அன்பு ஜெயமோகன்,
பிடியின் மென்காலடி ஓசையோடு வெண்முகில் நகரத்தின் ஏழாம் அத்தியாயம் துவங்கி இருக்கிறது. பிடி என்றால் பெண்யானை; ஆண்யானையைக் களிறு என்போம். காலடியோசை மென்மையாக இருப்பதால் பிடியைச் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. அதன் வலிமை அசாதாரணமானது. குந்தியின் சொற்களில் மென்மை இருப்பினும் அதில் அமைதி இல்லை. மாறாக, எதிர்நிற்பவரை உசுப்பும் உறுதியான வலிமையே மிகுந்திருக்கிறது. ஒரு பிடியைக் களிறுகொண்டு கையாளும் நுட்பமறிந்த பிடியாகவே குந்தியைக் கண்ணுறுகிறேன்.
பீமன் தன்னைக் களிறு எனக்காட்டிக் கொள்வதில்தான் மகிழ்கிறான். “நான் நீரில் என் உடலை மட்டுமே பார்ப்பேன். முகத்தைப் பார்ப்பதில்லை”,”என் தசைகளைப் போன்று நான் விழைவதொன்றில்லை” போன்ற அவனின் கூற்றுகள் அதையே உறுதிப்படுத்துகின்றன. தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகப்பெரியதாகும். மனிதர்களுக்கு அடுத்தபடியாக யானைகளின் அறிவாற்றல் வியக்கக்கூடிய ஒன்றாகும். முதலில் பீமனிடம் தான் காமம் கொள்ளவில்லை எனச்சொல்லிவிட்டு பிற்பாடே “என்னுள் வாழும் பெண் காமம் கொள்ளாத ஆணே இல்லை” என்கிறாள் மிருஷை. ‘என்னுள் வாழும் பெண்’ எனும் சொல்லாடலில் ஒரு பிடியின் அசாதாரண அறிவாற்றலைக் கண்டேன்.
யானைகளின் வாழ்க்கை முறை கிட்டத்தட்ட மனிதகுலத்தைப் போன்றதுதான். களிறுகள் குறிப்பிட்ட காலம் வரை தன் பெற்றோரைச் சார்ந்து வாழ்கின்றன. பிறகு தனித்துச் சென்று விடுகின்றன. பிடிகளோ இறுதிவரை சார்ந்து வாழ்வதிலிருந்து தங்களை விலக்கிக் கொள்வதில்லை. நம் சமூகத்தில் ஆண், பெண் வாழ்க்கைமுறையை ஒப்புநோக்கினால் அவ்வுண்மை உறுதிப்படும். குந்தி, திரெளபதி போன்றவர்களுக்கும் தனித்து முடிவெடுப்பதோ, வாழ்வதோ சாத்தியமே இல்லை.
“ஆணுடலில் பெண் பார்ப்பது ஒரு முழுமையின்மையை. தன் உடலால் அவனுடலில் படர்ந்து அவள் அவ்விடைவெளியை நிறைக்க முயல்கிறாள். பெண்ணுடலில் ஆண் பார்ப்பதும் அதே குறையைத்தான். தன் உடலால் அவன் அதை முழுமை செய்ய முயல்கிறான்” எனும் மிருஷையின் பேச்சில் உடலே முதன்மையாய்ச் சொல்லப்படுகிறது. யானை என்றாலே அதன் பெரிய உடல்தான். அவ்வுடலால்தான் அதைக் கண்டு நாம் மிரள்கிறோம். நம்மை வதைப்பதும் காமத்தைத் தூண்டும் உடல்தான். குன்றியிருக்கும் யானையின் உடல் நமக்கு மிரட்சியைத் தருவதில்லை. மாறாக, கருணையையே தூண்டுகிறது. சுருங்கிப்போன உடல்(ஆண்/பெண்) நம்மில் காமத்தைத் தூண்டுவதில்லை. மாறாக, அது இறப்பையே ஞாபகமூட்டுகிறது. “இன்பமாவது எல்லாம் சிறிய இறப்புகளே” எனும் வாக்கியத்தின் உச்சகட்டப் பரவசத்தில் என்னுள் யானையின் பிளிறல் ஒலி.
குந்தி, திரெளபதி எனும் பிடிகளுக்கிடையே மாட்டிக் கொண்ட களிறைப் போல் பீமன் நின்றிருக்கும் காட்சியைத் தெளிவாகவே சித்தரித்திருக்கிறது ஏழாம் அத்தியாயம்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.