Thursday, February 19, 2015

காமத்தீயின் முலைகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பதிமூன்று)

அன்பு ஜெயமோகன்,
         
விரும்பியோ விரும்பாமலோ மானுடக்காமத்தின் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. அதை யாராலும் அணைத்துவிட முடியாது என்றும் படுகிறது. காமம் என்பதை உடல் சார்ந்த இன்பங்கள் அனைத்துக்கும் பொதுச்சொல்லாகவே நான் கொள்கிறேன். அது யாராலும் அழித்துவிட முடியாத தீ. தோகை விரித்தாடும் மயில்போல மானுடக்காமம் நம்மை எளிதில் கவிழ்த்துவிடுகிறது. மண், பெண், பொன் எனும் வடிவங்களில் மானுடக்காமத்தை வகைப்படுத்தி அவற்றின்மீது அளவற்ற இச்சை கொள்ளாதீர் எனக் காலம்காலமாக நமக்கும் சொல்லப்பட்டும் வருகிறது. எனினும், நம்மால் அதன் வெப்பத்திலிருந்து வெளிவந்துவிட முடியவில்லை. குறிப்பாக பெண்மீதான காமத்திலிருந்து ஒருவனால் தப்பித்துவிடவே முடிவதில்லை. தவக்கோலத்தில் இருந்த விசுவாமித்திரன் கொலுசொலியில் தடுமாறியது ஏனோ எனக்கு இயல்பென்றே தோன்றுகிறது. காமத்திற்கு முன் அனைத்து மானுடரும் அற்பர்களோ?
         
அருணகிரிநாதரின் இளமையில் எரிந்துகொண்டிருந்த காமத்தீயின் உச்சத்தில்தான் அவர் தொழுநோய்க்கு ஆளானார். என்றாலும், காமத்திலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. தன்னை எடுத்துக் கொள் என அவர் அக்கா சொன்னபோதுதான் பெண் என்பவள் முலைகளும் யோனியும் மட்டுமன்று எனும் உண்மை அவருக்கு உறைத்திருக்கக் கூடும். அக்கணத்தில் அவர் தன் காமத்தைப் பக்தியாக உருமாற்றிக்கொள்ள முடிவெடுத்திருக்கலாம். காமத்தை யாராலும் வென்றுவிட முடியாது; வேண்டுமானால் உருமாற்றலாம். எனினும், உருமாற்றத்தின் அடியாழத்திலும் காமம் தகித்துக் கொண்டேதான் இருக்கும். “வேடிச்சி கொங்கை”, “பருத்த முலை” போன்ற அவரின் சொற்களில் இன்றும்கூட நாம் அவரின் காமத்தைக் கண்டுவிட முடியும். பக்தி என்பதைக் காமத்தின் உச்சமாகவே நான் பார்க்கிறேன். ஆண்டாள் தன் முலைகளைப் பறித்து வீச நினைக்கும் பாடல்களில் காமத்தின் அனலே கொழுந்து விட்டெரிகிறது. இளம்பெண் உருவில் இருப்பின் தன் காமத்தைத் தூண்டியபடியேதான் இருப்பார்கள் என்றல்லவா பேய்வடிவெடுக்க காரைக்கால் அம்மையார் முனைந்திருக்க வேண்டும். காமம் அணைக்கமுடியாத நெருப்புதான். யாராலும் அந்நெருப்பின் பிடியிலிருந்து தப்பிவிடவே முடியாது. வெறுப்பு, கோபம், பகை, ஆணவம், போர் போன்ற சொற்களெல்லாம் காமத்தின் சுடர்களே. அவற்றிலிருந்து நம்மால் முழுமையாக விடுபட்டுவிடவே முடியாது. வேண்டுமானால் அச்சுடர்களின் வெளிச்சத்தில் முழுமையாக மூழ்காதிருக்க முயற்சிக்கலாம்.
         
