Monday, February 16, 2015

விண்மீன்கள் ஒளியில் வானமாகும் நதி (வெண்முகில் நகரம் அத்தியாயம் ஒன்பது)
அன்பு ஜெயமோகன்,
     
    துள்ளும் இளங்குதிரையான கங்கையின் இரவுத்தோற்றத்தில் அழகாக மின்னியது ஒன்பதாம் அத்தியாயம். ”விண்மீண்களை நோக்கியபடி இருண்ட நீரில் நீந்துவது வானில் நீந்துவதைப் போல” என பீமன் குறிப்பிடுகிறான். வெளியே சொல்லிக்கொள்வதில்லை என்றாலும், வானில் நீந்திப் பார்க்கும் எண்ணம் உள்ளுக்குள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும் என்றே கருதுகிறேன்.  சிறுவயதில் பகலிலேயே பலமுறை நான் வானில் நீந்தி இருக்கிறேன். விடுமுறை நாட்களில் கட்டிலில் படுத்துக்கொண்டு வானத்தையே அண்ணாந்து பார்த்தபடி இருப்பேன். நகர்ந்து கொண்டிருக்கும் மேகங்களை உற்றுநோக்கியபடி இருக்கும் நான் ஒருகணத்தில் மிதப்பதாகத் தோன்றும்; அக்கணம் பூமி என்னை விட்டு மறைந்திருக்கும். மேகங்களோடு இணைந்து நீந்திச் செல்வதான பயணக்கிளர்ச்சியை இன்று என்னால் விளக்கிவிட இயலாது.

 முழுநிலவின் ஒளியில் நதியின் அழகு பன்மடங்காகிறது. என்றாலும், நிலவில்லாமல் விண்மீன்கள் மட்டுமே மின்னிக்கொண்டிருக்கும் நாட்களில் நதி இன்னொரு வானமாகவே மாறிவிடுகிறது.வெளிச்சத்தொகுப்பான நிலவு நதியை நதியாகவே காட்டுகிறது. வெளிச்சச்சிதறல்களான விண்மீன்கள் நதியை வானமாக மாற்றுகின்றன. ஒன்றை அதுவாக மட்டுமே பார்ப்பது நம்மை நாமாக இறுக்கமாகவே வைத்திருக்கிறது. ஒன்றை அவைகளாகப் பார்ப்பது நம்மை வேறொருவனாகக் கொண்டாட்டத்தில் தள்ளுகிறது. வாழ்க்கையும், நதியும் ஒருபுள்ளியில் ஒன்றுபோலவே காட்சியளிக்கின்றன. நாம் நிலவைக் கொண்ட வானமா அல்லது விண்மீன்கள் கொண்ட வானமா? நாம்தான் கண்டுகொள்ள வேண்டும்.
       
       இளங்குதிரைகள் குறிப்பிட்ட தாளகதியிலான ஒலியை எழுப்பிக்கொண்டே சீராக ஓடக்கூடியவை. அவை களைப்பை ஒருபோதும் பிரதிபலிக்காத உடலமைப்பும், மனஉறுதியும் கொண்டவை. அவற்றின் கண்ணில் எப்போதும் ஒரு ஒளி சுடர்விட்டுக் கொண்டே இருக்கும். நதியின் குணங்களும் அத்தகையவையே என்பதால் இளங்குதிரை எனும் உருவகம் அதற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.
    
   ”மானுடனின் உடல் மண்ணாலானது. கூந்தல் வானத்தாலும் கண்கள் நெருப்பாலும் மூக்கு காற்றாலும் ஆனவை. கைகள் மட்டும் நீராலானவை” எனச் சொல்கின்றான் பீமன். அதில் எனக்கு முழு உடன்பாடு. மண்ணால் ஆன உடல் என்பதால்தான் அது கடைசியில் மண்ணுக்கே செல்கிறது. வானத்தைப் போன்றே கூந்தலின் துவக்கத்தையும் முடிவையும் நம்மால் உத்தேசித்து விட முடியாது. நெருப்பு இருப்பதால்தான் நாம் கண்களைப் பார்த்துப் பேசவோ / பேச மறுக்கவோ செய்கிறோம். காற்றில்லாமல் நாம் உயிர்வாழ முடியாது என்பதால்தான் உயிருக்கு இணையான மானமழிந்த நிலையை மூக்கறுப்போடு ஒப்பிடுகிறோம். நீரென்றாலே குளிர்ச்சி என்பதால்தான் கைகளால் ஒருவர் நம்மைக் கட்டியணைக்கும்போது நெகிழ்ந்து போகிறோம்.
    
     ”தொடுகையில் உடல் எதுவோ அது மறைந்து விடுகிறது” எனும் கூற்று அதிநுட்பமானது. மண்ணாலான உடலைக் கூந்தல் தொடுகையில் அங்கு உடல் மறைந்து காமமாகி விடுகிறது. மண்ணாலான உடலை கண்கள் தொடுகையில் உடல் மறைந்து அழகான அல்லது அழகற்ற உருவமாகி விடுகிறது. மண்ணாலான உடலை மூக்கு தொடுகையில் உடல் மறைந்து நறுமண அல்லது அழுகிய வாசனையாகி விடுகிறது. மண்ணாலான உடலைக் கைகள் தொடுகையில் உடல் மறைந்து அன்பு அல்லது வெறுப்பாகி விடுகிறது. ’தொடுகையில்’ பிடிக்குச்சிக்காமல் ‘நழுவிக்’ கொண்டே செல்வதால் நாகமும் உடலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இருட்டில்தான் நாகம் தைரியமாக வெளியே வரும். உடலும் இருட்டில்தான் தன் உண்மை முகத்தைக் காட்டும்.
         
      பீமன் நிலம் என்பதை நீரில் இருக்கும்போதுதான் திரெளபதி புரிந்துகொள்கிறாள். திரெளபதி பறவை என்பதை நீரில் இருக்கும்போதுதான் பீமன் புரிந்துகொள்கிறான். பீமனும், திரெளபதியும் அவரவர் உடல் கடந்திருக்கும் வாய்ப்பை கங்கை வழங்கியிருப்பதாகவே படுகிறது.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.