Tuesday, November 24, 2015

ஒரு காதல் காட்சி(காண்டீபம் 67-68) அர்ச்சுனனும் சுபத்திரையும் இணைந்து யாதவ வீரர்களிடமிருந்து தப்பிக்கும் காட்சி எந்த ஆங்கிலப்படங்களின் துரத்தும் காட்சிகளைவிடவும் மேலானதாக  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தேர் கூட ஜேம்ஸ்பாண்ட் பட கார்களைபோல் நுணுக்கம் வாய்ந்ததாக இருக்கிறது. இணையாக இழுக்கும் இரட்டைக் குதிரைகள், ஒன்றன் பின் ஒன்றாக இழுக்கும் வண்ணம் தேர் தன்னை   தகவமைத்துக்கொள்கிறது.


துரத்துபவர்களுக்கு சாமர்த்தியமாக  தடைகளை ஏற்படுத்திக்கொண்டே செல்லுதல். எதிரில் வரும் வீரர்களை சிதறடித்தல், சட்டென்று தேரை ஒடித்து ஒரு சந்துக்குள் திருப்பி விடுதல்,  படிக்கட்டுக்களில் ஏறி இறங்கி, மாளிகைச்சுவர்களில் இடித்து சேதப்படுத்திக்கொண்டு, வழியோர கடைகளை சிதறடித்துக்கொண்டு,  அடைசலான வெளிநகர குடியிருப்பில் புகுந்து தாவி, எதிர் வரும்  மக்கள்  சிதறியோட  என  ஒரு நீண்ட துரத்தல்காட்சி. படித்து முடித்த நமக்கே பெருமூச்சு வாங்குகிறது. போர்க்களமற்ற,  மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சிக்கலான இடத்தில் தனி ஒரு மனிதனாக பல யாதவ வீரர்களை அர்ச்சுனனன் வெல்லும்  இக்காட்சியை  ஒரு நுட்பமான  போர்க்காட்சி என்றும் சொல்லலாம். எப்போது என்ன நடக்கும் எப்படி தப்பிக்க போகிறார்கள் என நம்மை இருக்கை நுனியில் அமரவைக்கும் விறுவிறுப்பு காட்சியாகவும் இருக்கிறது.
     

ஆனால் நான் இந்தக் காட்சியை ஒரு காதல் காட்சியாகவே காண்கிறேன். மனதிற்கினியவருடன் சேர்ந்து செய்யும் ஒரு சாகசம் மிகவும் பரவசம் தரக்கூடியது. இந்நிகழ்வை அர்ச்சுனனும் சுபத்திரையும் எந்த அளவுக்கு அனுபவித்து மகிழ்ந்திருப்பார்கள் என என்னால் யூகிக்க முடிகிறது. அர்ச்சுனன் போரிடும் அழகை கடைக்கண்ணில் ரசிக்கும் சுபத்திரை. அவளிடம் அந்த பரபரப்பிலும் காமப்பேச்சு பேசும் அர்ச்சுனன் என அவர்கள் இருவருக்கும் இது ஒரு காதல் விளையாட்டாக மாறுகிறது. துரத்துபவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் அர்ச்சுனன்தான் சுபத்திரையை கவர்ந்து ஓடுகிறான் என்று. ஆனால் இந்தத் தப்பித்தலில் சுபத்திரையின் பங்கு அர்ச்சுனனுக்கு சற்றும் குறைந்ததல்ல.  அர்ச்சுனன் ஆயிரம் போர்களை கண்டாலும் இந்தளவுக்கு மகிழ்ச்சியான ஒரு போர் நிகழ்வை இனி அவன் அடைய முடியாது.  

இந்நிகழ்வு அவர்கள் தங்கள் காதலுக்கான ஒரு இனிய நினைவுப்பரிசாக அவர்கள் உள்ளத்தில் என்றும் தங்கி இருக்கும். இருவரும் சேர்ந்து துவாரகையை இவ்வாறூ சுற்றி தப்பித்து வெளிவருதல் ஒரு திருமண நிகழ்வு சடங்கு போல எனக்கு தெரிகிறது. துரத்தல் முடிந்து சாவடியில் ஓய்ந்து அமர்ந்து இருவரும் தன் வருங்காலம் நோக்கங்கள் குறித்து பேசிக்கொள்ளுதலில், புதுமணத் தம்பதிகள் முதல் கலவி முடிந்து காமம் வடிந்திருக்க, வெறூம் காதலுடன் மட்டும் பேசிக்கொள்ளும் மன நெகிழ்வு தென்படுகிறது. வெண்முரசில் கதாசிரியர் இதுவரை படைத்த  காதல் காட்சிகளில் மிகவும் இனிமையான ஒன்றாக இது விளங்குகிறது.
  

இல்லற வாழ்வுகூட குடும்பம் என்ற தேரை  காலம் என்ற பாதையில் நாம் ஓட்டிச்செல்வதுதான்.  அதில் சில சமயம் வசதிக்குறைவுகள், உறவுப் பகைகள்,  பெரிய நோய்கள், விபத்துகள், எதிர்பாரா பெருஞ்செலவுகள், வீண்பழிகள்,   என ஏதாவது ஒன்று திடீரென்று வழி மறித்து துரத்தக்கூடும். அவற்றிலிருந்து  ஒரு கணவனும் மனைவியும் இணைந்து போராடி தப்பித்துக்கொள்ளுதலே அவர்கள் இல்லற வாழ்வின் வெற்றியாகும். ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் புரிதலும், அக்கறையும், நேசமும், மதிப்பும் இந்தத் இல்லறத் தேர்ப்பயணத்தை,அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும்,  இனிமையாக ஆக்குகின்றன. அதற்கான சிறந்த உருவகமாக இன்றைய காட்சியை நாம் கொள்ளலாம்

தண்டபாணிதுரைவேல்