Tuesday, February 17, 2015

வெண்முகில் நகரம்-8-ஞானத்தின் வல்லமை

பகர்தற்கு அரிதான செந்தமிழிசையில் சிலபாடல் அன்பொடு
     பயில பலகாவியங்களை ------------உணராதே
பவளத்தினை வீழியின் கனியதனைப் பொருவாய் மடந்தையர்
     பசலைத் தனமேபெறும்படி-----------விரகாலே

சகரக்கடல் சூழும் அம்புவிமிசை இப்படியே திரிந்துழல்
     சருகொத்து உளமே அயர்ந்துடல்------மெலியாமுன்
தகதித்திமி தாகிணங்கிண எனவுற்றெழு தோகையம்பரி
     தனில் அற்புதமாக வந்தருள்--------புரிவாயே

நுகர்வித்தகமாகுமென்று உமைமொழியிற்பாலை உண்டிடு
     நுவல்மெய்ப்புள பாலனெ்றிடும்------------இளையோனே
நுதிவைத்த கரமலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திட
     நொடியிற் பரிவாக வந்தவன் ----------மருகோனே

அகரப்பொருள் ஆதியொன்றிடு முதல் அக்கரமானதின் பொருள்
     அரனுக்கு இனிதா மொழிந்திடு----------குருநாதா
அமரர்கு இறையே வணங்கிய பழநித் திருவாவினன்குடி
     அதனிற்குடியாய் இருந்தருள் ----------பெருமாளே.

அன்புள்ள ஜெ இந்த திருப்புகழில் அருணகிரி நாதசுவாமிகள் மாதர் மயக்கு வேண்டாம் என்று சொல்லவந்தாரா? செந்தமிழ் இசையை பாடவேண்டும் என்று சொல்லவந்தாரா? பல காவியங்கள் கற்றகவேண்டும் என்று சொல்கின்றாரா?

மாதர் மயக்கு ஒழித்து, காவியம் கற்று, இசைத்து பாடி திரிந்தால் வாழ்ந்ததாகிவிடுமா? மாதர் இல்லாமல் இசையும் காவியமும் எதற்கு? மாதரை தவிர்த்து இசையை காவியத்தை அறிந்தால் மட்டும் முருகன் வந்து வாரி அணைத்துக்கொள்வானா? மாதரைத்தவிர்த்தவரும் நாயகி ஆகியன்றோ நாயகனை முருகனை அணைக்கின்றார். 

இந்த மூன்றுமே ஒன்றில் இருந்து ஒன்றை அறியும் வாயில்கள். ஒன்றை மூடிவிட்டு ஒன்றில் நுழைவது என்பதும் ஒன்றையும் அறியாமல் இருப்பதுபோன்றதுதான். இசையை அறிந்தால் காவியத்தை அறியவேண்டும் காயித்தை அறிந்தால் பெண்ணை அறியவேண்டும். இது ஒரு மூன்று அம்புகள் இணைந்த வட்டம். ஒன்று தொடங்குகின்ற இடத்திலேயே மற்றொன்றின் முடிவு இருக்கும். தொடக்கம் வேண்டாம் என்றால் முடிவு இல்லை, முடிவு வேண்டாம் என்றால் தொடக்கம் இல்லை. இத்தனை பாடுபடுத்தும் இந்த திருப்புகழை சாமிகள் ஏன் பாடினார் என்று நினைத்துப்பார்ப்பது உண்டு. எங்கோ ஒரு சிறையும், எங்கோ ஒரு கதவும் இந்த திருப்புகழில் இருக்கு.

