ஜெ,
வெண்முகில்நகரம் 19 மிகவும் மிஸ்டிக் ஆனது. எனக்கு அதிலுள்ள மிஸ்டிசிசம் சரியாகப்புரியவில்லை. அதை சிலமுறை வாசித்துவிட்டு புரியும்போது புரியட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் புரிந்தது அதிலே உள்ள கவித்துவம். சாதாரணமாக இந்த உச்சத்தை மொழி அடையமுடியாது. நவீனப்புதுக்கவிதைகூட அஞ்சி நின்றுவிடக்கூடிய பல கவித்துவப்பிரயோகங்களைக் கண்டேன்
கன்னிக்கருவறை ஊறிய புதுக்குருதியெனக் கசியும் இளங்காலை. என்ற உவமையை எத்தனை முறை வாசித்தேன் என்று சொல்லமுடியாது.
கால்சுற்றி கழலாகும் கொழுங்குருதிப் பெருக்கு. தண்ணீர் காலில் கொலுசு போல ஆவதை நீங்கள் காடு நாவலில் எழுதியிருந்தீர்கள். இது பயங்கரமாக இருந்தது
ஆனால்
கீழ்த்திசை முகில்கள் காண்பதென்ன கனவு?
கீழே நிழலிருள் திட்டுகள் கொண்டதென்ன கரவு?
என்ற வரியில் உள்ள அந்த ரிதம் கொடுக்கும் கவித்துவமே வேறு. எந்த அர்த்தமும் வருவதில்லை. ஆனால் மனம் மயக்கம் கொள்கிறது. சொல்லச்சொல்ல புலம்பவைக்கிறது
புற்றெழுந்து பெருகின ஈசல்கள்.
புழைவிட்டெழுந்தன விண்மீன் வெளிகள்
ஒரு பெரிய பிரபஞ்சதரிசனம் போல. எப்படி இங்கே இத்தனைதூரம் சென்றீர்கள் என்பதே ஆச்சரியமாக இருந்தது
சண்முகம்