இன்றைய அத்தியாயம் (காண்டீபம் 61) சுப்ரதீபத்தின் அத்தியாயம். மதங்க மொழி அறியாத நேமிநாதர் தன் உள்ளம் சொல்லும் மொழியாலேயே அதனுடன் உரையாடுகிறார். உண்மையில் துவாரகை வந்ததிலிருந்து அவர் அதிகமாக உரையாடியது சுப்ரதீபத்திடம் தான். மற்ற அனைவரிடமும் 'ஆம்', என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு சொற்களும் பேசவில்லை. நீங்கள் எல்லாம் சொல்கிறீர்கள், நான் செய்கிறேன் என்பது போன்றதொரு மனநிலையிலேயே இருக்கிறார்.
அவரை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க கிருஷ்ணன் நீத்தார் கடன் மற்றும் கொடி வழி என்ற இரண்டையுமே உபயோகிக்கிறான். ஏனென்றால் அவரிடம் உடலின் தேவையான, ஆதியுணர்ச்சியான காமத்தைப் பற்றிப் பேச இயலாது. அவரும் சுப்ரதீபத்தைப் போன்ற வெண்யானை தானே. அதைப் போன்றே மைந்தரின்றி விண்ணேகுபவர் தானே. அவரை மதம் கொள்ளச் செய்ய இயலுமா என்ன?
அவர் துவாரகை வரச் சம்மதித்ததே நீத்தார் கடன் செய்ய வேண்டும் என்பதைக் குறிப்புணர்த்திய காகத்தால் தான். எனினும் அதன் பொருட்டு தன் துறவை விட வேண்டுமா என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். எனவே தான் எதற்கும் 'ஆம்' என்ற ஒரே சொல். அவர் குழப்பத்தைத் தீர்ப்பதும் அல்லது கிருஷ்ணன் காட்டிய வழியில் அவரை நடக்க வைப்பதும் சுப்ரதீபத்தின் கையில்.
மிகச் சரியாக அதுவும் யோசித்து, ஒரு இடியின் ஓசையில் முடிவு செய்து தென் திசை நோக்கி நடையிடுகிறது. நீத்தோர் என்பவர் தென்புலத்தார் தானே. மேலும் சுப்ரதீபமே தென்னிலத்திலிருந்து வந்தது தானே. அதன் மேல் ஆரோகணிப்பது என்பது தென்புலத்தார் மீதூர்வது போலத் தானே. மேலும் அந்த தென்திசையில் தானே உணவுக்காக வந்த அத்துணை ஆடுகளம் பட்டியிடப்பட்டுள்ளன. ஆம்... அந்த தென்திசையே அரிஷ்டநேமியை நேமிநாதராக்கப் போகிறது. அதற்காகவே மண் நிகழ்ந்து துவாரகை வந்துள்ளது இந்த வெண்ணன்.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
மகராஜன் அருணாச்சலம்