Tuesday, November 10, 2015

அந்த கூழாங்கல்

அன்புள்ள சௌந்தர்,

மனித மனதின் ஒரு முக்கியமான ஒரு குணாம்சத்தைத் தொட்டுள்ளீர்கள். அந்த கூழாங்கல், பழமையான நினைவுகள் என நாம் ஒவ்வொருவரும் தனிமையில் இருக்கையில் மூழ்க ஓர் நினைவோடையை வைத்துள்ளோம். ஆனால் அப்பொருட்கள் மூலம் நாம் சென்று சேரும் நினைவு வருத்தமும், வேதனையும், கசப்பும் நிறைந்த ஒன்றாக இருப்பினும், அந்நினைவு மூலம் நாம் மீட்டெடுத்து துய்ப்பது என்னவோ மகிழ்ச்சியையே. ஆம், வேதனையும், கசப்புகளும் நம் நினைவில் தங்க வல்லவை. அவை நிகழ்ந்து சில நாட்களில், ஏன் ஆண்டுகள் வரையிலும் கூட, அவற்றின் நினைவு வருத்தத்தையும், அதைத் தொடர்ந்த தனிமையையும், தன்னிரக்கத்தையும் நல்கும். 

வெண்முரசின் வரிகளில் அது தன் குருதியைத் தானே விரும்பிச் சுவைப்பது போலத் தான். ஆனால் காலங்கள் உருண்டோட இழத்தலின் நினைவுகள் நாம் இழந்ததை அடைந்திருந்த காலத்தின் இனிமையை பல்கிப் பெருக்கிக் காட்டும். ஆம் மனது அப்பொருட்கள் வழியே அசை போடுவது இழப்பதன் முன் இருந்த அந்த மகிழ்வான காலத்ததைத் தான். அந்த அசைபோடல் ஒரு பகற்கனவாக மாறாதிருப்பதும், அந்த அசைபோடலே ஓர் அகத்தூண்டலாக அமைந்து இழந்ததை மீண்டும் பெறுவதும் அவரவர் ஊழ்
.
அரிஷ்டநேமியுடன் வரும் அந்த கூழாங்கல் அவரின் கடந்த கால ஏக்கத்தை, வேதனையை நினைவுக்கு மீட்க உதவும் கருவி அல்ல. மாறாக அவர் அக்குகையில் அடைந்த அனுபவங்களின் தொகுப்பேயாகும். முக்கியமான முடிவெடுக்கும் தருணம் அக்கல் பெரும்பங்கு வகிக்கக் கூடும். Cast Away திரைப்டத்தின் மிஸ்டர். வில்சன் பாத்திரம் தான் நினைவுக்கு வருகிறது.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்