Thursday, February 26, 2015

அகந்தையால் சூழும் ஆணவ இருள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பதினெட்டு)அன்பு ஜெயமோகன்,
         
பதினெட்டாம் அத்தியாயத்தில் சகதேவன் ஆணவத்தைக் கண்டு அஞ்சி நடுங்கும் சமயத்தில் நானும் அதிகம் நடுங்கினேன். ஆணவத்தின் நிறம் அடர்கருப்பு. அதன் உருவத்தை நாமறிந்து கொண்டுவிடவே முடியாது. அதன் பரவலும் அத்தகையதே. ஆணவத்தின் விதை நிமிடத்திற்குள்ளாக மரமாகும் வல்லமை கொண்டது. எப்பேர்ப்பட்ட அறிவாளியானாலும் ஆணவத்திடமிருந்து தப்பிவிட முடியாது. உலக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆணவமே இயக்க்கிக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். அதனால்தான் உலக வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அறத்தை வலியுறுத்த வேண்டிய தேவையும் எழுகிறது.

நிமித்தகனான சகதேவன் வாழ்வின் பொருளின்மைக்கும், நிலையின்மைக்கும் கூட அஞ்சாமல் ஆணவத்துக்கு அஞ்சுகிறான். “நான் மானுடரின் உள்ளே கொந்தளிக்கும் ஆணவத்தை அஞ்சுகிறேன். காமம், குரோதம், மோகம் என்கிறார்கள். அவையெல்லாம் எளியவை. அத்தனை விலங்குகளுக்கும் உள்ளவை. ஒவ்வொன்றையும் சென்று தொடும் ஆணவமே அவற்றைப் பேருருக்கொள்ளச்செய்கிறது. குருதிவிடாயெழுந்த பெருந்தெய்வங்களாக்குகிறது” எனும் சகதேவனின் குரலில் மிகை துளியும் இல்லை. ஆணவத்தின் மூலங்கள் எவை, அது தோன்றும் கணம் எது என்பன போன்ற கேள்விகளுக்கு இதுகாறும் முறையான பதில்கள் இல்லை. என்றாலும், காட்டுத்தீயான ஆணவத்தைத் தூண்டும் சிறுபொறியை ஒவ்வொருவரும் சுமந்தே திரிகிறோம். அப்பொறியை வெளியேற்றும் வகையறியாமலும், அதன் தாக்குதலில் இருந்து மீளும் முறையறியாமலும் தவித்துக் கொண்டே இருக்கிறோம்.

சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடப்படும் மும்மலங்களில் முதன்மையானது ஆணவம். முதன்முதலாக சைவம்தான் எனக்கு ஆணவத்தைக் குறித்த தெளிவான அறிமுகத்தைக் கொடுத்தது. அச்சமய நெறியில் ஆணவத்தை இருளுக்குக் கூட ஒப்பிட்டுச் சொல்ல மாட்டார்கள். இருளைவிடக் கொடியது என்றே குறிப்பிடுவார்கள். “இருள் தன்னிடம் இருக்கும் பொருட்களை மறைத்துக் கொண்டு தன்னைக் காட்டிக்கொள்ளும். ஆணவம் தன்னையே காட்டிக் கொள்ளாது” என்பதே அச்சமயத்தின் பார்வை. அளவுகடந்த ஆணவம் கொண்டவன் நிச்சயம் அறம் தவறியவனாகவே இருப்பான் என்பதும் அச்சமயம் தரும் செய்தி.

இங்கு ஆணவத்தை அழிக்கவே முடியாதா எனும் கேள்வி வருவது இயல்பு. நிச்சயம் நம்மால் ஆணவத்தை ஒழித்துவிட முடியாது. வேண்டுமானால், ஆணவத்தை உருமாற்றலாம். கந்தபுராணத்தின் அடிப்படையே அதுதான். ஆணவத்தின் உருவமான சூரபன்மனை முருகன் அழிப்பதில்லை; மாறாக, உருமாற்றுகிறார். எதிர்மறையான ஆணவத்தை நேர்மறையானதாக மாற்றிக்கொள்ளப் பார்ப்பதே அதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி. கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தைக் கொண்டு சைவ சித்தாந்தத்தை நம்மால் எளிதில் விளங்கிக்கொள்ள இயலும். மும்மலங்களில் முதன்மையான ஆணவத்தின் குறியீடாகவே சூரபன்மன் சுட்டப்படுகிறான்.

சூரபன்மனைக் குறித்த குறிப்புகளில் திருமுருகாற்றுப்படை தரும் குறிப்பு முக்கியமானது. “இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை” எனச் சூரபன்மனை அது சுட்டுகிறது. ஆணவம் என்பது தனக்குள் நேர்மறை, எதிர்மறை எனும் கூறுகளைக் கொண்டே அமைந்திருக்கிறது என்பதாகவே இதை நான் விளங்கிக்கொள்கிறேன். அதிகாரத்தின் ருசிக்குப் பழகிப்போகும் சூரபன்மன தன் இயல்பிலிருந்து விலகுவதோடு தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் அவ்வாறே இருக்குமாறு தூண்டுகிறான். ‘உலகை வெல்லும் அதிகார’ ஆணவத்தால் ‘தான் யார்’ என்பதை மறந்து ‘அறத்தை’யே பயமுறுத்துகிறான். அதனால்தான் அவன் மகனான பானுகோபன் சொல்லும்போதும் அவன் கேட்பதில்லை.

