Friday, February 20, 2015

வெண்முகில் நகரம்-11-அன்னைகள் ஓய்வதில்லை

.


அன்புள்ள திரு.ஜெ வணக்கம். இது ரங்கம்மாள் சொன்னகதை ஆனால் கதை அல்ல வாழ்க்கை.

மகனுக்கு மகளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு தனியாக வாழும் தாயும் தந்தையும் உண்டாக்கும் வருவாயை மகனிடம் கொடுக்கவில்லை என்பதால் “எல்லா வற்றையும் மகளுக்கே கொடுக்கிறியா, உன்னை வெட்டி கொன்றுவிடுகின்றேன்” என்று மகன் குடிபோதையில் கத்திவிட்டு தனது வீட்டுக்குப்போய்விட்டான். தாய் கோவித்துக்கொண்டு சென்றுவிட்டது. வேலைக்கு சென்று வந்த தந்தை வீட்டுக்கு வந்துப்பார்த்தால் மனைவியைக்காணவில்லை. மனைவியின் செருப்பு மட்டும் வீட்டுக்கு முன்னால் கிடந்து உள்ளது. மனைவியைக்காணமல் வயதானவர் ஊரு ஊரா சொந்தகாரங்கவீட்டுக்கெல்லாம் சென்று தேடிபோயி கண்டுபிடித்தார். முதல்நாள் தொடங்கிய தேடல் மறுநாள் இரவுதான் முடிந்தது.  

மனைவியை கண்டுபிடித்ததும் கணவர் மனைவியிடம் சொன்னது. “நீ எங்க போனன்னு யாருகிட்ட கேட்பேன், உனது செருப்புக்கு சூடம்கொளத்தி வச்சி கேட்கலமுன்னு நினைச்சேன்.(இந்த இடத்தில் சிரிப்பு) அது எப்படி சொல்லும். ….….!(மனைவிபெயரை விளித்து) உன்னை கோச்சிகிட்டு போகவேண்டாமுன்னு சொல்லல.. எங்க போறேன்னு மட்டும் சொல்லிட்டுபோ! நான் எங்கண்ணு போயி தேடுவேன்”
மனைவி சொன்னது “உன்ன விட்டுட்டு நான் எங்க போயிடுவேன்…நீ ஏன் அலஞ்சே”.

முன்கதை
அந்த தம்பதியருக்கு கல்யாணம் ஆனபுதியதில், புதுமாப்பிள்ளை மிதப்பில், பகல்ல கள்ளு குடித்துவிட்டு குளத்துமேட்டுல பசங்களோட சேர்ந்து கச்சேரி வைக்கறது. காடுகழனிப் பாக்கறது  இல்ல,  மாடு கன்று மேய்கிறது இல்ல. ஒரே உல்லாசம்தான்.   மாடு கன்றுகளை மேய்த்து வயல்வெளிவேலைகளையும் கவனித்த அவருடைய அம்மா பொறுக்க முடியாமல் ஒருநாள் அவரை  மருமகள் முன்னாடி தெருவே வேடிக்கைப்பார்க்க விலக்கமாறல நாலு போடு போட்டு இருக்கு. தெருவே ஓடிவந்து கல்யாணம் ஆன பயள இப்படியா அடிப்பது என்று தடுக்க, மருமகள் வாயடைத்துபோக அவரு புது பொண்டாட்டியப் பார்த்து சிரித்து “அம்மா.அப்படிதான்..நான்தான் கொல்லைக்கு போறத்தையே மறந்துட்டேன். நாளைக்கு போறேன். நீ போயி வேலையபாரு” என்றவர் கீழ சிந்திய விலக்கமாத்து குச்சிய பொறுக்கி எடுத்துவந்து கொடுத்தாராம்.

//“மூத்தவர் அன்னையை நோக்கியபடி சிலகணங்கள் நின்றார்அவர்உடலில் ஓர் அசைவு எழுந்ததுஅவர் ஏதோ சொல்லப்போவதாகஎண்ணினேன்ஆனால் திரும்பி என்னை நோக்கி புன்னகைசெய்தார்என்றான் சகதேவன். “மூத்தவரேநீங்கள் அப்புன்னகையைபார்த்திருக்கவேண்டும்அத்தனை அழகிய புன்னகை.//

அவர் பெத்த பிள்ளைதான் அம்மாவை வெட்டிப்புடுவேன் என்று திட்டியது. வாழ்க்கைதான் எத்தனை முரண் அல்லது அன்பு பணிவு கட்டுப்பாடு என்னும் சங்கிலி அறுந்துவிழுவதால் உறவு எத்தனை தூரம் சிந்தி பொறுக்கி சேர்க்கவே முடியாத நிலையில்பாழ்பட்டுப்போகின்றது.
குந்தி பீமனை கோபத்தில் அடிக்கும்போதும், அவன் குந்தியின் பாதத்தில் மண்டியிட்டு நின்று இரஞ்சுவதும் எத்தனை பெரிய வாழ்க்கையின், கட்டுப்பாட்டின் அன்பின் அடிதளத்தில் எழும் கலாச்சர கோபுரம். நேற்றுவரை இருந்த அந்த கோபுரம் ஏன் இன்று விழுந்து விழுந்து உடைகின்றது. இந்த கோபுரத்தின் தூண்கள் எல்லாம் ஏன் உருவாகும்போதே செல்லரித்து போன கூடுகளாக உள்ளன.  இந்த கதையாகிவிட்ட வாழ்க்கைதான் இன்று நினைவுக்கு வந்தது.


நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.