துவாரகையில் அரிஷ்டநேமிக்கு மணவிழாவுக்கான ஆயத்தங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அர்ச்சுனனும் சுபத்திரையும் துவாரகையில் மட்டுமல்லாமல் தங்களுக்கு என வேறொரு தனியுலகிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அது காதலருக்கென்று கடவுள் படைத்தளிக்கும் ஒரு இணையுலகம்.
அங்கு காதலர் இருவர் மட்டுமே மனிதர்கள். இருவரும் முதிரா சிறுவர்களாக ஆக துள்ளி விளையாடுகிறார்கள். அங்கிருக்கும் மற்றவையெல்லாம் அவர்கள் விளையாட பயன்படும் பொருட்கள். அங்கு பசியில்லை தூக்கம் இல்லை மாறாக குறையா உற்சாகத்தால் நிறைந்திருக்கிறார்கள். அங்கு காலம் மிக மெதுவாக ஓடுகிறது. அங்கு அவர்கள் ஓடிப்பிடித்து, ஒளிந்து கண்டுபிடித்து விளையாடி வருகிறார்கள். அங்கு பார்வை வீச்சுகளே பெரும்பாலும் மொழியென ஆகிறது. மற்றபடி அவர்கள் வாயால் பேசுவதெற்கெல்லாம் பெரிதாக அர்த்தம் ஏதும் இருப்பதில்லை. அவை சீண்டி விளையாட மட்டுமே பயன்படுத்தப்படும்ஆக்குகிறது.
அத்தனைக் கூட்டத்தின் நடுவில் சுபத்திரை அர்ச்சுனனுக்கென ஒரு சிரிப்பு, அவனுக்கென ஒரு பார்வை என தனித்து தருகிறாள். அவளின் ஆடை அணிகலன்கள் அவன் காண்பதற்கென என்றே ஆகின்றன. அர்ச்சுனன் மனம் அவள் செய்கைகளால் ஈர்க்கப்படுகிறது. அர்ச்சுனன் ஒன்றும் பதின்பருவ இளைஞன் அல்ல. மேலும் அவன் பல பெண்களை அறிந்திருப்பவன். சுபத்திரையும் ஒன்றுமறியாப் பேதைப்பெண் இல்லை. மதி நுட்பம் நிறைந்தவள். ஆனால் காதல் அவர்களை சின்னஞ்சிறு அறியாச் சிறுவர்கள் எனச்செயல்பட வைக்கிறது. இவையெல்லாம் வெண்முரசில் ஓரிரு வரிகளில் கூறப்படுகிறது என்றாலும் அவர்கள் அடையும் அந்தச் சிலிர்ப்பை நாமும் தெளிவாக உணர முடிகிறது.
தண்டபாணி துரைவேல்
.