Friday, November 6, 2015

துறவு 3

எனில் பிரம்மச்சரியத்திலிருந்து இல்லறத்தில் ஈடுபடாமல் துறவு மேற்கொள்பவர்கள் நிலை என்ன?

விவேகானந்தரைப்போல் எண்ணிலா  ஞானிகள் கொண்ட தேசமல்லவா நம்முடையது?


மீனாம்பிகை

 *

நீங்கள் சொல்வது உண்மை. துறவுபூணும் ஒருவர் செய்யும் மகத்தான தியாகம் இது.  இக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று வெண்முரசு சொல்கிறது. 

//அரிஷ்டநேமி சொல்லுக்கென தத்தளிப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். இருகைகளாலும் தன் குழலை நீவி பின்னுக்கு சரித்தார், கண்களை மூடி சில கணங்களுக்குப் பிறகு நீள்மூச்சுடன் திறந்து “என்ன சொல்வதென்றே தெரியவில்லை இளையோனே. நான் கற்ற அனைத்து நூல்களையும் நீயும் கற்றிருக்கிறாய். நான் சென்ற தொலைவெல்லாம் சென்றவன் நீ. நீயே உரை. பிறப்பின் கணம் ஒருவனிடம் வந்து தொற்றிக்கொள்ளும் இந்த பவச்சுழல் சரடை அறுக்கவே கூடாதென்றா நீ சொல்வதற்குப் பொருள்? பிறந்ததனாலேயே வீடுபேறற்றவனாகிவிட வேண்டுமென்றா சொல்கிறாய்? ஒருவனின் ஊழ் பிறவியிலேயே முற்றிலும் வகுக்கப்படுமென்றால் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவும் உணர்வும் எதற்காக? அவ்விரண்டின் அடியில் அணையாது எரியும் மீட்புக்கான தவிப்பின் பொருளென்ன?”

இளைய யாதவர் முகத்தில் மெல்லிய துயர் ஒன்று படிந்தது. “இதற்கெல்லாம் இறுதி விடை என ஒன்றை என்னால் சொல்லிவிட முடியுமென்று நான் எண்ணவில்லை மூத்தவரே. ஒருவேளை இவற்றை இயற்றி ஆடி கலைத்து மீண்டும் இயற்றும் அப்பெரு நெறி கூட இதற்கு விடையளிக்க முடியாமல் இருக்கலாம். பிறந்திறந்து செல்லும் இச்சுருள் பாதையில் ஒரு கண்ணி அறுந்தால் நம்மால் எண்ணி முடிக்கப்படாத பல்லாயிரம் கண்ணிகள் எங்கெங்கோ அறுபட்டு துடிதுடிக்கச் செய்கிறோம். பல ஆயிரம் கோடி நுண்சமன்களால் ஆன இந்த ஆட்டத்தை எப்போதைக்குமாக குலைக்கிறோம். அதற்கான உரிமை மானுடனுக்கு இல்லை. ஆனால் அச்சமன் குலைவை நிகழ்த்தாமல் எவரும் தானிருக்கும் இடத்திலிருந்து ஒருகணமும் எழப்போவதுமில்லை.”

“இப்பெரிய வலையை சமைத்து இதை மீறும் துடிப்பை அதன் ஒவ்வொரு துளியிலும் அமைத்து இங்கு ஆடவிட்ட அது அலகிலாத விளையாட்டு கொண்டது. அது ஒன்றையே என்னால் சொல்ல முடியும். முடிவெடுக்கவேண்டியது தாங்கள்” என்றார் இளைய யாதவர். அதன் பின் இருவரும் உரையாடவில்லை.//

தண்டபாணி துரைவேல் 

*

*விடையில்லை என்பதை "இந்த கட்டத்தில் இல்லை" என்றுதானே கொள்ள முடியும்?

முழு முடிவாக கீதை சொல்லப்படும்போது (அதுவும் அவரால் தான் சொல்லப்படுகிறது!) எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லப்படும் என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன்.

ஏனெனில் இத்தனை தத்தளிப்புகளூடாக பயணித்து தானே அதன் முடிவுகளை எட்ட முடியும்?

மீனாம்பிகை