பக்தர்கள் பக்தியில் தங்கள் காமத்தைக் கரைக்க முயல, சித்தர்கள் ஞானத்தில் தங்கள் காமத்தைத் தொலைக்க முயன்றிருக்கின்றனர். பக்தியைத் தன் காமத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிடல் எனக்கொண்டால், சித்தியை தன்னிலிருக்கும் காமத்தைத் தானாகவே வெளியேற்ற முயல்வதாகச் சொல்லலாம். என்றாலும், சித்தர்களின் பாடல்களிலும் பெண்காமம் குறித்த பயம் பொங்கி வழிந்திருக்கிறது. காமத்தீயிலிருந்து எப்பாடுபட்டாவது விடுபட்டுவிட வேண்டும் எனும் தீவிர முனைப்பு அப்பாடல்களில் தெளிவாகவே தொனிக்கிறது. ”செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்”(பாம்பாட்டிச்சித்தர்), “கண்ணால் வெருட்டி முலையால் மடக்கி கடிதடத்து / புண்ணாங் குழியிடைத் தள்ளி” (பட்டினத்தார்), “பெண்ணாசையைக் கொண்டு பேணித் திரிந்தக்கால்”(இடைக்காட்டுச் சித்தர்), “மைவிழியாரைச் சாராதே”(கடுவெளிச்சித்தர்), “காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா / கண்விழிக்க வேகாவோ?”(அழுகணிச்சித்தர்), ”வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல்பை தனிலே / தட்டுண்டு நிற்கை தவிர்வதும் எக்காலம்”(பத்திரகிரியார்), ”பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால் / பேரின்ப முத்திவழி பேசுவேனே”(உரோம ரிஷி), “மோக விசாரத்தால் நீ மடியாதே”(கஞ்சமலைச் சித்தர்) போன்ற வரிகள் அதற்குத் தகுந்த சான்றுகளாக அமைகின்றன.

சீதையின் மீதான இராவணனின் காமமே ராமாயணமாகி இருக்கிறது. மாதவியின் மீதான கோவலனின் காமமே சிலப்பதிகாரமாகி இருக்கிறது. மணிமேகலையின் மீதான உதயகுமாரனின் காமமே மணிமேகலையாகி இருக்கிறது. காப்பியங்களில் எரிந்து கொண்டிருக்கும் காமத்தீயை உணர்ந்து கொள்ளும் தருணத்தில் நவீன வாழ்வோடு அவற்றைப் பொருத்தித் திகைக்கும் மாயமும் துவங்கிவிடுகிறது.சிறுவிதையிலிருந்து மலரும் புதுவேர்கள் போல காமத்தீயின் சுடர்கள் விரிந்து கொண்டே இருக்கின்றன. அதன் விரிதலில் பிரபஞ்சமே தகித்துக் கொண்டிருப்பதாகவும் படுகிறது. மாபெரும் இருட்டுக்குள் முகிழ்த்த காமத்தீயின் முதல் புள்ளியே பேரண்டத்துவக்கமானதோ?
         
”என் காமம் தனித்த காட்டு விலங்கு. அது ஒருபோதும் ஒருவருக்கும் கட்டுப்படாது”, “எதுவும் வந்து செல்வதே. வருவதற்காகப் பெரிதும் மகிழ்வதில்லை. செல்வதற்காகத் துயர்கொள்வதுமில்லை” என்றெல்லாம் பேசும் அர்ச்சுணனை நான் வியந்துபோய் பார்த்துக் கொண்டிருந்தேன். அர்ச்சுணனின் வார்த்தைகள் காட்டிய வெளிச்சத்துக்குள் நான் சிறைபட்டதாகவும் உணர்ந்தேன். சில கணங்களுக்குள்ளாகவே நான் திடுக்கிடுபடியாய் திரெளபதியின் பின்கழுத்தில் திடீரென அவன் முகம் புதைத்தான். அச்செயலின் வெளிச்சம் என்னை இயல்புக்கு மீட்டு வந்தது. பெண் எனும் தீயின் முன் ஆணால் அதிகம் நடித்துவிட முடியாது என்பதற்கு பதிமூன்றாம் அத்தியாயம் நல்ல சாட்சி.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.