இல்லறத்திற்குத் திரும்புங்கள் என்று கூறும் கிருஷ்ணனிடம் தன் தற்போதைய நிலையைக் கண்ட பிறகும் இல்லறத்திற்கு அழைப்பது நியாயமா என்று சொல்லிழந்து வினவுகிறார் அரிஷ்ட நேமி. துயர் தோய்ந்த முகத்தோடு, "இதற்கெல்லாம் இறுதி விடை என ஒன்றை என்னால் சொல்லிவிட முடியுமென்று நான் எண்ணவில்லை மூத்தவரே. ஒருவேளை இவற்றை இயற்றி ஆடி கலைத்து மீண்டும் இயற்றும் அப்பெரு நெறி கூட இதற்கு விடையளிக்க முடியாமல் இருக்கலாம். பிறந்திறந்து செல்லும் இச்சுருள் பாதையில் ஒரு கண்ணி அறுந்தால் நம்மால் எண்ணி முடிக்கப்படாத பல்லாயிரம் கண்ணிகள் எங்கெங்கோ அறுபட்டு துடிதுடிக்கச் செய்கிறோம். பல ஆயிரம் கோடி நுண்சமன்களால் ஆன இந்த ஆட்டத்தை எப்போதைக்குமாக குலைக்கிறோம். அதற்கான உரிமை மானுடனுக்கு இல்லை. ஆனால் அச்சமன் குலைவை நிகழ்த்தாமல் எவரும் தானிருக்கும் இடத்திலிருந்து ஒருகணமும் எழப்போவதுமில்லை." என்கிறான் கிருஷ்ணன்.
விடையில்லை என்று கிருஷ்ணன் சொல்லவில்லை. 'ஆனால் அச்சமன் குலைவை நிகழ்த்தாமல் எவரும் தானிருக்கும் இடத்திலிருந்து ஒருகணமும் எழப்போவதுமில்லை', என்றே சொல்கிறான். இவ்வார்த்தைகள் ஒரு பெரும் தரிசனம். பிரம்மச்சரியத்தில் இருந்து நேரடியாக துறவு நோக்கிச் செல்பவர்கள் விதி சமைப்பவர்கள், .இப்புடவி இயற்றிய பெரு நெறியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே தான் அவர்களால் சமன் குலைவை நிகழ்த்த முடிகிறது. அச்சமன் குலைவை ஏதோ ஒரு வகையில் அப்பெரு நெறியும் எதிர்பார்த்து அனுமதிக்கிறது.
இத்தகைய சமன் குலைவை நிகழ்த்தியவர்களாலேயே இப்புடவியின் பரிணாமம் வளர்கிறது. இந்த சமன் குலைவுக்கான அகத் தூண்டல் திட்டமிட்டு வருவதல்ல. தேடியலைபவர்களுள் எல்லாம் துறவியின் ஒரு துளி இருந்தாலும் அவர்கள் எல்லாருக்கும் துறவறம் பூணுதல் சாத்தியமல்ல. துறவின் எல்லை வரை கூடச் செல்லலாம், ஆனால் மீண்டு வருவதற்கான ஏதோ ஒரு தடம் அவர்களுள் இருக்கும்.அனைத்தையும் அறுப்பது என்பது சடுதியில் நிகழ்வது. ஆம், அது ஒரு 'சடுதி மாற்றம்', ரிஷபர் போல, ரைவதர் போல. அத்தகைய அகத் தூண்டலைப் பெற்ற ஒருவரை அச்சமன் குலைவை நிகழ்த்த அனுமதிக்கிறது அப்பெரு நெறி. ஒருவகையில் அதுவும் அதன் பெரும் ஆடலின் ஒரு சிறு அங்கமே.பரிணாம வாதத்திலும் இந்த சடுதி மாற்றத்திற்கு முக்கிய பங்குண்டு. இதை 'Mutation' என்பர்.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.