அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சில ஆண்டுகள் முன்பு வேலைப் பளுவாலும், காரணம் ஏதும் இல்லாமலும் தொலைந்து போயிருந்த வாசிப்பு பயிற்சிக்கும் ரசனைக்கும் மீண்டும் எப்படியோ ஒரு தூண்டுதல் போட்டு என்னை வாசிப்புலகிற்க்குள் இழுத்தமைக்கு முதலில் நன்றிகள். இது உங்களுக்கு நான் எழுதும் என்னுடைய
முதல் கடிதம்.
தற்போது அச்சு ஊடகத்தில் வந்த நான்கு வெண்முரசு நாவல்களையும் கண்காட்சிகளில் வாங்கி விட்டதால் தொடர்ந்து வாசிப்பு, நிகழ்கிறது. இணையத்தில் ஆறாவது நாவல் தொடங்கட்டும் என்று காந்திருந்து ஆரம்பித்ததில் தற்போது இரண்டு வகை அனுபவங்கள். அதாவது மழைப்பாடலில் முடிந்தவரை நனைந்து கொண்டே வெண்முகில் நகரத்தில் மெதுவாகத் தலைதுவட்டும் அனுபவம்தான் அது.
வெண்முகில் நகரத்தில் இந்த நான்கு அத்தியாயங்களையும் படித்த பிறகு வந்த எண்ணப்பகிர்வுதான் இது. `காமத்தை இலக்கியமாக்கலாம், இலக்கியம் காமமாகிவிடக்கூடாது` என்ற சொற்றொடர் நினைவில் வந்தது. ஒரு இலக்கியவாதி தன்னையறிந்தோ அறியாமலோ ஃப்ராய்டின் அனைத்துத் தத்துவங்களுக்கும் வலுச் சேர்த்துக்கொண்டே செல்கிறான் என்று தோன்றுகிறது.
உளவியலில் `ஒடிபஸ் காம்ப்ளெக்ஸ்` என்ற தொடரைக் கவனித்திருப்பீர்கள். அது காமம் தாய்மை என்ற இரு நீர்நிலைகளுக்கு நடுவே, சமூக விதிகளால் இட்ட நிழற்கோடு அவ்வப்போது அழிந்து போவதால் வரும் ஒரு மனநிலை ஆகும். அந்த மனநிலையை முதல் மூன்று அத்தியாயங்களில் வரும் கதை மாந்தர்களிடமும் காணமுடிகிறது. மேலும் அதை புனைகதைகளின் வழியே விறலி, பாணனின் பாத்திரங்களூடாக உறுதிப்படுத்தும் நிலையும் தெரிகிறது.
இந்த உளப்பகுப்பாய்வு என்ற முறைப்படி ஆராய்ந்தால் இது unconscious ஆழ்மனநிலையிலிருந்து வெளிப்படும் நிகழ்வுகள். இவை ஒரு எழுத்தாளனால் எப்படி conscious சுயநினைவுடன் கையாளப்படுகின்றது என்பதே ஒரு வாசகனல்லாதவனுக்கோ அல்லது இளம் வாசகனுக்கோ ஒரு பூடகமான விடையற்ற கேள்வியாகவே இருந்து வருகிறது. அதன் மீதான தங்கள் பார்வையை எதிர்பார்க்கிறேன். மேலும் இவ்விதமான கலவியல் வாழ்வியலை இலக்கிய வெளியில் பகிர்கையில் அதைக் கவனிப்பவரின் வாழ்வறத்தில் ஏற்படும் பாதிப்புகள் எவ்வளவு இருக்கும்... என்ற கேள்விகள் சற்றே நாகம் தடியைக் கண்டு தலையசைப்பது போல நிழலாடுகின்றன...
கமலக்கண்ணன்
அன்புள்ள கமலக்கண்ணன்,
வெண்முரசு வாசிப்பதில் மகிழ்ச்சி.
பொதுவாக வாசிப்பை இரண்டுவகையாகப்பிரிக்கலாம். கேளிக்கை வாசிப்பு அல்லது பொதுவான வாசிப்பு பலவகை இடக்கரடக்கல்களுடன் மட்டுமே இருக்கமுடியும். ஆனால் இலக்கியம் அப்படி அல்ல. சமரசமற்ற உண்மையை நோக்கியே அது செல்லமுடியும்
சமரசமற்ற உண்மையை நாடி வருபவனே இலக்கியவாசகன். அவன் அங்கே மேலும் மேலும் என கிழித்து உள்ளே செல்லும் பயணத்தையே எதிர்பார்க்கிறான். மழுப்பல்களை அல்ல.
அந்த உண்மை வெளிப்பாடு எந்த அளவுக்கு அழகியல்ரீதியாக, எந்த அளவுக்கு ஏற்கத்தக்கவிதமாக வெளிப்பாடு கொள்கிறது என்பதே இலக்கியத்தில் முக்கியமான வினாவாகும்
ஈடிபஸ் காம்பிளெக்ஸ் என்பது தொன்மையான அனைத்து இலக்கியங்களிலும் உள்ளது. ஃப்ராய்ட் அதை உளவியல் சார்ந்து வரையறை செய்தார். மகாபாரதத்தில் அது வந்தபடியே இருக்கிறது
இது மகாபாரதத்தை முழுமையாகக் க்ண்டடையும் முயற்சி. சமகால உள்ளத்தை கூடவே மகாபாரதத்தைக்கொண்டு அறியும் முயற்சி. ஆகவே இதில் எந்தவிதமான மழுப்பல்களுக்கும் இடமில்லை
இலக்கியம் என்பது பிரக்ஞைபூர்வமகா எழுதப்படுவது அல்ல. அது ஆழ்மனதுக்கு ஒரு பயணம். மொழி வழியாக ஒரு கனவு. அது ஆசிரியன் கட்டுப்பாட்டில் இல்லை. கனவுக்குரிய எல்லா சுதந்திரங்களும் இதில் நிகழும்
பலமுறை விரிவாக இதை எழுதியிருக்கிறேன்
ஜெ