Tuesday, November 24, 2015

சக்கரவியூகம்

அர்ஜுனன்* சுபத்திரையின் மகன் அபிமன்யு வீழும் அந்த சக்ர வியூகத்தை ஜெ அவர்களின் திருமணத்திற்கு முன்னரே கொண்டு வந்திருக்கும் இந்த மாதிரியான  இடங்கள்தான் படைப்பூக்கத்தின் உச்சங்கள் என்று நினைக்கிறேன்.Advantage of Hindsight இருந்தபோதிலும் இது ஒரு அபாரமான கற்பனை.இந்த chase எனக்கு Die Another  Day என்ற ஒரு ஜேம்ஸ்  பாண்ட் படத்தில் ப்ரோஸ்நானும் ஹாலே பெரியும்   இடம் பெறும் ஒரு விறுவிறுப்பான chase ஐ நினைவூட்டியது.

    ஒரு நீண்ட நாள் சந்தேகம். சக்ர வியூகமும், பத்ம வியூகமும் ஒன்றுதானா (னே) ?

சுரேஷ் கோவை.
 
*
 
 
இல்லை
 
சக்கரவியூகம் வட்டச்சுழல்பாதை. உள்ளே போகும் பாதை மூடிக்கொண்டே வரும்
பத்மவியூகம் இதழ்களால் ஆனது. உள்ளே வண்டு போனதும் இதழ்கள் மூடும்
 
 
 
 
ஜெ 


*
 
 
நன்றி ஜெ.  அபிமன்யு சிறைப்படுவது சக்ரவியூகம்தானே. உங்களது பத்ம வியூகம் தவிர வேறு சில படைப்புகளிலும் அதை பத்ம வியூகம் என்று படித்திருக்கிறேனே.அனால் இது பற்றிய விவாதம் இப்போது உசிதமாகாதோ?
 
 
 


சுரேஷ் கோவை


*




ஆம்... எனக்கும் அந்த குழப்பம் உண்டு... அபிமன்யு மாட்டிக்கொண்டது சக்ரவியூகத்தில். அவனைக் கொன்றதற்காக பழி தீர்க்கச் செல்லும் அர்ஜுனன் எதிர்கொள்வது பத்ம வியூகம்.

ஜெ எழுதிய சிறுகதை பத்ம வியூகம் சுபத்ரையின் கண் வழியாக அபிமன்யுவின் மறுபிறப்பையும், அதிலும் அவனுக்கு தப்பிப்பதற்கான வழியினைச் சொல்லாமல் அவள் அன்னையாக எச்சரிக்கை செய்வதால் மீண்டும் அவனை அதே போன்ற சுழலில் ஆழ்த்துவதையும் சொல்லும் கதை. பல தளங்களுக்கு விரிந்து செல்லும் கதை அது. (அக்கதை வந்த சமயம் முள்ளிவாய்க்கால் படுகொலை... எந்த பிறவியிலும் மாற்ற இயலாத இறப்பினை விவரித்த அக்கதை அன்று தந்த சோர்வும், அம்மீட்பை அம்மக்களுக்கு அளிக்க இயலாத இயலாமையும் சேர்ந்து வாட்டியதும் நினைவுக்கு வருகிறது.) அதில் அபிமன்யு மாட்டிக் கொண்ட வியூகத்தைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்றே நினைவு. இருந்தும் மனம் அக்கதையால் அபிமன்யு பத்மவியூகத்தில் மாட்டிக்கொண்டு இறந்ததாகவே நினைத்துக் கொண்டது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
*
பத்மவியூகம் சக்கரவியூகம் இரண்டும் ஒன்றே. வடக்கத்தி பாடங்களில் அபிமன்யூ நுழைந்தது பத்ம வியூகம்தான். ஆனால் காகதீய சிற்பங்களில் பத்மவியூகம் சக்கரவியூகமாகவே செதுக்கப்பட்டுள்ளது. இரண்டும் எப்போதும் குழம்பியே உள்ளன. மகாபாரதத்திலும் இரு பெயர்கள் மட்டுமே உள்ளன. விளக்கத்தை நான் குட்டிக்கிருஷ்ண மாராரின் நூலிலேயெ பார்க்கிறேன். ஆகவே நடைமுறையில் இரண்டும் ஒன்றின் இரு வடிவங்கள் என எடுத்துக்கொள்வதே முறை. நான் சக்கரவியூகம் பொதுப்பெயர் பத்மவியூகம் அதனுள் உள்ள ஒரு தனிவடிவம் என பொருள்கொள்கிறேன். அந்த அர்த்ததிலேயே இங்கே கையாள்கிறேன். இங்கு குறிப்பிடுவதெல்லாம் அபிமன்யூ நுழைந்த வெளியேற முடியாத அந்த வியூகத்தைப்பற்றிமட்டுமே 
ஜெயமோகன்