Wednesday, November 18, 2015

ஆம் என்னும் வார்த்தை



இன்றைய அத்தியாயத்தில் ஒரு வரி அப்படியே தூக்கி வாரிப் போட்டது. "அங்கு நிகழ்ந்த வேள்விக்கு வேதமாக பல்லாயிரம் ஆடுகளின் மன்றாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது." தரையில் நின்று பார்க்கும் அர்ஜுனனுக்கு அவை ஆடுகள். ஆனால் வெண்ணனின் மீது நின்று பார்க்கும் நேமி நாதருக்கு? அவை இம்மொத்த உயிர்த் தொகுப்பு அல்லவா!!

இந்த புடவியைப் படைத்து விளையாடும் அந்த பெருநெறியின் வேள்விககுளமே இப்புவி. இதில் வாழும் நாமனைவரும் ஆடுகள் தான். என்றோ வெட்டப்படுவோம் என்பதைத் தெரிந்த ஆடுகள். தனக்கு அளிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டாத ஆடுகள். வெட்டுப்படும் இடம் என்பது தெரிந்தும், தன் முன்னே பிறிதொரு ஆடு வெட்டுப்பட்டு வீழ்வது தெரிந்தும், தானாகவே வந்து தலையைக் கொடுக்கும் ஆடுகள். இவ்வேள்வியில் இருந்து வெளியேற வேண்டும் என ஒவ்வொரு கணமும் மன்றாடுபவர்கள் தானே நாமெல்லாம். இதில் மனிதரை மட்டும் சேர்ப்பது ஏன்? இவ்வுயிர் சுழற்சியில் உள்ள அனைத்துமே இத்தகையதோர் மன்றாட்டை வைப்பவை தானே.

அர்ஜுனன் இந்த ஆடுகளின் மட்டத்திலேயே, தரையிலேயே நிற்கிறான். மாறாக நேமியோ வெண்யானை மீது, உயரத்தில் நின்று ஒட்டுமொத்தத்தையும் பார்க்கிறார். மொத்த வட்டமும் அவருக்குத் தெரிகிறது. அனைத்து எல்லைகளும் தெரிகிறது. எனினும் குரூரமான இந்த சுழற்சிக்கு எதிர் விசையாக யானையின் பிளிறலாக ஒரு ஓசை. "முகில்கள் வெண்சுடர்களென ஆன வானில் நூற்றுக்கணக்கான தெய்வங்கள் அணிவகுத்திருப்பது போலவும் அவற்றை நோக்கி அறைகூவலென, மன்றாட்டென, ஆங்கார வினாவென, தீச்சொல் என அக்குரல் எழுவதாகவும் அவனுக்கு தோன்றியது." என்று எழுதுகிறார் ஜெ. பின் தன் முடிகள் அனைத்தையும் இழந்து, திசையாடை அணிந்து, மொத்தத்தையும் உணரும் அவர் குருதி படிந்த தரையைத் தொட்டு  "ஆம், ஆம், ஆம்" என்று மட்டுமே சொல்கிறார். புடவியாடலின் குருதித் தன்மையை உணர்ந்த அவர் அதற்கு முற்றிலும் எதிர்த் திசையில் நடப்பது என முடிவெடுத்ததையே அந்த 'ஆம்' குறிக்கிறது. துவாரகையில் நுழைந்ததில் இருந்து அவர் மானுடரிடம் சொன்னது எல்லாமே 'ஆம்' என்ற அந்த ஒற்றை வார்த்தை தான். அப்போதெல்லாம் ஒரு வித தயக்கத்துடன் சொன்ன அவர் இப்போது தெளிவாக, மிகத் தெளிவாக அதே 'ஆம்' மை மும்முறைக் கூறுகிறார்.
 
 
அருணாச்சலம் மகராஜன்