Wednesday, February 25, 2015

ஓட்டத்தை மறந்த குதிரைகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பதிநான்கு)







அன்பு ஜெயமோகன்,

தாமரை மலரின் ஒளிபொருந்திய அழகு கொண்ட நகுலனின் அறிமுகம் இனிதே நிகழ்ந்திருக்கிறது. பெண்களே பொறாமைப்படும் அழகு கொண்டவன் அவன். குதிரைகளுக்கும் அவனுக்குமான உறவும் விசித்திரமானது. ஒருவேளை அவன் தன்னைக் குதிரையாகவே கருதுகிறானோ எனும்படியே குதிரைகளோடு பழகுகிறான். குதிரைகள் அவனின் தொடுதலுக்கு ஏங்கி நிற்கும் காட்சியில் அவை குதிரைகளாகத் தெரிவதில்லை. பேரழகன் நகுலனின் தொடுதலில் சிலிர்க்க விரும்பும் இளம்பெண்களாகவே தெரிகின்றன. ஒருவேளை நகுலனும் குதிரைகளை அவ்வண்ணமே அணுகுகிறானோ?
         
குதிரை பாலூட்டி வகையைச் சேர்ந்த உயிரினம். பாலூட்டிகளில் பெரிய கண்களைக் கொண்டிருப்பவை குதிரைகளே. அவற்றால் இரண்டு நிறங்களை மட்டுமே பார்க்க முடியும். மிகச்சிறுபூச்சி ஒன்று உடலில் அமர்ந்தால்கூட அவை கண்டுகொள்ளும். பிடித்தமான தீனியைத் தேர்ந்தெடுத்து உண்ணுமளவு சுவைத்திறன் கொண்டவை. குதிரைகளின் குணங்களோடு பெண்களின் குணங்களைப் பொருத்திப்பார்ப்போம். பாலூட்டிகளான பெண்கள் கண்களாலேயே பிறரை ஈர்க்கும் இயல்பு கொண்டவர்கள். பெரும்பாலும் பெண்கள் பிறரை நல்ல அல்லது கெட்ட எனும் கண்ணோட்டத்திலேயே அணுகுபவர்கள். தொடுதலைக் கொண்டே தொடுபவரின் மனநிலையைக் கண்டுகொள்ளும் திறன்கொண்டவர்கள். தங்களுக்குப் பிடித்தமான சுவையை ஒருபோதும் அவர்கள் விட்டுக்கொடுத்துவிடுவதில்லை. குதிரைகளுக்கும் பெண்களுக்கும் பொருந்திப்போகும் மற்றொரு முக்கிய அம்சம் கூந்தல். பாய்ந்து செல்லும் குதிரையொன்று ஒரு பெண்ணின் சுற்றிச்சுழன்றாடும் நாட்டியத்தையே நமக்கு நினைவூட்டுகிறது.
         
தந்தை வீட்டிலிருக்கும் வரை பெண்களுக்கு ஆண்கள் மீது அன்பே மிகுந்திருகிறது. ஏனென்றால், அவர்களின் துள்ளலை தந்தையர்கள் வெகுவாக ரசிப்பதோடு ஊக்குவிக்கவும் செய்கின்றனர். கணவன் வீட்டுக்குச் சென்றவுடன் ஏனோ அவர்களுக்கு ஆண்கள் மீது சொல்லவொணா வெறுப்பு வந்துவிடுகிறது. அதற்குக் காரணம் பெண்களின் துள்ளலை கணவர்கள் கண்டிப்பதே. மேலும், ’பெண்களுக்குரிய இலக்கணம்’ என ஒரு முகமூடியைத் திணித்தும் விடுகிறது புகுந்த வீடு. “மணமான பெண் தன் தந்தையில் இல்லத்தில் அயலவள்” எனும் விதுரரின் கூற்றில் என் கருத்து உறுதிப்படுவதாகவே நம்புகிறேன்.
         
குதிரைகள் பெரும்பாலும் அவற்றின் உரிமையாளர்களுக்குக் கட்டுப்பட்டவை. பெண்களும் நம் சமூகத்தில் அவ்வாறே. அவர்களுக்கான மரியாதையும் அத்தகையதே. ஓட்டத்துக்கு அடையாளமான குதிரையைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் மூடசெயல் போன்றே திருமணத்தைப் பார்க்கிறேன். திருமணத்துக்கு முன்பிருக்கும் பெண்ணின் உற்சாகத்தில் பாதியளவு கூட திருமணத்திற்குப் பின்பு அவளிடம் இருப்பதில்லை. காலப்போக்கில் அவள் தன் ஓட்டத்தை மறந்தவளாகிறாள். பிறரின் கட்டளைப்படி நடக்கத் துவங்கும் போலியாகிறாள். அது அவளாகத் தேடிக்கொண்டதில்லை. ‘சமூக ஒழுக்கம்’ எனும் போர்வையில் நாம் திணித்தது. பெரும்பாலும் ஆண்களுக்கான ‘சமூக ஒழுக்கம்’ அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதை எவ்வகையில் சேர்ப்பது?

தந்தை வீட்டில் இருக்கும் பெண், கணவன் வீட்டில் இருக்கும் பெண், மகன் வீட்டில் இருக்கும் பெண் என பெண்ணின் வாழ்க்கை மூன்றுகட்டங்களில் நிகழ்கிறது. ஏனோ சதுரங்கத்தில் குதிரைக்காய் மூன்று கட்டங்கள் நகர்த்தப்படுவது இங்கு நினைவுக்கு வருகிறது. இரண்டு கட்டங்கள் கிடையாக ஒரு கட்டம் செங்குத்தாக அல்லது இரண்டு கட்டங்கள் செங்குத்தாக ஒரு கட்டம் கிடையாக அக்காய் நகர்த்தப்படும். தந்தை, கணவன் மற்றும் மகன் வீட்டில் இருக்கும் பெண்ணின் வாழ்க்கையும் அப்படியாகத்தான் நகர்த்தப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது.

‘கற்பு’ எனும் சொல்லை மட்டுமே கொண்டு பெண்ணை அளவிடும் அபத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களைப் போகப்பொருட்களாக மட்டுமே முன்வைக்கும் ஊடகங்கள் முன்னைக் காட்டிலும் பெருகி இருக்கின்றன. பாலியல் வக்கிரங்களுக்கு சிறுமிகள் பலியாகும் கொடூரங்களும் அரங்கேறுகின்றன. பள்ளி மாணவிகளை ஆசிரியரே பாலியல் தொந்தரவு செய்யும் கேடுகளும் நடந்தேறுகின்றன. பெண்ணைத் தெய்வமாகக் கொண்டாடிக்கொண்டே அவளை மனதாலும் உடலாலும் கற்பழித்துக் கொண்டே இருக்கும் சமூகத்தில் நாமும் ஒருவர்தான் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.  

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.