ஜெ
அபிமன்யூவின் கதாபாத்திரம்
அற்புதமாக வந்திருக்கிறது. அவன் ஒரு குழந்தைமேதையாகவே மகாபாரதத்திலே வருகிறான். அவன்
களத்திலே கொன்றழிக்கப்போகிறவர்கள் நிறையப்பேர். அவன் கௌரவர்களின் பிள்ளைகளை எல்லாம்
கொல்பவன். இன்றைக்கு சுஜயன் அவனுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான். ஒரு பேச்சுக்கு அவன்
சொல்கிறான், உன்னைக்கொல்வேன் என்று. கொல்லத்தான் போகிறான். அவன் ஒரு நெருப்புத்துளி.
தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
ஆனால் அவனைப் பெற்ற
அன்னை அவன் அகிம்சையால் விடுதலை அடைந்த நேமியைப்போல இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள்
என நீங்கள் எழுதியிருப்பதுதான் உண்மையான டிவிஸ்ட். தந்தை அகிம்சையில் கனிந்திருந்தபோது
அவன் பிறக்கிறான். அவனை அர்ஜுனன் இப்படி ஒரு வீரனாக ஆகவேண்டுமென நினைத்திருக்கவே மாட்டான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவைக் காணலாம். வாழ்க்கை அப்படியல்ல. அதற்குண்டான வழியில் அது
செல்கிறது. அதைத்தான் ஊழ் என்கிறார்கள்.
மகாபாரதமே ஊழின்
கதைதான். அபிமன்யூ மாட்டப்போகும் தாமரைவியூகத்தைப்பற்றி இப்போதே குறிப்பு வந்துவிட்டது.
வருத்தமும் நிறைவுமாக இந்த நாவலும் முடிகிறது
சாரங்கன்