Tuesday, February 10, 2015

வெண்முகில் நகரம்-5-வாழையடி வாழை.அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

வெண்முகில் நகரம்-5 கதை என்று நினைக்கமுடியாத கதை. ஒவ்வொரு சொல்லும் உணர்வென்னும் ஓவியம் சதைகொண்டு இயங்கும் தருணம். வெகு ஆழத்தில் தவித்து விழும் கணம் ஆனல் அறிந்ததில் அறிந்ததில் தட்டித்தட்டி திறந்து அகம்விரிந்து கிளர்ந்து எழும் கலையம்சம். முற்றும் புதிய ஒருவாழ்க்கை வெண்முகில் நகரம்.

ஒழுங்கையில், வயிற்றில் ஒன்று, இடுப்பில் ஒன்று, சேலை முந்தானையை பிடித்துக்கொண்டு ஒன்று கணவனோடு ஒன்று, இதை எல்லாம் தாண்டி முன்னால் ஒன்று போகும் குடும்பத்தைத, மோர்கடைந்தபடி திரும்பி பார்த்த பாட்டிம்மா “யாரடி அவ“ என்றது.

”வண்டிக்காரர் பேத்தி..கஸ்தூரி! ஆயா“

“நல்லாயிருக்கியாடி.. உன் கண்ணாலத்துல பார்த்தது, நேத்துபாத்த மாதிரி இருக்கு.. உன் புள்ளைகளா..மகராசியா இருடி”

உடம்பில் உள்ள அத்தனை வெட்கமும் முகத்தில் கூடிக்கும்மி அடிக்க அது சிரித்துக்கொண்டேபோனது. மாப்பிள்ளை நான் இங்கு இல்லை என்பதுபோல் வானத்தையே பார்த்தப்படி போனார்.

அவர்கள் கண்ணில் இருந்து மறைந்து ஒலியறியா தூரம் போனதும் பாட்டி சொன்னது. “பொண்ணுப்புடிக்கல.. பொண்ணுபுடிக்கல.. என்று கல்யாணம் ஆன ராத்திரி கயிறு எடுத்துக்கிட்டு ஓடினப்பய பண்ணியிருக்கிற வேலைய பாத்தியா“ என்றது. அன்று அந்த குடும்பமே தூங்காமல் கிடந்து அவனை காவல்காத்தது வேறு ஒரு பெரும்கதை.

வாழ்க்கைதான் எவ்வளவு சீக்கிரத்தில் கதையாகிவிடுகின்றது. கதைதான் எவ்வளவு சீக்கிரத்தில் வாழ்க்கையாகிவிடுகின்றது. பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று சேர்ந்துவாழும் தம்பதிகளை இறைவன் குழந்தைகளால் சீக்கிரமாக கட்டிவிடுவானோ? 

தப்பித்து தப்பித்து ஓடிவிட நினைக்கும் தருமன்தான் எத்தனை சீக்கிரமாக திரௌபதியின் இதழ்களில் முத்தமிட்டுவிடுகின்றான். ஜலஜையையில் மூழ்கும் அஸ்வன்போல.

ஆண் பெண்களை கீழுலக பெண்கள் மேலுக பெண்கள் என்று பிரிக்கும் அகம் உடையவர்களாக இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இல்லை என்றே நினைக்கிறேன். காரணம் ஆண் கண்களாலேயே பெண்ணை ஒளியென கண்டு விழைகிறான். இசையென அகம் அறியும் பெண்ணை அவன் அறியாமலே செல்கின்றான். பெண் ஆணை கீழுல அசுரர் என்றும் மேலுக தேவரென்றும் எளிதில் பிரித்துவிடுகின்றாள். பெண்ணுக்கு ஒளியையும், ஒலியையும் நேர்க்கோட்டில் வைக்கும் வல்லமை இருக்கின்றது.இரண்டையும் பிரித்துப்பார்க்கும் அகக்கண்ணும், முகக்கண்ணும் ஒரே நேரத்தில் வேலை செய்கிறது. ஆணுக்கு கண்ணு வேலை செய்தல் மனம் நின்றுவிடுகின்றது. மனம் வேலை செய்தால் கண் நின்றுவிடுகின்றது. 

ஒளி கண்ணுக்குள் நுழைந்து இல்லாமல் போய்விடுகின்றது. இசை செவிக்குள் நுழைந்து இல்லாமல் போவதற்கு பதில் அதன்பிறகுதான் அது இன்னும் இன்னும் பெரும்வடிவம் எடுத்து அழகுக்காட்டுகின்றது. அகத்தால் பெண்ணை இசையாய் அறியும் மனிதனை அவள் தேவன் என்கிறாள் அவனையே விழைகிறாள். இடா இடத்தில் இன்று நிற்கும் திரௌபதி தருமனை ஏற்கும் அந்த இடத்திற்கு மையத்திற்கு எளிதாக வந்துவிடுகின்றாள். அர்ஜுனன் கண்ணளால் திரௌபதியைக்கண்டவன். தருமன் அகத்தால் திரௌபதியைக்கண்டவன்.

அசுரர்களாக இருந்தாலும், தேவர்களாக இருந்தாலும் அவர்கள் இயற்றும் மூன்று நெருப்பும் ஒன்றாக இருக்காது ஆனால் அவர்களை நினைத்து மூவெரி ஏற்றும் இடாவின் மூன்று நெருப்பும் ஒன்றாக இருக்கும் என்ற இடத்தில் அசைவின்மை அடையும் திரௌபதி தனக்கான இடத்தை அறிந்துவிட்டாள். அவர் அவர் குணங்களோடு அவர்களை ஏற்றுக்கொள்ளும் இடத்திற்கு வந்துவிட்டாள்.  இடாபோலவே திரௌபதியும் நன்றுதீயை அறிந்து நிற்கும்   இடம்.

வாழ்க்கையின் அந்த முதல் கணத்தை அன்னையும் குழந்தையும் ஆகி இலகுவாக்கும், அழகாக்கும். சுகமாக்கும், சொர்க்கமாக்கும்  பெண்களால்தான் குடும்பம் என்னும் கூடு அறம் என்னும் பூஞ்சோலையாகிறது  இல்லை என்றால் தருமன்கள் எல்லாம் மரத்திற்கு மரம் உட்கார்ந்து இருக்கும் புத்தன்களாகத்தான் இருப்பார்கள்.

//திரைச்சித்திரமென உறைந்த அத்தருணத்தை ஒரேகணத்தில் அவள்உயிர்கொள்ளச்செய்துவிட்டதை அவன் உணர்ந்தான்//

சிறுமிப்போலவே இருந்துக்கொண்டு, தருமனை கும்பிட வைத்த திரௌபதி பெரியவள்தான் ஆனால் திரௌபதியை கும்பிட்ட இடத்தில் நிற்கின்றான் தன்னை ஆண்பிள்ளை என்று நிருபித்து தருமன். வாழையடி வாழையென வந்த ஆண்பிள்ளை திருக்கூட்ட மரபில் அவனும் ஒருவன் அன்றோ!.நன்றி ஜெ.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.