Sunday, November 29, 2015

மாங்காய்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

காண்டீபம் நாவல் முழுவதும் அற்புதமான இடத்தில் வந்து முடிவடைந்ததைக்கண்டு மகிழ்கின்றேன். ஒரு நாவல் இப்படி முழுமையாக முடிவதை இப்போதுதான் உணர்கின்றேன். ஒவ்வொரு நாவலும் அதற்கான அதற்கான இடத்தில் சென்றுதான் தன்னை முழுமையாக்கிக்கொள்கிறது என்றாலும் காண்டீபம் தான் சொல்லவந்ததை சொல்லி முழுமை அடைவதை உணர்கின்றேன்.

அர்ஜுனனின் அக உலக பயணம், புறவுலகபயணம் என்று செல்லும் கதையில் அர்ஜுனன் நான்கு மனைவியரின் அகம் புறம் என்று நெய்துக்கொண்டு செல்கிறது கதை. கதையின் படி பெரும் நாவலாக விரியும் காண்டீபத்தில் வரும் சுபகை, சுஜயன் இருவரின் வாழ்க்கையும் ஒரு சிறுகதைபோல் பூத்து மலர்ந்து காண்டீபத்தை சிறுகதையாகவும் ஆக்கி செல்கிறது. காண்டீபத்தின் பெரும் நாவல் விரிவு அர்ஜுனன் என்றால் நாவலின் கனம் சுபகை, சுஜயனின் வாழ்க்கையால்தான். 

பெரும் பயத்தில் தொடங்கும் சுஜயனின் வாழ்க்கை, பயத்தை வென்ற இடத்தில் வந்து நிற்கும் இடத்தில் காண்டீபத்தை நாவல் என்பதை மறக்க வைக்கிறது. வாழ்க்கை வாழ்க்கை என்று அதிரவைக்கிறது.  கொலைய இரத்தம் வாள் என்று தொடங்கும் காண்டீபம் கொல்லாமையில் வந்து நிற்கும் இடத்தில் காண்டீபம் கதை இல்லை வாழ்க்கையின் இலக்கு என்று இழுத்துச்செல்கிறது. 

மண்ணுக்காக வாழ்க்கை என்று வாழந்து பின்  மண்ணைத்துறந்து பாலையில் அலைந்து இலக்கை அடையும் ரைவதகர் ஒரு புள்ளி. பெண்ணை கண்டு கனிந்து அவள் இறப்பில் கரைந்து உடலை சிதைத்து உருவழிந்து உய்யும் ரிஷபதேவர் ஒரு புள்ளி, மண்வேண்டாம், பெண்வேண்டாம் என்று தனித்து வாழ்ந்து, நாட்டுக்காக, உறவுக்காக என்று அணிமணி புனைந்து வெறுத்து அறுத்துக்கொண்டு போகும் அரிஷ்டநேமி ஒருபுள்ளி. மண் பெ(ஆ)ண் பொன் மூன்று பேராசைகளும் ஒரு புள்ளிபோல்தான் மனித அகத்தில் துளையிடுகிறது. அது உருவாக்கும் காட்டை பெரும்வெளியை அறுத்துச்செல்ல ரைவதகர். ரிஷபதேவர், அரிஷ்டநேமிப்போன்ற மாபெரும் மாவீரர்கள் பாடும்பாடு எத்தனைப்பெரியது! தலையறுக்கும் வீரனின் கதையைமட்டும் அல்ல தன்னையே அறுக்கும் மாவீரனின் கதையும் கொண்டது காண்டீபம். 

அர்ஜுனன் காண்டீபத்தால் அம்பெய்து கொய்த மாங்காயை சுஜயன் கடிக்கப்போகும்போது, அபிமன்யு கடிக்காதே என்பதும், சுருதகீர்த்தி அபிமன்யுவுக்கு பாதிப்போதும் என்றபோதும், அபிமன்யு முகம் சிவந்து “உன்னைக்கொல்வேன், அம்புவிட்டு உன் தலையை அறுப்பேன்” என்கின்றான். அர்ஜுனன் பதி என்று சொன்னபோதும் “எனக்கு முழுமாங்காய் இல்லையேல் நான் உன்னைக்கொல்வேன்” என்று சொல்கிறான். இந்த நிகழ்சிக்குள் சிக்கிக்கொள்ளும் அர்ஜுனன் சிலகணங்கள் இருவரையும் நோக்கிவிட்டு பெருமூச்சுவிட்டு ஆலயத்திற்கு செல்கிறான். மொத்த மகாபாரதமும் இதுதானோ? இதுவரை உலகம் வாழ்ந்த வாழ்க்கையும், வாழபோகும் வாழ்க்கையும் இதுதானோ? உள்ளம் வெண்முரசுக்கொட்டுகிறது.

வாழ்க்கை எத்தனை தெளிவாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதில் தோன்றும் அலைகளும் சுழிகளும் யார் உருவாக்குவது? யாரைத்தான் குற்றம் சொல்வது. கொல்வேன். அர்ஜுனனைக்கொல்வேன் என்று சொன்ன சுஜயன் கொல்லாமையைப்பற்றி பேசுவதும், நடையே பழகாத குழந்தை கொல்வேன் என்பதும் வாழ்க்கையின் முரண் அல்ல முரணும் வாழ்க்கையே என்று காட்டிச்செல்லும் நடனம்.

கதையை இந்த இடத்தில் முடிக்காமல் அல்லது விட்டுவிடாமல் இந்த மாங்காயை வீசிபிடித்து மைந்தர்கள் விளையாடும் காட்சியைக்காட்டி வாழ்க்கையின் விளையாட்டை ரசிக்கவைக்கின்றீர்கள், சிந்திக்க வைக்கின்றீர்கள். இதுதான் காண்டீபத்தின் நோக்கம். 

நாடு என்னும் மாங்காய் சுபகைப்போன்றவர்களுக்கு தெய்வத்திற்கு உரியது. அர்ஜுனன்போன்றவர்களுக்கு கண்டடையும் கண்களுக்கு உரியது, நான் என்று எழும் அபிமன்யுப்போன்றவர்களுக்கு வாளெடுத்து தலைகொய்ய செய்வது. சுஜயன்போன்றவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுக்க மனம் உருவாக்குவது. சுருதகீர்த்திப்போன்றவர்களுக்கு அது ஒரு உணவாகும்  பொருள்மட்டும்.

ஒரு மாம்பழம் எனது அப்பன் முருகனையே ஆண்டியாக்கும் என்றால் மானிடர்கள் என்ன ஆவர்கள்?

யாரும் மாங்காயிக்காக இங்கு வரவில்லை, ஆலயத்திற்கு செல்லவே வருகிறார்கள். போகும் வழியில் கண்டடையும் மாங்காய் ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொன்றாக செய்துக்கொண்டு செல்கிறது. எந்த மாங்காயின் நிமித்தம் தலைகள் அறுக்கப்படும்மோ அந்த மாங்காய் வெறும் விளையாட்டுப்பொருள் மட்டும்தானா? அல்லது ஒரு விளையாட்டுப்பொருளைத்தான் உலகம் இத்தனை பெரும் கொலைக்கு கர்த்தாவாகவும் ஆக்கிக்கொள்கிறதோ?

யுத்தமே விளையாட்டாய், விளையாட்டே யுத்தமாய் உலகை சமைக்கும் மாங்காய் மடையர்களால் வாரலாறுகள் வாழட்டும்.

நன்றி ஜெ அல்லது காண்டீப நாயகன் சுஜெயன்.  

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.