ஆடைகள் , அணிகலன்கள் போட்டுக்கொள்வதால், நுட்பமான மொழிகளைக் கையாள்வதால், அறிவை கூர்மையாக்கி சிந்தித்து செயலாற்றுவதால் மனிதன் தன்னை விலங்கிலிருந்து வேறுபடுத்திக்கொள்கிறான் என்கிறோம். ஆனால் மனிதன் விலங்கிலிருந்து வேறுபட்டவன் என்பது தவறு. அவன் சற்று மேம்பட்ட விலங்கு என்பதுதான் சரி. உண்மையில் ஒரு விலங்கை ஆடை அணிகலன்கள், மொழி, சிந்தனை போன்றவற்றை போட்டு மூடி வைத்திருக்கிறோம். ஒருவன் தன் பசி, தாகம் போன்ற அடிப்படைத்தேவைக்கு தவிக்கும்போது, காமம் கோபம் துயரம் போன்ற உணர்ச்சிகளில் அதீதத்தை அடையும்போது அவன் ஆடைகள் அவிழ்ந்துவிழ அப்போது அவன் வெறும் விலங்குதான் என்ற உண்மை நம் கண்ணில் அறைகிறது. அப்போது அவன் கை கால் விரல்களில் நகங்கள் நீள்கின்றன, வாயில் கோரைப்பற்கள் தோன்றுகின்றன. தோல் தடித்து மென்மை இழக்கிறது. உடலெங்கும் முடிகள் தோன்றி சிலிர்த்து நிற்கின்றன. வால் ஒன்று உடலிலிருந்து வெளிப்பட்டு நீண்டு ஆணவத்துடன் ஆடுகிறது. கண்கள் அகன்று குருதிநிறம் கொள்கின்றன. எதிர்வரும் எவரையும் எதிரி எனக் கண்டு குரோதத்தோடு பாய்ந்து குதறக் காத்திருக்கிறது.
ஒருவன் தன்னுள் இருக்கும் அவ்விலங்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். அதற்கு அவன் மனதில் இருக்கும் இரண்டு உணர்வுகள் உதவுகின்றன. ஒன்று அவனுள் இருக்கும் அறவுணர்வு. அதை வளர்க்க அவன் சூழல் மற்றும் பண்பாடு பயன்படுகிறது. பண்பாட்டின் பலனாக வளரும் அற உணர்வைத்தான் நற்குடிபிறந்தவரின் சிறப்பாக சொல்லப்படுகிறது. அது எந்த அளவுக்கு வலுவாக உள்ளதோ அந்த அளவுக்கு அவனின் விலங்கு கட்டுக்குள் அவனால் வைத்திருக்க முடியும்.
மற்றொன்று பய உணர்வு. அது சட்டங்களை விதித்து அமலாக்கும் சமூக அமைப்பு அளிக்கும் தண்டனைகளின் மீதான பயம். வன்முறையிலான தண்டனை, ஊர் அவனை விலக்கி வைத்தல், பொருளியல் ரீதியாக அவனுக்கு இழப்பினை ஏற்படுத்துதல், பதவி, புகழ் போன்றவற்றை பாதிக்கும்படி செய்யுதல் என சமூகம் பலவகைகளில் அளிக்கும் தண்டனைகளின் மீதான பயத்தின் காரணமாக ஒருவன் தன்னுள் இருக்கும் விலங்கை அடக்கி வைத்திருத்தல் மற்றொன்று ஆகும்.
இதில் சிறந்தது அற உணர்வின் வழியாக அவ்விலங்கினை கட்டுப்படுத்துதல் ஆகும். ஆனால் பெரும்பாலானோர் சமூகத்தின் தண்டனைக்கு பயந்தே ஒழுங்கான வாழ்க்கை வாழ்கிறார்கள். யாருக்கும் தெரியவராதுபோய்விடும் அல்லது தனக்கு தண்டிக்கும் நிலையில் யாரும் இல்லை எனும்போது ஒரு சிறிய தூண்டலுக்கே அவனுள் இருக்கும் விலங்கு தன்னை சிலுப்பிக்கொண்டு எழுகிறது. மற்றவர்களுக்கு சேதத்தை விளைவிக்கிறது.
