இனிய ஜெயம்,
குழந்தைகளுடன் குதூகலத்துடன் நானும் காண்டீபம் காண அவர்கள் பின்னால் சென்றேன். இந்திரன் சந்திரன் என வித வித சக்திகள் பரிபாலித்த வில். அர்ஜுனன் அதை பூட்டி ஏந்துகையில் முழங்கை அளவே இருக்கிறது. இலக்கின் தேவைக்கு ஏற்ப அந்த வில்லை கையடக்கமாகவோ, விஸ்வரூபமாகவோ மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்ற நுட்பம் அபாரமான கற்பனை.
அபிமன்யுதான் முதலில் மாங்காயை பார்க்கறான். பிறர் எவரும் அதை சுவைக்க அனுமதி வழங்க மறுக்கிறான். அர்ஜுனனின் விழிகள் மட்டுமல்ல, பால்யத்தில் அர்ஜுனன் எவ்வாறு இருந்தானோ அதே அக ஆற்றலும் கொண்டிருக்கிறான் அபிமன்யு.
பைமீ நாகாஸ்திரத்தை கண்டு பயந்து ஓடுவது போல, அபிமன்யு தாமரையை விட்டு வெளியேறும் வண்டினைக் கண்டு பயந்து அலறுகிறான். சுபத்திரை எந்த வலையையும் வென்று மீளும் விழைவையே பெற்றெடுத்திருக்கிறேன் என்கிறாள். ஆனால் மகனெனஇங்கு இருப்பதோ பயம்.
அனைவரும் விஜயனின் கதையை கேட்க, விஜயனின் புதல்வர்கள் ராதேயனின் சாகச கதையை கேட்டு வளர்கிறார்கள். அனைவரும் தனக்கான துணைகளை கவர்ந்து வர சாகசங்கள் புரிந்து கொண்டிருக்க, ராதேயன் நண்பனுக்காக அந்த சாகசங்களை புரிகிறான். மூடன் மூடன் இனிய மூடன் . அந்த வரிகளை வாசிக்கையில் அங்க மன்னனை மனதால் ஆரத் தழுவிக் கொண்டேன்.
அபிமன்யு தனக்கான மாங்காய் அது அதை கடிக்காதே என சுஜயன் வசம் கோபம் கொள்ளுகையில், அர்ஜுனன் பால்யத்தில் மாலினி மீது கொள்ளும் கோபம் நினைவில் எழுந்தது. அர்ஜுனன் இன்னும் மாலினியை சந்திக்கவில்லை என்பது இனிய துயராக மனதை கனக்க வைக்கிறது.
அந்த மாங்காயை தராவிட்டால் உன்னைக் கொல்வேன் என்கிறான் அபிமன்யு. சுஜயன் நிச்சயம் பயந்துபோய் அதை திருப்பி அளித்திருக்க மாட்டான்.
ஆம் அருகமெய்மையின் விதை அவனுக்குள் முளைத்து விட்டது.
இனிய ஜெயம் ரைவத மலையில் நான் கண்டதெல்லாம் நான் வாழ விழைந்த வாழ்வே. அந்த உலகை எனக்கே எனக்கு அதில் என்றென்றும் நான் வாழ எனக்கு படைத்து அளித்தமைக்கு உங்கள் விரல்களுக்கு என் அன்பு முத்தங்கள்.