:
ஒருவகையில் அந்த களிறு கண்ணன் மற்றும் அரிஷ்டநேமியின் மறு உருவம் தான் இல்லையா! இளமையில் ஆற்றுவதற்கு ஏராளம் இருந்த கிருஷ்ணனாக களிநடம் புரிந்து கொண்டேயிருக்கும் அது வளர வளர நேமிநாதராகவே உருமாற்றம் கொள்கிறது. அமைதியடைகிறது, அனைவரையும் வாழ்த்துகிறது, அனைத்து யானைகளிடத்தும் பெரு மதிப்பைப் பெற்றுக் கொள்கிறது. மதம் ஒழுகும் களிறும், பெற்று வாழும் பிடியும் வணங்கி நிற்கும் பேறு பெறுகிறது. அதற்கு யாரும் கட்டளை அளிப்பதுமில்லை, அதுவும் யாருக்கும் கட்டளையளிப்பதுமில்லை. தன்னுள் தான் ஊறிய நேமியாகவே அது ஆகிறது. அப்படி ஒரு விலங்கால் மாற்றம் கொள்ள இயலுமா? இளமையிலிருந்தே அது இந்த மாற்றத்துக்காகவே வாழ்கிறது. அத்தனை குறும்புகள் செய்தாலும், நான்கு கால்களிருந்தும் ஒரே கோடாகச் செல்லும் காலடிகளையே அது கொண்டிருந்த அது இவ்வாறு மாறாவிட்டால் தான் இயல்பு மீறலாகும். இளமையின் குறும்புகள் அனைத்துமே ஒரு வகை மீறலாகவே வெளிப்படுகின்றன. அடுக்கிய எதையும் உலைத்தல், மூடிய எக்கதவையும் உடைத்தல் என அது எப்போதுமே ஒரு வித தேடலுடனே தான் இருக்கிறது.
கிருஷ்ணன் முதன் முதலாக நேமி நாதரைக் காணும் போது அவர் அவனைத் தூக்கித் தன் தோழில் வைத்துக் கொள்வார். ஐராவதம் ஏறிய இந்திரனாக தன்னை உணர்வான் கிருஷ்ணன். இப்போது அதே கிருஷ்ணன் வெண்ணனாக நேமியைத் தூக்கப் போகிறான்!!!
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்