அன்புள்ள
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.
ஒரு நாவலைப் படிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் போதும் , ஒரு தெளிவிலாத முகத்தோற்றத்தைத் நம் மனம் கண்டு கொள்ளத் தொடங்குகிறது. அந்த முகமானது நமது முந்தைய- கதை கேட்கும், பழக்கத்தில் இருக்கும், சினிமாவில் வந்திருக்கும்- பிம்பங்களின் அடிப்படையில் இருக்கும். உதாரணத்திற்க்கு ராமாயணத்தைப் படிக்கும் போது நான் சிறுவயதில் பார்த்த பூசையறை ராமர் படத்தில் இருப்பவரின் முகமே தெளிவின்றி நினைவிற்க்கு வருகிறது.
அதன் அடிப்படையில் நாவல் போகும் தோறும் அதன் வழியில் ஒரு தெளிவான முகத்தை உருவாக்கித் தருகிறது. இந்த அடிப்படையில் திருதராஷ்ட்ரன், பாண்டு முதற்க்கொண்டு அனைத்து கதாபாத்திரங்களும் (நான் மழைப்பாடல் படித்துக்கொண்டிருக்கிறேன்.) எங்கோ நாடங்களில் கவனிக்கப்பட்ட முகங்களாலும், தினமும் வெளிவரும் தங்கள் இணையதள் ஓவியங்களாலும் எனக்குள் மனத்தோற்றத்தை மெருகேற்றிக் கொண்டே செல்கின்றன.
ஆனால் இவ்விதம் ஒரு பாத்திரம் மட்டும் சற்றே பிரச்சனையாக உள்ளது. அதாவது கர்ணன் படத்தில் வரும் குந்திதேவியின் முகம் ஏனோ தெளிவாக மனதில் பதிந்துவிட்டது. ஆனால் தாங்கள் உருவாக்கிவரும் குந்தியோ ஒரு அடங்கா காட்டுத்தீயென உருக்கொண்டிருக்கிறாள். அந்த சூரியகலவியும், அவள் அர்த்தமிகுந்த அமைதியும், அவளது மதிசூழலும் முற்றிலும் புதுவிதமான மகாபாரதப் பாத்திரமாக உருக்கொண்டுள்ளது.
அந்த பாத்திரத்தை முழுதும் ரசித்திட நான் - கர்ணன் திரைப்பட (ஓரக்கண்ணால் பார்த்த) குந்தியிடமும், இந்த சூரியனை உடற்தோட்டு மஞ்சம் கொண்ட குந்தியிடமும் -பிரித்தறிவதற்க்கான ஆனந்த போராட்டம் ஒன்று நடத்த வேண்டியிருக்கிறது. மழைப்பாடல் முடிந்து வண்ணக்கடலில் காத்திருக்கும் கர்ணன் சிவாஜி கணேசனின் பிம்பத்தில் மிஞ்சியிருப்பார். அதையைப் பற்றிய ஒரு சந்தோசத்தில் இந்த வார இறுதியில் மழைப்பாடலை முடிக்கவேண்டும்.
நன்றிகள்.
அன்புடன்
கோ.கமலக்கண்ணன்.