வெண்முரசின்
சிறப்புகளில் ஒன்று அதில் வரும் தகவல்கள். பெரும்பாலானவை ஜெவின் கற்பனை என்று
சொன்னாலும், அத்தகவல்களுக்கு என்று ஏதாவது ஒரு வரலாற்றுப் பின்புலமோ, தொல்லியல், சிற்பவியல்
தரவுகளோ நிச்சயம் இருக்கும். உதாரணத்திற்கு வெண்முரசில் விவரிக்கப்படும் தேர்களை
எடுத்துக் கொள்வோம். ஒற்றைக் குதிரை தேர் துவங்கி, பல குதிரை தேர்கள் வரை, மெதுவாகச்
செல்லும் மரச் சக்கரங்கள் பொருத்திய தேர் முதல் அதிக சப்தமின்றி, வேகமாகச்
செல்லும் துவாரகையின் புது முறையில் கட்டப்பட்ட நவீன தேர்கள் வரை விதவிதமான
தேர்கள் சொல்லப்பட்டுள்ளன. “அர்ஜுனன் தேரில் வந்தான்” என்பது போன்ற ஒற்றை வரியில் இல்லாமல்
அந்த தேரின் சக்கரங்கள், அவற்றை நிறுத்த உதவும் கட்டைகள், அவற்றைக் காப்பதற்காகவே
தேரின் பின் வரும் சக்கரக் காவலர்கள் என தரவுகள் பிரமிக்க வைக்கின்றன. என்னை
எப்போதுமே வியப்பில் ஆழ்த்துவது துவாரகையின் தேர்களில் பொருத்தப்பட்டிருக்கும்
அதிர்வு தாங்கும் சுருள் விற்கள். இந்த கற்பனை சற்று அதீதமோ என்று பலமுறை
யோசித்திருக்கிறேன். எங்கிருந்து இந்த அமைப்பிற்கான தூண்டுதலை ஜெ பெற்றிருக்கக்
கூடும் என்று பலமுறை எண்ணியிருக்கிறேன். அதன் பதில் சமீபத்திய இந்தோனேசிய தீவுகள்
தொடரில் கிடைத்தது. “மீண்டும் மீண்டும் வரும் தேர்கள் அனைத்திலும் அடியில் அதிர்வுதாங்கிகளான வில் அமைப்பு இருக்கிறது”.
நம் நாட்டிலும் சரி, இந்தோனேசியா
போன்ற இந்திய தொடர்புடைய நாடுகளிலும் சரி, கிடைக்கும் சிற்பங்கள், கோவில்கள்
எல்லாம் குறைந்த பட்சம் 5 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவையே. அப்படியென்றால்
மகாபாரதக் கதை நடந்த காலத்திற்கு இத்தரவுகளைக் கொண்டு சென்றது எழுத்தாளரின்
கற்பனையும் ஊகமும் சேர்ந்து நிகழ்த்திய அற்புதம். பெரும்பாலான சிற்பங்கள் ஏதேனும்
ஒரு மாதிரியை முன் வைத்தே செதுக்கப்பட்டிருக்கும். இந்த தேர்கள், மிருகங்கள்
மற்றும் மக்கள் போன்ற சிற்பங்கள் நிரப்பும் வகையிலான (fillers) சிற்பங்களாகவே இருக்கும். அப்படியெனில் அச்சிற்பங்கள் சிற்பியின்
மனதில் படிந்திருக்கும் பொதுவான வடிவத்தையே கொண்டிருக்கச் சாத்தியம் அதிகம். நம்
மனதில் படிந்திருக்கும் ஒரு பொருளின் பொது வடிவம் என்பது பல ஆண்டுகளாக
புழக்கத்தில் இருந்த ஒன்றாகவே இருக்க இயலும். மாற்றங்களின் சதவிகிதம் குறைவாக
இருந்த போன நூற்றாண்டுகளில் ஒரு பொது வடிவம் என்பது பல நூற்றாண்டுகள் கால
நினைவாகவே இருக்கச் சாத்தியம். அவ்வகையில் இவற்றை மகாபாரத காலத்துக்கு கொண்டு
சென்றதும் சரியான ஒன்றே. அப்படிப்பட்ட காலத்திலேயே அதிர்வு தாங்கும் (shock absorbers) அமைப்புகளை பயன்படுத்திய அறிவு ஓர் ஆச்சரியமெனில், அவை படைக்கப்பட்ட
சிற்பங்களில் இருந்து புனைவுக்கு கொண்டு வந்ததெல்லாம் அசாத்தியமே!!! அசத்துகிறீர்கள்
ஜெ.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்