அர்ஜுனன் “வணிகரே, விவாதிக்கும் தோறும் கலங்குவதும் முதற்பார்வையில் தெளிந்திருப்பதும் ஆன ஒன்றே அறம் எனப்படும்” என்றான்.
ஜெ,
இந்த
ஒற்றை வரி அளிக்கும் தாவல்கள் அலை அலையாக தொடர்கின்றன, அத்தியாயத்தை
ஆரம்பிக்கும் பொழுது முதலில் சுபத்ரையும் அர்ஜுனனும் இந்த்ரபிரஸ்தம்
செல்லும் வழியில் இது நிகழ்கிறதோ என எண்ணினேன், பின்புதான் தெரிந்தது இது
அவர்கள் சென்று சேர்ந்து, அபிமன்யு பிறந்து வருடம் கழித்து அர்ஜுனன்
அயோத்தி சென்று திரும்பி வருகிற பொழுது நிகழ்கிறது என. அறத்தின்
மூர்த்தியான் பிறந்த மண்ணுக்கு இவன் இப்பொழுது சென்று வர என்ன காரணம்?
இந்த்ரபிரச்ததில் நிகழும் எது அவனை அறத்தை தேடி அனுப்பியது? வாலியின் வதம்
இன்றும் தொடரும் அறம் குறித்த சர்ச்சை அல்லவா?
இத்தனை
தெளிவாக கண் முன் இருந்தும் மனிதர்கள் மீண்டும் மீண்டும் அறம் குறித்து
பேசி பேசி அதனை மழுக்குகிறார்கள். மொத்த கம்யூனிசமும் ஒரு நூற்றாண்டாக
செய்தது அதைத்தானே? தருமனின் கல்வியும் திரௌபதியின் ஆங்காரமும் செய்யப்
போவதும் அதைதான் என அர்ஜுனன் உணர நேர்ந்திருக்கும் என நினைக்கிறேன், தப்ப
வழியின்றி அதற்கு நாமும் துணை நிற்க வேண்டி இருக்கும் என எண்ணி முன்பே போய்
ராகவனிடம் மன்னிப்பு கேட்கதான் போய் இருந்தானா? மீண்டும் இந்த்ரபிரஸ்த
அரண்மனை முற்றத்தில் கொற்றவையை பார்க்கும் பொழுது அர்ஜுனனனுக்கு
வியர்த்துக் கொள்வதன் காரணம் இதை எண்ணுவதன்றி வேறு என்ன இருக்கக் கூடும்?
முன்பு
பீஷ்மரிடம் கிருஷ்ணன் சொல்வான் இது பொன்னின் யுகம் என்று. அறத்தின்
யுகமல்ல என்று அதற்கு பொருளா? அறம் பழையதாகிவிட்டது என்று பொன்னை வாங்கி
விற்பவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுனன் சொல்வது அது கல்
போன்றது, ஆயரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்பது, நாம் நின்றும் இருந்தும்
பேசிக் கொண்டிருப்பது அதன் மேல்தான் என்பதே.
அறம்
இங்கு அனைத்து இடங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது. அருகே உள்ள
கைகளை அது எடுத்துக் கொள்கிறது என்று ஒரு வரி வருகிறது. கிருஷ்ணன் அவனை
எடுத்துக் கொண்டது போல ஆனாலும் அவன் இனி என்றும் அந்த அரண்மனையின்
பிரமாண்டத்தில் தன்னை ஒரு சிறு எறும்பாகவே உணர வேண்டி இருக்கும். (
முற்றத்தில் நுழைந்ததுமே சிற்றெறும்பு போல் ஆகிவிடும் உணர்வை அம்முறையும்
அர்ஜுனன் அடைந்தான்.)
வெண்முரசில் அவன் ஒரு யோகி
அவனுக்கு அங்கு நிகழ்வது அனைத்தும் தெரிந்து கொண்டே இருக்கிறது. கூடவே
அதிலிருந்து தப்பிக்க முடியாத கர்மம் அவனுடையது. அதையே பார்த்தன் கடைசியில்
ஒன்றாக்கி அவனை கர்ம யோகியாக்குகிறான்,அறத்தின் தரிசனத்தை தருவதன் வழியாக.
கர்மத்தின் நோக்கம் அறமாகும் பொழுதே அது கர்மயோகம் ஆகிறது.
ஏ வி மணிகண்டன்