அருணகிரி நாதர் சுவாமிகளின் உள்ளத்தில் உட்கார்ந்து இருந்த முருகன் அகத்தில் அப்படி பாடினார். அருணகிரிநாதர் புறத்தில் அப்படி பாடினார். ஏன் அப்படி பாடினார். அவருக்கு அப்படி தோன்றியது அப்படி பாடினார். மனிதனுக்கு எப்படி எப்படி தோன்றுதோ அப்படி அப்படி பொருள் கொள்வார்கள் என்பதற்காக பாடினார். மனிதர்கள் எல்லாம் ஏன் எப்படி எப்படியோ பொருள் கொள்கிறார்கள்.?  நானும் மந்தன்தானே..என்?..ஏன்?..ஏன்? ஒசையின்றி கேட்கின்றேன்.

வெண்முகில் நகரம்-8 இன்று இந்த திருப்புகழுக்கு ஒரு அர்த்தம் தந்தது. இசையும், காவியமும் இல்லாதவன் வாழ்விலும் பெண் உண்டு. அந்த பெண் உடம்புக்கு உரியப்பெண். காமத்தை கடலாக்கி அதிலே மூழ்கி, அதையே கலக்கி,அதைத்தாண்டி போகமுடியாமல் அதுவே  வல்லமை என்றுக்காட்டி, அதைத்தாண்டிப்போகும் அந்த கணம்முதல் ஊர்ந்து தவழ்ந்து பலமிழந்து அழிந்துப்போகும் முதலை. அது யுகம் யுகம் ஆனாலும் வற்றாத சகரக்கடல், தானும் தன் வழிவழி கொடிகளும் அதிலே உழன்று கிடந்து உடல் சருகாகும் முதலை வாழ்க்கை.
உள்ளம் என்ற ஒன்றையும் உடம்பாகவே ஆக்கிக்கொண்ட ஹுஹு என்னும் காமத்தில் நீந்தும் கந்தர்வன் ஒருபுறம். உடல் என்ற ஒன்றையும் உளமாக்கிக்கொண்டு அறியாமைஎன்னும் யானையாகி அலையும் இந்தரத்யுமனன் ஒருபுறம்.

காமமும் அறியாமையும் சமவல்லமைக்கொண்டது. ஒன்று ஆழத்தில் அழுந்த அழுந்த வல்லமைக்கொளவது. ஒன்று மேலேமேலே என்று மூக்கை நீட்டி முட்டிமோதிப்போவதில் வல்லமைக்கொள்வது. காமத்தின் தலை நிமிராமலும், அறியாமையின் தலை தாழமலும் அவைகளுக்கு விடுதலைக்கிடையாது. ஒன்றை ஒன்றை சந்திக்காமல் விலக்கி இருக்கும்வரை வாழ்க்கையில் தடையே இல்லை என்று அவைகள் வாழ்கின்றன. ஒன்றை ஒன்று சந்திக்கும் அன்று ஒன்றை ஒன்று இடம்மாற்ற முயற்சி செய்கின்றன. உள்ளத்தை உடல் திங்க முயற்றி செய்கிறது. அறியாமையை காமம் தின்று உயிர்வாழ்கின்றது. உடலை உள்ளம் கரையேற்ற முயற்சி செய்கின்றது.  உள்ளம் காமத்தை கொன்றுவிட்டு எழுந்து நடக்க முயற்சி செய்கின்றது. இரண்டும் நடக்குமா? பெரியோன் கையில் உள்ள அறிவாயுதம் சக்கரமாய் சுழன்று வந்து இரண்டுக்கும் வல்லமைதரும் உருப்பை வெட்டினால் இரண்டும் தனது சுயரூபத்தை எட்டும். முதலையின் தலையையும், யானையின் தும்பிக்கையும் வெட்டுப்படும்போது இது நடக்கும். காமம் திங்கும் பற்கள் கொண்ட வாய் அகன்றது. அறியாமை கொல்லும் தந்தங்கள் கொண்ட மூக்குநீண்டது.