சூரபன்மனை ஆணவம் எனக்கொண்டு அவனை முழுக்க எதிர்மறையானவன் எனக் கந்தபுராணம் சொல்லவில்லை. அவன் ’சிவனிடமே வரம் வாங்கியவன்’ எனும் நேர்மறையான தகவலும் சொல்லப்படுகிறது. சூரபன்மன் மாயைக்குப் பிறந்தவன். மாயை என்பதை நாம் புலனின்பங்களுக்கு ஆட்பட்ட வாழ்வாக்க் கொள்ளலாம். கொஞ்சம் நுட்பமாகப் போனால் ஆணவத்தின் மூலமாக நமது ’நான் எனும் அகந்தை’ இருப்பதைக் கண்டுகொள்ளலாம். முதலில் சூரபன்மனிடம் முருகன் ச்மாதானம் பேசிப்பார்க்கிறார். எவ்விதத் தூதும் எடுபடாமல் போகவே முருகன் நேரடியாகக் களத்தில் இறங்குகிறார்.

போர்க்களத்தில் கூட முருகன் சூரபன்மனிடம் சமாதானம் பேசிப்பார்க்கிறார். அவனோ கேட்கவே மறுக்கிறான். கடலாய், இருளாய் மாறி மாறி முருகனுடன் சண்டை போடுகிறான். ஒருகட்டத்தில் அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. என்றாலும், அவன் சரணடையத் தயாராவதில்லை. ‘ஆணவம் தன்னைக் காட்டிக் கொள்ளாது’ என்பது நுட்பமாக உணர்த்தப்படும் தருணம் அது. முருகனுக்கும் சூரனுக்கும் இடையே பதினெட்டு ஆண்டுகள் போர் நடப்பதாகக் கந்தபுராணம் சொல்கிறது. இராமாயண மகாபாரதப்போர்கள் மிகக்குறைந்த நாட்களே(இராமாயணம் – 18 மாதங்கள், மகாபாரதம் – 18 நாட்கள்) நடந்திருக்க கந்தபுராணப்போரின் வருடக்கணக்கு பிரமிப்பைத் தருகிறது. ஆணவத்தை எளிதில் உருமாற்றிவிட முடியாது என்றும் அது செய்தி சொல்கிறது.  

தன் படைபலத்தை முற்றிலும் இழந்து கடலுக்கடியில் தலைகீழ் மாமரமாக நிற்கும் சூரபன்மனை முருகனின் வேல் இரு துண்டுகளாக்குகிறது. ஒரு துண்டை மயிலாகவும், மற்றொரு துண்டை சேவலாகவும் மாற்றித் தன்னருகே வைத்துக் கொண்டதாகவும் கதை நீள்கிறது. சூரபன்மனுக்குள் ’பொய்அகந்தை’ மயிலும் ‘மெய்அறிவு’ச் சேவலும் இருந்திருக்கின்றன. மெய்அறிவைத் தூண்டி இருந்தால் சூரபன்மன் நிச்சயம் பொய்அகந்தைக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்க மாட்டான். நாம் காணும் புற உலகில் ஒவ்வொரு கணமும் நம்மை மயக்கித் திசை திருப்பும் மயிலாகவே இருக்கிறது. ‘நான் யார் தெரியுமா’ எனும் அகந்தை கொள்பவன் அதன்பிடிக்குள் தன்னைத் தொலைத்து விடுகிறான். ‘நான் யார்’ என மெய்யறிவு தெளிபவன் அதன்பிடிக்குள் சிக்காமல் நழுவிவிடுகிறான்.

’தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது’ அஜபாகனின் முதல்வரி சூரபன்மனைக் குறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. “வெற்று இச்சை வீரியத்தை கோடைகால நதிபோல மெலியச் செய்கிறது” எனும் இரண்டாவது வரி அவனுக்குள் இருந்த பக்தி அகந்தையால் மாசுறும் சூழலைச் சொல்வதாகப்படுகிறது. “பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” எனும் மூன்றாவது வரி அவனின் அகந்தையால் விளைந்த கொடூரங்களைச் சொல்வதாகப் படுகிறது. ”வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது” எனும் நான்காவதுவரி அவனை எதிர்கொள்ளப் புறப்பட்ட முருகனைச் சுட்டுவதாகவே படுகிறது. ”உதித்தனன் உலகம் உய்ய” எனும் கந்தபுராணப்பாடல் வரியும், ‘முதுமீன்’ எனும் அருணகிரிநாதர் சொல்லும் நம் கவனத்துக்குரியவை.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.