் ஒன்றால் ஒன்று பலம்பெற்று உலகை வெல்கின்றது. மண் அரிக்கப்படாமல் இருக்க மரம் மண்ணை பிடித்துக்கொள்கிறது. மரம் விழாமல் இருக்க மண் மரத்தை பிடித்துக்கொள்கின்றது. ஒன்றை ஒன்று சிறைப்படுத்துகின்றது ஆனால் அந்த சிறைதான் இரண்டுக்கும் பாதுகாப்பும் வல்லமையும். திரௌபதியை சந்தித்தபின்பே தருமன் இதை உணர்ந்து இருப்பான். இதைத்தான் விதுரரிடம் பாண்டு சொற்களாக சொல்கின்றான். இந்த வல்லமையோடு சொல்கின்றான். அவன் சொல்லும்போது அது ஒரு உள எழுச்சி மட்டும்தான் என்று எண்ணி இருந்தேன். அன்று தருமனுக்கும் விதுரருக்கும் உரையாடல் நடக்கும்போது திரௌபதி கழுத்தை உள்ளிழுத்து அமர்ந்திருக்கும் பறவைபோலவும், துயில்வதுபோலவும் இருந்தாள். அவள் இந்த உணர்சி மிகுந்த நேரத்தில் வாழ்வின் எதிர்காலத்தைப்பற்றிய அரசியல் விவாதிப்பில் எப்படி அமைதிக்கொள்ள முடிகின்றது என்று நினைத்தேன். மண்ணை மரமும், மரத்தை மண்ணும் பிடித்திருக்கிறது என்னும்போது பறவை அஞ்சவேண்டியதில்லை அல்லவா? இந்த இடத்தை திரௌபதி எப்படி அடைந்தாள்? அதற்கான விடை இன்று வெண்முகில் நகரம்-10ல் விடைக்கிடைத்தது. மண்ணும் மரமும்போலவே திரௌபதியும் தருமனும் ஒருவருக்கு ஒருவர் சிறையும் பலமும்.

//“நான் சென்ற மூன்று நாட்களும் முழுக்க இன்னொரு உலகில்இருந்தேன்அது முழுமையான சிறைப்படல்சொற்களில்,சிந்தனைகளில்முறைமைகளில்வரலாற்றில்… உடல் முழுக்கவேர்கள் எழுந்து பரவி இறுக்கி மண்ணுடன் அசையாமல் கட்டிவிட்டதுபோன்ற உணர்வு” என்றாள்//

பீமன் இயற்கையில் பலமானவன். அசைந்துக்கொண்டே இருக்கக்கூடிய காற்று, ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய நதி. அதை கட்டிவைப்பதால் பயன் இல்லை என்பதை அறிந்து அதை கடந்து போக செய்வதன் மூலம் வாழ்க்கையை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்செல்கின்றாள். தருமனுடன் சிறைபட்ட நாட்கள் என்றவள் பீமனுடன் விடுதலை என்கின்றாள்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்-என்கின்றார் வள்ளுவர்.  தன்னை விடுதலையாக்கி கொள்வதில் பீமனின் வல்லமை இருக்கிறது என்பதை காட்டிச்செல்கின்றாள். கதை சொல்லம்போது சிறுமிபோல் இருக்கிறாய் என்ற தருமனிடம் சினந்த திரௌபதிதான், கதைசொல்லும்போது சிறுமிபோல் இருக்கிறாய் என்ற பீமனிடம் புன்னகைக்கிறாள் மற்றும் இன்னும் சிறுமியாக மணலை அள்ளி தொடையில் வழியவிடுகின்றாள். திரௌபதியின் அகம் ஒரு தீபத்தின் இருவண்ணம்.

மண்ணில் யானைதான் நீரில் ஆமை என்று திரௌபதி சொல்லும் இடத்தில் பீமனை பீமனுக்கு உணர்த்துகின்றாள். மண் உண்பதற்கும், உண்ணப்படுவதற்கான இடம். நீர் பிறப்பதற்கும், பிறப்பிப்பதற்குமான இடம். யானை முதலையை வெல்வதில் பெருமை இல்லை புலன்களை இழுத்துக்கொள்ளும் முதலையாவதில் மூலமே இருத்தல் வாய்க்கும் என்று திரௌபதி பீமனுக்கு உணர்த்துகின்றாளா? சொந்த நாட்டிலிலேயே சொந்த கொடிவழி வாரிசுகள் இடம் நான் யார் என்று இரந்து நிற்கும் இத்ரத்யுமனன்போல வாழக்கூடாது என்று உணர்த்துகின்றாளா? அஸ்தினபுரி உனதென்று சொல்கின்றாளா? நோக்குதல், அறிதல்.இருத்தல் என்பதின் வழியாக வரும் கதை, இருத்தல் மூலமே வானேகும் வழிகிடைக்கின்றது என்பதை பீமன் மனதில் பதியவிட்டு பீமனின் அகம் என்னும் கங்கையை அசைவின்மை ஆக்குகின்றாள். முதன் முதலில் பீமன் மனதுக்குள் ஒரு அசைவின்மை. மனைவி குருவாக நிற்கும் தருணம்.

தருமனுக்கு சொல்லான திரௌபதி பீமனுக்கும் சொல்லாகின்றாள் ஆனால் அங்கேயே நிற்காமல் பீமனுடன்   திரும்பிவிடுகின்றாள், புவியும் வீரனும் ஆற்றலை அறிவதற்கு. எரிவதற்கு..எரிவதன் மூலம் பழையன கழிந்து புதியன பிறப்பதற்கு.

எங்கெங்கோ சென்று எதை எதையோ எழுதி உள்ளத்தை அடைத்துக்கொண்டு விட்டேன் ஜெ. சரியாக எழுதினேனா தவறா என்று தெரியவில்லை. சரியும் தவறும் சரி என்று மனம் நிறைகின்றது. அதன்அதன் இன்பம் ஒன்று அதில் அதில் உள்ளது. 

//இறப்பின்மையை அடைந்திருந்தமையால் முனிவர் காலத்தை அறியும் திறனை இழந்திருந்தார்// இந்த வரி முழுவதும் இனிக்கின்றது. இந்த குறள் வந்து மனதில் நிற்பதால்.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.