வெண்முரசில் இதுவரை தொன்மையான நகரங்கள், பல்வேறு நிலச்சூழல்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட விசித்திரமான நகரங்கள், துவாரகை போன்ற நவீன நகரங்கள் என பலவகையானவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால் இலக்கியங்களில் அரிதாக தென்படும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நகரம் வெண்முரசில் காட்சிப்படுத்தப்படுகிறது. அந்தக்கட்டுமானங்களை, பொறியாளர்கள், உழைப்பாளிகள் உழைப்பை, அக்கால அறிவியலுக்கேற்ப செயல்படும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுபவதை, நம் கண்ணெதிரே நடப்பதுபோன்று நுணுக்கமாக விவரிக்கப்படுகின்றன. இந்திரப்பிரச்த்தத்தை விஸ்வகர்மா கட்டினார்கள் என்று கூறுவார்கள். ஆனால் வெண்முரசில் அதைக்கட்டிக்கொண்டிருப்பது ஜெயமோகன் என்ற பெருந்தச்சன் ஆகும். அவர் திரௌபதி என்ற பேரரசியின் கனவு நகரமான இந்திரப்பிரஸ்தத்தை, வெண்முரசில் நனவாகிக்கொண்டிருக்கிறார்.
ஒருவேளை ஒவ்வொரு பெரு நகரங்களுக்கு பின்னாலும் ஒரு பேரரசியின் பெருங்கனவு இருக்கலாம். மற்ற உயிரினத்தில் கூட இது உண்மையாக இருப்பதைக் காண்கிறோம். ஒரு தேனியின் அளவுக்கு ஒரு தேன்கூடு ஒரு நகரம்தான். அது ஒரு ராணித்தேனியின் கனவு நகரம் அல்லவா அந்தத் தேன்கூடு? இயற்கை தரும் சூழலின் போதாமைகளை நிறைவு செய்ய உயிர்கள் தமக்கென ஒரு பூமியை உருவாக்கிக்கொள்கின்றன என்றுகூட சொல்லலாம். தேன்கூட்டைவிட மிகப்பெரிது கரையானின் புற்று. நம்முடைய அளவையும் கரையானின் அளவையும் ஒப்பிட்டால் நம்முடைய வானுரசும் கட்டிடங்களெல்லாம் மிகச்சிறிது என ஆகும். அதனுடைய அறிவையும் உடல் திறனையும் ஒப்பிட்டால் நாம் கட்டும் கட்டிடங்களுக்காக, நகரங்களுக்காக அவ்வளவு பெருமிதப்பட்டுக்கொள்ள மாட்டோம்.
ஆனால் அப்படிக் கட்டப்பட்ட புற்றுகளை பாம்புகள் அபகரித்துக்கொள்கின்றன. கரையான்கள் தன் புற்றை இழந்து வெளியேறிவிடுகின்றன. இப்போது அந்தப்புற்று பாம்புப்புற்று என பெயர் பெற்றுவிடுகிறது. இதைப்போல இந்திரப்பிரஸ்த்தமும் பின்னால் பாம்புக்கொடியுடைய துரியோதனனால் கவரப்படப்போகிறது. திரௌபதி தன் கணவர்களான பாண்டவர்களோடு அதைவிட்டு வெளியேறப்போகிறாள். அப்போது அது துரியோதனனின் நகரம் என கூறப்படும்.
தண்டபாணி துரைவேல்