Tuesday, February 17, 2015

தர்மன் (இளவரசு) பட்டாபிஷேகம்


[பெரிதாக்க படம் மீது சுட்டவும்]

மகாபாரத சீரியல்களில் ஏதோ முக்காடுபோட்ட அன்னை போலத் தோன்றிய குந்தி பண்ணுகின்ற – பண்ணப்போகின்ற செயல்கள் எல்லாம் தேர்ந்த அரசி(யல்வாதியின்) அடிகளே. எல்லோருக்கும் தெரிந்த எழுத்தில் அச்சடிக்கப்பட்ட சட்டங்களை விதவிதமாக விளக்கி வெல்லும் வழக்கறிஞர்களைப் பார்க்கையில் தோன்றும் வியப்பு , விருப்பு, வெறுப்பு எல்லாவற்றையும் குந்தி மேல் ஏற்றிப் பார்க்கலாம்.தர்மன் –பீமன் – அர்ச்சுனன் விவாதங்கள் நடந்த அன்றே தர்மனுக்கு இளவரசு பட்டம் சூட்டும் விழா மனநிலைக்கு வந்து விட்டேன். நடுவில் இந்த அர்ச்சுனன் சும்மா இல்லாமல் ஒரு நாளை - வெண்முரசு வெளியாகும் நாட்களில்- எடுத்துக்கொண்டு இன்னும் பரபரப்பைக் கூட்டிவிட்டார். ஒரு வேளை துரியோதனனுக்குப் பட்டம் கட்டியிருப்பார்களோ என்று சந்தேகம் வர பிற மகாபாரதங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டு நிம்மதி அடைந்தேன். அறவோனாகிய தர்மனை மக்கள் விரும்பியதால் திருதராஷ்ட்ரன் அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி வயிறு எரிந்தான் என ஒரு வரியில் கடந்து செல்ல்லும் கதை வெண்முரசில் உருக்கொண்ட விதம் கைகளில் தவழும் காவியக்காலம்.குந்தி எல்லோரும் எப்படி நடந்துகொள்வார்கள் , அதெற்கெல்லாம் எப்படிப்பதிலளிக்க வேண்டும் – குறிப்பாகத் தருமனே பின்வாங்கினால் என்ன சொல்லி அவையைதன் வசப்படுத்தலாம் என நீங்காத் திரைக்குள்ளிருந்தே சொல்லிமுடித்த போதே மன்னனுக்கு வேறு வழியில்லாமல் ஆயிற்று. திருதராஷ்ட்ரனுக்கும் தன் மகனுக்கு முடி சூட்ட வேண்டும் என்ற ஆவல் இல்லாமல் இருந்திருக்காது. இல்லாவிட்டால் இந்த ஆலோசனைகளே தேவை இல்லை. எல்லோருக்கும் தங்கள் நாடாளும் ஆசை. அதை அறத்தின் படி என்று காட்டிக்கொள்வதற்கான போராட்டமே இன்றைய காட்சி. காந்தாரியரின், சகுனியின் தன்னெழுச்சியான குரல்கள் துரியோதனன் இளவரசராக எழுந்த ஆசைக்குரல்கள். குந்தியின்  திட்டமிடப்பட்ட சட்டங்களில் வெளியானதும் அந்த அவாவே. அரசகுலத்திலிருந்து தன்னெழுச்சியாக எழுந்து ஆசையை மறுத்த தன்னறமாக மூத்தோர் சொல்லுக்குப்பின்னாக இறையுரிமையை வைத்து அன்னையின் வாதங்களை வடக்கிருந்து மறுக்கத் துணிந்த தருமனே தீயிற்பொலிகின்ற செஞ்சுடர். வழக்கிலிருந்த அறமெனக் கருதப்பட்ட நடைமுறை சிக்கல்களால் கூர்தீட்டப்பட்டு மேம்பட்ட அறமாக வழிதிறந்து வைத்தவன்.பீமன் சொல்வது போல தர்மன் அறத்தை எடுத்துக் கொள்வதாக நான் நினைக்கவில்லை . அது பீமனின் கருத்து மட்டும்தான். இயல்பிலேயே மீமறம் வாய்க்காத எல்லோரும் அறத்தைக் கைக்கொள்ளவில்லை. இன்றைய நிகழ்வில் திருதராஷ்ட்ரன் நீதி நூல்களால் இந்த முடிவுக்கு வரவில்லை என்று சொன்னாலும் அவையில் நடந்த வாதப்பிரதி வாதங்களில் தெறித்த நியாயத்தால் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இடத்தில் தான் இருக்கிறார். துரியோதனன் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட தீர்ப்பை ஏற்கும் பிரதிவாதி இடத்தில்தான் இருக்கிறான். வாதி நிலையில் இருந்த தர்மனின் தன்னறம்தான் இன்றைய சிறப்பு. நல்ல காலமாக நம் காலத்தில் ஆள்பவர்களே தீர்ப்பு வழங்கவேண்டிய இடத்தில் இல்லை.திருதராஷ்ட்ரன் –தன் சகோதரர்கள் நீங்கலாக இந்த அறையில் இருக்கும் அத்தனை பேரையும்  கொன்ற பின் தர்மன் அரசுப்பட்டமேற்கும் அந்நாளை விட அறைக்குள் சொற்போருக்குப் இளவரசுப் பட்டமேற்கும் இந்த நாளே மகிழ்ச்சிக்குரியது.

                             திரௌபதி திருமண விசயத்திலும் குந்தியின் விரிவான திட்டம் இருக்கும் என நினைக்கிறேன்.. பிச்சை -பகிர்ந்து கொள்ளுங்கள்-ஐயோ பெண்ணா- என்பதெல்லாம் பிற்சேர்க்கைகள் தான். மகாபாரத காலத்தில் ஒரு சிறிய விதிவிலக்காக சகோதரகள் அனைவரையும் பெண் மணந்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருக்கலாம். வெவ்வேறு பெண்களை மணந்து கொண்டால் சகோதரர்கள் பங்காளிகளாகி தமக்குள் அடித்துக் கொள்ளாமல் அரசைக் கைப்பற்றச் செய்த ஏற்பாடாகக் கூட இருக்கலாம்.

                                   பாவம் அர்ச்சுனன். எல்லோவற்றையும் கையும் களவுமாக வீடியோ காமெராவில் பதிந்து வெளியிடும் இந்தக் காலத்தைவிட கண்காணிப்பில் வாழ்ந்திருக்கிறார். அரசப்பட்டம் குறித்தான தீவிர நிலையின்மையிலும் அன்னை அறிந்துவிட்டாள். மன்னன் அறிந்து விட்டான். சகோதரர் அறிந்து விட்டார். நியோகத்தின் போது அரண்மணை ரகசியம். ஆகவே கண்டிப்பாக வெளியாகிவிடும் என்று சத்யவதியிடம் பணிப்பெண் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. அரசன் தூங்குவது வெட்ட வெளியில் என்பது ஒரு பழமொழி.அன்புடன்

சித்தநாத பூபதி