Friday, November 13, 2015

தேரோட்டி -23



இனிய ஜெயம்,


தேரோட்டி இருபத்தி மூன்றாம் அத்யாத்தின் வர்ணனை, அர்ஜுனன் சுபத்ரை, நேமிநாதர் குழுவுடன் நானும் இணைந்து பயணித்தது போல ஒரு உணர்வை அளித்தது.

குறிப்பாக பிரியும் கணத்துக்கு சற்று முன் சுபத்ரை சொல்லும் வார்த்தை. ''நீங்கள் அர்ஜுனரை வெல்ல வேண்டும் .வெல்வீர்கள்''. சொல்லிவிட்டு திருப்பிப் பார்க்காமல் செல்கிறாள். மற்றொரு அழகிய நாடகத் தருணம். மனம் கவர்ந்த ஒரு பெண், அவள் பிரிகையில் சொல்லும் இறுதி சொல் என்பது ஒரு கட்டளை போல ஆணை இயக்கத் துவங்கிவிடும். அந்த ஆண் அவளை நினைத்தால் அந்த நினைவு இந்த சொல்லில் வந்துதான் முட்டி நிற்கும். அயோக்கிய சிகாமணி நீலனின் தங்கை அல்லவா அப்படித்தான் இருப்பாள்.

உண்மையில் நேமிநாதர் அர்ஜுனன் சுபத்திரை என மூவரும் முப்புரம் பிரியும் பொது மனம் பேதை போல கிழிந்து மூவர் பின்னும் ஓடியது. அது இயல்வதல்ல என தெளிந்து எவர் பின்னால் போவதென்று பேதலித்து நின்றுவிட்டது. [ஆழ் மனம் நேமிநாதர் பின்தான் நிற்கிறது]. இப்படி கூட ஒரு பிரிவை எழுத முடியுமா என்ன?

அடுத்த அத்யாத்தில்,  வெண்ணனின் வருகை. என்ன சொல்ல அதை குழந்தை போல ஏந்தி கோடி முத்தங்கள் கொண்டு மூழ்கடித்துவிட விட வேண்டும் போல வெறி எழுந்தது.

இணையற்ற சித்திரங்கள் இரண்டு. ஒன்று வெண்ணன் கண்ணன் மீது துத்திக்கை போட்டுதூங்கும் பேரழகு. இரண்டு  முதிய தாதி வசம் அது கொள்ளும் கோபம்.

தாதி ''மைந்தன் போல நினைத்து சினந்தேன்'' என்கிறாள்.

வெண்ணன் அவள் ஆடை குலைத்து அவள் இட முலை ஏந்தி மைந்தன் ஆகிறான்.  ஆம் மைந்தன் தீண்டாத முலைகள் கொண்ட அன்னை என்ன அன்னை?

இனிய ஜெயம் இன்றைய காலையை இனிதாக்கி விட்டீர்கள்.
 
கடலூர் சீனு