கூட்டம் என்பது ஒருவன் தன்னை எளிதாக ஒளித்துக்கொள்ளும் இடமாகும். கூட்டத்தில் ஓரிடத்தில் தோன்றும் விலங்குணர்ச்சி ஒரு தீவிர தொற்று நோய் போல விரைந்து பரவுகிறது. கூட்டத்தில் ஒருவ்னிலிருந்து வெளிவரும் விலங்கு இன்னொருவனின் விலங்கினை விரைந்து தட்டி எழுப்புகிறது. தனிப்பட்ட ஒருவனால் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள், அதே தனிப்பட்ட நபர்கள் குழுமி இருக்கும் கூட்டத்தால் கடைபிடிக்கமுடியவில்லை. தனிப்பட்டமுறையில் மனிதர்கள்தான் என்ற போதிலும் ஒரு கூட்டமாக மனிதர்கள் விலங்குகளைப்போல் நடந்துகொள்கின்றனர். ஒரு மனிதன் இன்னொருவனுக்கு தீங்கு விளைவிக்க மிகவும் தயங்குவான். ஆனால் ஒரு கூட்டத்தின் ஒருவனாக மற்றொரு மனிதனை மிதித்து துவைப்பான், கட்டிடங்களை தீக்கிறையாக்குவான், பெண்களை கீழ்மைப்படுத்துவான், பொய்யை உறத்துச் சொல்லுவான், அநீதியை அஞ்சாது செய்வான். தனிப்பட்ட ஒருவனின்
பொறுமையுணர்ச்சியைவிட ஒரு கூட்டத்தின் பொறுமையுணர்ச்சி மிகவும் குறைந்தது. தனிப்பட்ட ஒருவனின் குரூரத்தைவிட ஒரு கூட்டத்தின் குரூரம் மிகப்பெரிது. தனிப்பட்ட ஒருவனுக்கு இருக்கும் பணிவு, பரிவுணர்ச்சி, பொறை என எதுவும் ஒரு கூட்டத்துக்கு இல்லை. ஒரு மனிதர்கள் கும்பலை, மனிதர்களின் தோலைப்போர்த்திக்கொண்டிருக்கும் விலங்குகளின் மந்தை என்றுதான் கூற வேண்டும். அந்தக் கூட்டத்தை கையாள்பவன் வெறும் அச்ச உணர்வின் மூலம்தான் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
வெண்முரசில் சோலை நீரை பருகச்செல்லும் யாதவர்களின் கூட்டம் முதலில் நடந்துகொள்ளும் முறையும் அப்போது மிக அதிர்ச்சியூட்டும் வகையில் வீரர்களால் கட்டுபடுத்தப்படுவதும் காட்டப்படுகிறது. முதலில் காவலர் தலைவன் மேல் நமக்கு கசப்பு தோன்றினாலும், அவன் வேறு என்ன செய்திருக்கலாம் என நாம் எதையும் சொல்லமுடியாமல் போவது இன்னும் மனதை நோகடிக்கிறது. மக்களை ஒரு கூட்டமாக சேர்க்கும் எவரும் அக்கூட்டத்தின் விளவுகளுக்கு முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.
படை வீரர்களுக்கான பயிற்சியை பார்த்திருக்கிறீர்களா? அதில் அவர்கள் கட்டுப்பாட்டோடு இருப்பதற்கும், ஒருங்கிணைந்து பணிபுரிவதற்குமான பயிற்சியே பெரும்பங்கு வகிக்கிறது. அதை ஒப்புவைக்கும்போது போரிடுவதற்கான மற்றும் போர்க்கருவிகளை பயன்படுத்துவதற்கான பயிற்சியின் நேரம் குறைவுதான். பயிற்சியற்ற பெருங்கும்பலால், பெரும் அழிவுகளை உண்டாக்கும் கலவரத்தை மட்டுமே உருவாக்கமுடியும். ஒரு போர்த்தளபதி தன் எதிரி நாட்டு மக்களை பழிவாங்க நினைப்பானென்றால் தன் படையின் கட்டுப்பாட்டை சற்று தளர்த்தினால்போதும் வேறு எவ்வித கட்டளையும் தேவையில்லை. அந்தப் படை ஒரு கொடிய விலங்குகளின் நிரையென ஆகி பெரும் அழிவை அந்த நாட்டும் மக்களுக்கு விளைவித்துவிடும்.
காந்தி மனித கூட்டங்களின்மேல் மிகுந்த அவநம்பிக்கை கொண்டிருந்தார். சௌரி சௌரா சம்பவம் அவர் கொண்டிருந்த அவநம்பிக்கையை சரியென நிரூபித்தது.
விடுதலைப்போராட்டத்தை கும்பல்களின் போராட்டம் என்பதாக மாறிவிடாமல் இருக்ககவேண்டும் என்று முடிவு செய்கிறார். ஒவ்வொருவனும் தனியனாக போரட்டத்தில் ஈடுபடவேண்டும். கூட்டத்திலிருந்தாலும் தன்னை தனித்து உணர வேண்டும். அவன் தன் அறவுணர்வின் வழிப்படி நடக்கவேண்டுமேயல்லாமல் கூட்டத்தின் ஒருபகுதியாக தன்னை ஆக்கிக்கொள்ளக்கூடாது எனக் கூறுகிறார். மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்த மக்களுக்கு கட்டுப்பாடாக இருப்பதற்கான பயிற்சியை அளிக்கிறார். கூட்டம் செய்யும் கேடுகளுக்கு தானே பொறுப்பு எனவும் அதற்காக தான் அந்த தண்டனையை ஏற்றுக்கொள்வேன் என்பதை சொல்லிலும் செயலிலும் காட்டுகிறார். அத்தகைய தலைவரின் அல்லது கொள்கையின் வழிகாட்டுதல் இல்லாமல் கூடும் கூட்டம் எவ்வகையிலும் சமூகத்திற்கு நலன் பயக்காத ஒன்றக இருக்கும். அது பிறருக்கு மட்டுமல்ல தன் கூட்டத்தைச் சார்ந்தவருக்கும் பெரும் தீங்கை விளைவிப்பதாகவே இருக்கும்.
தண்டபாணி துரைவேல்