பீமன் உடலால் முதலைப்போன்றவன். அகத்தால் யானைப்போன்றவன்.  முதலைப்போல பெரும்தீனித்திங்கின்றான். யானைபோல காட்டை விழைகின்றான். இருந்தும் இல்லாதவன்போல சோறு சோறு என்று அலைகிறான். இளவரசனாகப்பிறந்தும் காட்டுவாசியாய் திரிகிறான். அவன் ஒரு நினைவில் காடு உள்ள யானை. அவன் உள்ளம் காடு..காடு..மலை..மலை என்று போய்கொண்டே இருக்கிறது. இந்த இடத்தை அறிந்துதான் இடும்பவனத்தில் குந்தி என்வயிற்றில் பிறந்ததால்  நீ தாமஸகுணத்தில் இருக்கமுடியாது என்கின்றாள். அறியாமை தாமசகுணத்தின் அடையாளம். தாமசகுணம் இருட்டானது. இருட்டு யானைபோன்றது. சிவன் கஜசம்கார மூர்த்தி.

காவியத்தையும், இசையையும் விரும்பாமல் ஒதிக்கியே வைத்து வாழும் பீமன் எப்படி இருப்பான். ஒன்று காமத்தில் மூழ்கும் முதலை அல்லது அறியாமையில் பூமி அதிரவைக்கும் யானை. சூதர்களின் பாடல் இன்று பீமனிடம் என்ன சொல்லி இருக்கும். சூதர்களின் பாடல் வழியாக ஒரு கதை, கதையின் வழியாக ஒரு ஞானம். ஞானத்தின் வழியாக ஒரு வாழ்க்கை. காமம் உண்டு ஆனல் காமத்தில் தன்னை மறந்து முதலையாகமல் காதலனாய் வாழும் ஒரு கந்தர்வன். அறியாமை உண்டு ஆனால் அறியாமையில் யானையாகமல் குருவின் சொல்வழிநடக்கும் ஒரு குடும்பத்தலைவன்.

தகதித்திமி தாகிணாங்கிண எனவுற்று எழும் ஞானமென்னும் ஆயிரம் கண்கொண்ட மயில்மீது வரும் முருகனிடம் அருணகிரி நாதர் செந்தமிழ் இசைகேட்பது உள்ளத்தையும் உடலையும் சமமாக வைத்துக்கொண்டு மனிதனாக வாழ்ந்து அருள்பெறுவதற்கு. மாந்தரை இசையாய், காவியமாய் அறிவதற்கு. இசையாய், காவியமாய் அறியும் பெண்ணை அன்னை பராசக்தியாய் உணர்வதற்கு.

சூதர்கள் முதலை, யானை கதையை தொடங்குவதற்கு முன். வடக்குக்கும் வடக்கே, தெற்குக்கும் தெற்கே வாழ்க்கை வரியாகமல், வரிகள் கதையாகாமல், வரிகளுக்குள் உள்ள வாழ்க்கை மட்டும் அங்கு நடக்கிறது என்று சூதர்கள் பாடும் பாடல் பகடிபோல் இருந்தாலும். வாழ்க்கையில் எந்த கதையும் இல்லை, கவிதையில், கதையில் எந்த வாழ்க்கையும் இல்லை என்று நினைக்கும் மந்தர்களுக்கு ஞானம் என்பது அகமும் புறமும் ஒளிரவைக்கும் கதிர்வேல் அது நெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடக்கும் கடலையும் குடிக்கும் திடத்தையம் அருளையும் அளிக்கும் என்றும் காட்டுகின்றது.

அன்புள்ள ஜெ, பீமனை இத்தனை பலம்பொருந்தியவனாக படைக்க உங்களுக்கு ஞானம் வழங்கிய அன்னை பராசக்தியை வணங்குகின்றேன். அந்த பலவானை தூக்கி புரட்டிப்போடு என்று மீண்டும் பெரும் ஞானத்தால் கட்டளை இடும் அன்னை பராசக்தி வல்லமையை எண்ணி மகிழ்கின்றேன்.

போற்றி போற்றி நீலி நிட்களி நிற்குணி நித்தில வாரி முத்து நகைக்கொடி. நீல இரத்தினமிட்ட அறக்கிளி புதல்வோனே!  

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்