அன்புள்ள் ஜெ,
வணக்கம், நல்ம்தானே?
எனக்கு மூன்று கேள்விகள்
1. அண்மைக்கால தங்கள் படைப்புகளின் தலைப்புகள் எல்லாமே ‘வெண்மையை’ மையமாகவே வைத்தே உருவாக்கபட்டுள்ளன. வெள்ளையானை, வெண்கடல், வெண்முரசு, வெண்முகில் நகரம் இப்படி. இவற்றிர்க்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உள்ளதா? அல்லது தற்செயலாக நிகழ்ந்ததா?
2. புராணங்கள். உபநிஷத்துகள் எல்லம் தங்கள் எழுத்துகள் மிக்ச்சரளமாக வருகின்றனவே! தாங்கள் வடமொழி வாசிக்கும் திறன் உடையவரா?
3. தருமன் திரௌபதியை அமர்வாய் என்கிறார். பெரும்பாலும் பெரியவர்கள் மரியாதைக்குரியவர்கள் போன்றவர்களை மட்டுமே அமர்க என்று சொல்வது மரபு.ஒருவேளை அக்காலத்தில் உட்காருதல் எனும் சொல் வழக்கத்டில் இல்லையா? கண்மூடி உறங்குவதற்கு அக்காலத்தில் தூங்குதல் எனும் சொல் அக்கால வழக்கில்லை என்று நாஞ்சில் நாடன் கூறுகிறார். நேரமிருப்பின் தாங்கள் விடையளித்தால் மகிழ்வேன்.
வளவ துரையன்
அன்புள்ள வளவதுரையன்
வெண்மை என்பது என் உள்ளத்தில் எதைக்குறிக்கிறதென்றே தெரியவில்லை. இந்தவகையில் சொற்களில் மனம் சென்று அமர்வது அனிச்சையாக நிகழ்வது. ஆழ்மனச்செயல்பாடு. ஒன்றும் செய்வதற்கில்லை
புராணங்கள் உபநிஷத்துக்களை நான் பெரும்பாலும் மலையாளத்தில் வாசிக்கிறேன். மலையாளம் சம்ஸ்கிருதத்திற்கு மிக நெருக்கமானது. பெரும்பாலான சம்ஸ்கிருதச் சொற்களும் சொப்ல்மூலங்களும் மலையாளத்திலுண்டு. மலையாளத்தில் எல்லா சம்ஸ்கிருதச் சொற்களையும் அறியும் வசதி உண்டு.சம்ஸ்கிருதம் வாசிப்பதில்லை
அக்காலத்தைய சொற்களைக்கொண்டு மட்டுமே எழுத முடியாதல்லவா? நாவல்கள் இக்கால மொழியில் அல்லவா எழுதபப்டுகின்றன. தூங்குதல் என்ற சொல் தொங்குதல் என்ற பொருளில்தான் அக்காலத்தில் இருந்தது. துயில்தல் துஞ்சுதல் உறங்குதல் போன்றவை அன்றிருந்தவை
தருமன் ஆரம்பத்தில் பாஞ்சாலியிடம் கொண்ட மனநிலையை அவன் பேச்சு காட்டுகிறது
ஜெ