இனிய ஜெயம்,
நாகர் உலகத்தில் மாநாகங்கள் எழுவரை பலி கொள்ளும் சித்திரத்தைத் காட்டிலும், விடாயில் அது அளிக்கும் தவிப்பில் உயிர் இழக்கும் எளிய உயிர்களின் சித்திரம் உள்ளே மிக்க தொந்திரவு தருகிறது.
முன்பு ஒரு ஆவணம் கண்டேன். சீனாவை ஜப்பானியர் அடிமை செய்தபோது ஜப்பானிய ராணுவ வீரன் நான்கிங் என்ற இடத்தில் நடந்து கொண்ட முறை ஒன்றினை சீன தொண்டு கிழ முதியவர் ஒருவர் விவரிக்கிறார்.
ஒரு தாய் இதோ இந்த வீரனின் துப்பாக்கி வழியே மரணம் நெருங்கி விட்டது என அறிகிறாள். அதற்குள் தன் மகனுக்கு முலை அமுது அளித்து விட, ஆடை நெகிழ்துகிறாள். மதலை ஆவலுடன் வாய் திறக்க, அதன் சிமிழ் அதரங்களில் அமுதக் குமிழ் முத்துவதர்க்குள் அக் குழந்தையை நெற்றியில் சுடுகிறான். தாய் திகைத்து அலறுகிறாள். அவள் முகத்தில் நியாயமா என்ற கேள்வி. அக் கேள்வி மீது துப்பாக்கியால் சுடுகிறான்.
இது கூட்டம், பஞ்ச காலம், அனைவருக்குமான நீர், ஒழுங்கு இல்லையேல் அனைவரும் மடிவர் என ஆயிரம் புண்மைக்காரணம் இருக்கட்டுமே. விடாய் கொண்ட ஒரு உயிரின் சிரம் அறுத்தல். இது நீதி என உலகியற்றியோன் சொன்னாலும் அவன் கழுவேற்றப் படவேண்டியவனே சிரம் அறுக்கும் அச் செயல், எந்த நீதியை கொன்று அங்கு நிலை பெறுகிறது என்பதையே, அர்ஜுனன் நீலனின் வடிவில் காண்கிறான்.
அந்த அநீதியால் காக்கப்பட்ட குருதித்துளி கரைந்த நீரை அரிஷ்ட நேமி அருந்துகிறார்.
நட்பு சாத்யகி வழியே த்ரிஷ்த்யுத்தும்ணனை எப்படி உரம் ஏற்றுகிறது? ஒரே ஒரு குதிரை பந்தயம். அவ்வளவுதான் நண்பன் மீண்டு விட்டான்.
அழகு, சுபத்ரை வழியே அர்ஜுனனை எப்படி உரம் கொள்ள வைக்கிறது? தன் குதிரையைக் கொண்டு அர்ஜுனன் எதை துரத்துகிறான்? அல்லது எதிலிருந்து விலகி ஓடுகிறான்.
ஆற்றலை இழந்து நிற்கும் ஆண்மகனை ரசிக்கும் சுபத்ரை, அவனை மீண்டும் ஆற்றல் கொள்ள வைக்கிறாள்.அவன் மீண்டும் சத்ரியன் ஆகிறான். ஆம் இனி அவனால் [சுபத்ரைக்காகவும்]அந்த நீரை அருந்த முடியும், குற்றமற்றவர்களின் குருதி படிந்த நீர்.
கடலூர் சீனு