Tuesday, November 24, 2015

காண்டீபம் - 69 வேர்களும் கிளைகளும்

காண்டீபம் - 69

பாரதவர்ஷத்தின் மேல் ஒன்றை ஒன்று முட்டி மோதும் கிளைகளென ஷத்ரியர்கள். அடியில் ஒன்றோடொன்று பின்னி விரிந்திருக்கும் வேர்களென வணிகர்கள். வேர்தான் செல்வம். கிளைதான் வாள். அப்போது அந்த கிளை முட்டி வேர் விரிக்கும் பெருமரங்களை முளைத்து எழச்செய்யும் விதை எது?

அறம்தான் அது. புவியையே இணைக்கும் வல்லமைக் கொண்ட பெரும் விருட்சங்களை தன்னுள் கொண்டதுதான் அறம். மனிதன் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த விதையை விதைத்து விடுகிறான். அதுதான் வேர்பிடித்து மாபெரும் கிளைகளை விரித்து அணைத்தையும் இணைக்கிறது. பின்பு அது எளியவர்களுக்கு நிழல் ஆகிறது. நாடோடி படைக்கலம் இல்லாமல் பாரத வர்ஷத்தில் அலைய முடிகிறது.

வலியது வெல்லும் என்பது காட்டின் நியதி. எளியதும் தங்கி வாழும் என்பது அறத்தின் நியதி.

அர்ஜூனன் அறமூர்த்தி பிறந்த அயோத்திக்குத்தான் சென்று மீள்கிறான்.  அயோத்தியின் பழமையைப் பற்றி வணிகர்கள் கிண்டல் செய்கிறார்கள். பழைமை கொண்ட நகரம். ஆனால் அங்கு துடிப்புடன் உயிர்ப்புடன் இருக்கும் ஒன்றை, என்றும் புதியதாக இருக்கும் ஒன்றை, என்றும் அழியாத இருக்கும் ஒன்றை அர்ஜூனன் கண்டு உணர்ந்திருப்பான்.

உண்மையில் அருக நெறியை அணுகி அறியும்போதே அவனை பேரறம் என்றால் என்ன என்ற கேள்வி துளைத்து எடுத்திருக்கும். அதன்பின் அரிஷ்ட நேமியின் விண்ணேகலை நேரில் பார்த்தது அவன் ஒருவனே. அந்தக் கேள்வி மேலும் உச்சம் அடைந்திருக்கும். அங்கிருந்து அவன் அறமூர்த்தியான ஆன அயோத்தி ராகவ ராமனிடம் சென்று சேர்ந்திருப்பான். ஆனால் அந்த ராகவ ராமன் தன் அறதரிசனத்தை எங்கிருந்து பெற்றிருப்பான்? ஒற்றை அம்பில் ஏழு மரங்களை முறித்த சிலைதான் அந்த கல் மண்டபத்தில் இருக்கிறது. அதற்கும் அவன் அற தரிசனத்துக்கும் தொடர்பு இருக்கும் என்று ஊகிக்கிறேன்.

மேலும் அந்த உரையாடல்கள் அனைத்தும் ராகவ ராமனின் அற விடுதியின் கல் மண்டபத்தில்தான் நிகழ்கிறது. வணிக நெறி, வைதிக நெறி, அரச நெறி ஏன் பருவநிலைகள் அனைத்தும் சீர்குலைகின்றன. ஆனால் அறம் மட்டும் வழுவாது அந்த கல் மண்டபம் போலவே நிற்கிறது. உடைந்தாலும் அந்த இடிபாடிகளில் இருந்தே முளைக்கும் வல்லமையும் கொண்டது.

***

கொழுத்த வணிகர் தன் பொருட்களை விற்கும் சிறு வாய்ப்பைக் கூட தவற விடவில்லை. ஒன்று எடுத்துவருகிறேன் என்று சென்றவர் நான்கு மரவுரிகள் எடுத்துவந்து விற்க பார்க்கிறார். அவர் போய் திரும்பி வருவதற்குள் நான்கு மரவுரிக்கு நான்கு பணம் என்று கணக்கிட்டுருப்பார். அதை வாங்குபவரும் வணிகர்தானே!. ஒரு பணத்துக்கு இரு மரவுரி என்கிறார். ஏனெனில் ஒரு மரவுரிக்கு ஒரு பணம் தருகிறேன் என்று அர்ஜூனன் ஏற்கனவே விலையையும் நிர்ணயித்துவிட்டான். இரு வணிகர்கள் பேரம் பேசிக்கொள்வது இரு ஷத்ரியர்கள் சண்டையிடுவதுதான். இருவரும் கதாயுதத்தை ஏந்தியுள்ளார்கள். நாடோடி வெடித்து சிரிக்கிறான்.

***

திரெளபதி Vs சுபத்திரை. இவர்களின் உறவு எப்படி இருக்கப் போகிறது? இந்த உறவில் இளைய யாதவரும் அர்ஜூனனும் வந்து ஊடாடுவார்கள். இளைய யாதவரைக் கண்டு தன் மண தன்னேற்பில் உடல் நெளிகிறாள் திரெளபதி. ஆனால் அதன்பின் திரெளபதியின் இனிய தமையன் என்று கொள்ளலாம். இளைய  யாதவர் என்றால் இரு பெண்களும் தமையன் என்று முதல் உரிமை கொண்டாடுவார்கள். அர்ஜூனன் என்றால் இரு பெண்களும் கணவன் என்று முதல்  உரிமை கொண்டாடுவார்கள். அர்ஜூனனுக்கு திரெளபதியை விட சுபத்திரையைத்தான் பிடிக்கிறது. சுபத்திரையால் முதன் முதலாக சக்கரவர்த்தினி திரெளபதி இரண்டாம் இடத்திற்கு செல்கிறாள். தமையன் என்றாலும் சுபத்திரைக்குத்தான் இளைய யாதவர் மீது முதல் உரிமை. அங்கும் திரெளபதிக்கு இரண்டாம் இடம். சக்கரவர்த்தினி இனி கனலில் நிற்பாள்.

***

ஆட்டுப்பட்டியில் அரிஷ்டநேமிக்கு இரு வலம்புரி சங்குகளில் ஒன்றை தரும் இளைஞன் யார் என்று கேள்வி வெண்முரசு 62-ல் உள்ளது. அவன் கோமதன். அரிஷ்டநேமியின் மாணவன் என்று தெரிகிறது. இன்னொரு சங்கை அவன் ராஜமதியிடம் தருகிறான். அரிஷ்டனேமி, சுப்ரதீபம், கோமதன், ராஜமதி, இளைய யாதவர், அர்ஜூனன், என யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமேலே ஓர் உரையாடல் நிகழ்ந்திருக்கிறது.  ராஜமதி தன் பாதையை முடிவு செய்து கிளம்பும்போதே அவன் வெண்சங்குடன் அங்கு வந்து நிற்கிறான்.

ராஜா