பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் ஆனகதை என்பது பழமொழி. நாம் ஒன்றைச் செய்யப்போக அது அதற்கு மாறான ஒன்றாக மாறிவிடுவதை குறிக்கிறது. பெரும்பாலும் ஒரு நல்ல காரியம் செய்யப்போய் அது தவறாக மாறுவதை குறிக்க பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் உண்மையில் களிமண்ணில் பிள்ளையார் செய்வது எளிது. சிறிய வயதில் பிள்ளையார் பொம்மை செய்து விளையாடி இருக்கிறேன், உடல் பாகம் ஒரு பெரிய உருண்டை அதன் மேலே ஒரு சிறிய உருண்டையை தலையாக வைத்து ஒரு உருளையாக களிமன்னை உருட்டி தலையில் தும்பிக்கையென பொருத்திவிட்டால் அதை பிள்ளையார் என யாரைவேண்டுமானாலும் நம்ப வைத்துவிடலாம். ஆனால் களிமண்ணில் ஒரு குரங்கு பொம்மையை செய்வதுதான் கடினமானது. இப்போதும் என்னால் அதை செய்ய முடியாது என நினக்கிறேன். ஆக நான் பிள்ளையர் செய்யப்போக அது குரங்குபொம்மையாக மாறிவிட்டால் அதற்கு பெரிதாக கவலைப்பட மாட்டேன். உண்மையில் மகிழ்ச்சியடைவேன்.
கோழையாக இருக்கும் சுஜயனை வீரனாக மாற்றுவதற்காக அவன் அர்ச்சுனனின் வீரக்கதைகளை கேட்க மாலினியிடம் அனுப்பப்படுகிறான். அர்ச்சுனன் விசித்திர நாடுகளுக்கு செல்லும் பயணங்கள், அங்கு அவன் செய்யும் சாகசங்கள், காதல்கள் போன்றவை சுஜயனுக்கு சொல்லப்படுகிறது. அந்தக் கதைகளில் ஒன்றின் சிறிய பகுதிதான் அரிஷ்டநேமியின் கதை. ஆனால் அவன் மனம் முழுவதும் அதனால் ஈர்க்கப்படுகிறது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்
சுஜயன் தன் கோழைத்தனத்தை உணர்ந்தவனாக இருக்கிறான். அதனாலேயே அவன் வீர சாகஸங்களை கனவுகண்டுகொண்டு இருக்கிறான். அவனுடைய கோழைத்தனம் மற்றும் அதனால் கொள்ளும் பயங்களின் மேல் போர்த்திக் கொள்ளும் போர்வைதான் அவன் காணும் வீரசாகச கனவுகள். அர்ச்சுனனின் கதைகள் அவனுக்கு வீரத்தை புகட்டுகிறது அவன் பயங்களை போக்குகிறது. அதே நேரத்தில் அர்ச்சுனனின் அந்த சாகசங்களால் காதல்களால் அவன் நிறைவடையாமல் அவன் பயணங்கள் மேலும் மேலும் தொடர்வதைப் பார்க்கிறான். அதே நேரத்தில் அரிஷ்டநேமி நிறைந்து கற்பாறையென இறுகி நிற்பதை அறிகிறான். சுஜயனின் ஆழ்மனது வீரத்தைவிட அஞ்சாமையை கண்டு பிரமிக்கிறது. “அஞ்சுபவர்கள் கொல்கிறார்கள். அஞ்சாதவர்கள் இவ்வுலகிற்கு அன்பை மட்டுமே அளிக்கிறார்கள்” என்ற வரி அவன் இளமனதில் பதிந்துவிடுகிறது. முதலில் அர்ச்சுனனாக இருந்த அவனுடைய நாயகவடிவம், அரிஷ்டநேமியென மாறிவிடுகிறது.
இதற்கெல்லாம் நாம் சரியான விளக்கம் சொல்லிவிடமுடியும் என்று தோன்றவில்லை. ஒரே சூழலில் இருக்கும் இரு பிள்ளைகள் வெவ்வேறு குணங்களைக் கொள்வதும், அவர்கள் தம் வாழ்வின் நோக்கங்கள் வேறுபட்டு போவதையும் அவர்கள் முன்வினைப்பயன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
தண்டபாணி துரைவேல்