பலராமரின் கோபம் நமக்கெல்லாம் அறிமுகமானதுதான். அவர் வெண்முரசில் தோன்றும் ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது ஒன்றுக்காக கோபப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவையெல்லாம் கோபத்தின் கணக்கில் வருமா என தெரிவதில்லை. ஏனென்றால் கோபப்படுவது அவர் சிந்திக்கும் முறையாக இருக்கிறது. சிந்தனையில் ஒரு தெளிவு வந்தவுடன் அவருக்கு கோபம் தனிந்துவிடுகிறது. அவர் சிந்திக்க ஆரம்பித்து கோபப்பட்டவுடன் கண்ணன் அவர் சிந்தனைக்கு ஒரு முடிவை வரவைத்து அவரின் கோபத்தை தணிக்கிறான். சிலர் இப்படி கோபத்தின் வழியாகவே தன் அனைத்து உணர்ச்சிகளையும் காண்பிப்பார்கள். அவர்கள் தன் பாசத்தை, நட்புணர்ச்சியை, துயரத்தை எல்லாம்கூட கோபத்தின் மூலம் காட்டுவதை நான் கண்டிருக்கிறேன். அந்தக் கோபப்பூச்சை சுரண்டிவிட்டு அவர்களின் உள்ளே பார்த்தால் ஒரு குழந்தை புன்னகைத்துக்கொண்டு இருக்கும். என் தந்தையின் குணம்கூட அதைப்போன்றதுதான்.
ஆனால் இம்முறை பலராமர் கொள்ளும் கோபம், அவர் சிந்தித்தபிறகு அடைந்தது. இம்முறை கண்ணன் அவரை சாந்தப்படுத்த முயலவில்லை. அவர் கோபத்தை தன் வாதத்தால், திட்டங்களால், எதிர்கொள்கிறான். பிறகு சாமர்த்தியமாக தன்னை ஒளித்துக்கொண்டு சத்தியபாமாவை எதிரில் நிறுத்தி அவரை திணறவைக்கிறான். அவர் செயலிழந்து நிற்பது அவரை மேலும் கோபம்கொள்ள வைக்கிறது. அது அவரை அர்ச்சுனனை கொல்ல ஆணையிடும் அளவுக்கு கொண்டு செல்கிறது.
ஆனால் அந்த அளவுக்கு அவர் கோபம்கொள்ள காரணமென்ன? சுபத்திரையின் நலனில் அவள் தனிப்பட்ட விருப்பத்தில் அவருக்கு அக்கறையில்லையா? பலராமரின் பலவீனம், எதிர்காலத்தை நோக்கும் திறன் குறைந்தவராக இருப்பது. மனிதர்கள் தங்களுக்கு பின் ஒளித்து வைத்திருக்கும் உண்மையுருவை அறியும் ஆர்வமற்றவராகவும் இருக்கிறார். மனிதர்கள் செய்யும் அரசியல் சூழ்ச்சிகள் திட்டங்கள் எதுவும் தெரியாதவர். அவரின் நேரான உள்ளம், பாரத நாடு முழுதும் அறிந்திருக்கும் குருவம்ச பிளவை அறியாதிருக்கிறது. அவருக்கு தெரிந்ததெல்லாம் துரியோதனன் அவரைப்போன்ற ஒரு பலசாலி, மிகச்சிறந்த கதைவீரன். சுபத்திரையும், உடல்பலமும் கதைப்போரில் திறனும் கொண்டவள். ஆகவே, சுபத்திரைக்கு இதைவிடப் பொருத்தமான மணமகன் யார் இருக்க முடியும் என அவரின் எளிய மனம் நினைக்கிறது. இந்தச் சரியான முடிவில் யாருக்கு என்ன மறுப்பு இருக்க முடியாது என்றும் கருதியிருப்பார். ஆகவே அவர் துரியோதனனுக்கு தன் சொல்லை அளித்துவிட்டிருக்கிறார். இப்போது அவர் சொல் நிறைவேற்றப்படாமல் போகப்போகிறது. அவரைப்போன்ற குணம் கொண்ட ஒருவருக்கு சொல் தவறுதல் மிகப் பெரிய இழுக்காகும். ஆகவே அர்ச்சுனன் சுபத்திரையை மணப்பது அவரால் ஒத்துக்கொள்ள முடியாததாகிறது. அதனால் அவர் கடும் கோபம் கொள்கிறார்.
கண்ணன் ஏன் பலராமருக்கு இந்த இக்கட்டு ஏற்படும் நிலையை தடுக்கவில்லை? பலராமர் துரியோதனனுக்கு சுபத்திரையை மணமுடிப்பதாக முதலில் வாக்களித்துவிட்டார். அதற்கு பின்னர் கண்ணன் பலராமரிடம் சென்று அவரிடம் அரசியல் நிலவரங்களை, சுபத்திரை மனநிலையை புரியவைத்து அவர் மனதை மாற்றியிருக்கலாம். ஆனால் அப்படி அவர் மனம் மாறிவிட்டால் அவர் துரியோதனனுக்கு அளித்த சொல்லை பிழைத்தவராக ஆகிவிடுவார். ஆகவே கண்ணன் வேண்டுமென்றே பலராமரை இந்தத் திருமணத்திற்கு எதிராக கோபமடைய வைக்கிறான். யாதவர்கள் அர்ச்சுனனையும் சுபத்திரையும் கொல்ல விரட்டும் நிலையை உருவாக்குகிறான். அதனால் இத்திருமணம் பலராமரை மீறி நடக்கிறது மற்றும் அர்ச்சுனன் பலராமரின் விருப்பத்துக்கு மாறாக சுபத்திரையை கவர்ந்து சென்றான் என நிகழ்வு அமைகிறது. இது பலராமரை சொல் பிழைத்தவர் என்ற நிலையிலிருந்து காக்கிறது. இல்லையென்றால் பலராமர், துரியோதனன் முன் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். கண்ணன் தன் தங்கைக்கு, அர்ச்சுனக்கு பாண்டவர்களுக்கு மட்டுகல்லாமல், தன் தமையனுக்கும் இந்த விஷயத்தில் நன்மையே செய்திருக்கிறான் என்று நான் கருதுகிறேன்.
தண்டபாணி துரைவேல்